Thursday, 4 February 2021

சீனப் புத்தாண்டு வீட்டுக்குள்ளே!

இவ்வாண்டின் சீனப் புத்தாண்டு என்பது வீட்டுக்குள்ளே என்பது அரசாங்கம்  தெளிவு படுத்திவிட்டது!

உற்றார் உறவினர் குடும்பத்துடன் கோலாகலமாக வீட்டுக்குள்ளே கொண்டாட வேண்டியது தான்.  குறை சொல்லை ஒன்றுமில்லை. 

முதலில் நமது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும். அதை அலட்சியப்படுத்த முடியாது.

அரசாங்கம் விரைவில் கொண்டாட்டம் பற்றியான அறிவிப்புகளை வெளியிடலாம். இப்போதைக்கு மேலோட்டமான அறிவிப்பு இது.

நாட்டின் நலன் கருதி செய்யப்படுகின்ற ஏற்பாடுகளை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மாற்றுக் கருத்து ஏதுமில்லை.

ஒரு சில கருத்துக்களை நாமும் முன் வைக்கிறோம்.

சீனப் புத்தாண்டு என்பது சீனர்களின் புத்தாண்டு.  நாம் அறிவோம். அதற்கு இரண்டு நாள்கள் விடுமுறை.  சனி, ஞாயிறு வேறு. ஆக இன்னும் இரண்டு மூன்று நாள்கள் இழுத்துக் கொண்டு போகும். நீண்ட விடுமுறை என்று சொல்லலாம்.

இந்த நீண்ட விடுமுறையில் சீனர்கள் பொதுவாக வீட்டிலேயே அடைந்து கிடக்க மாட்டார்கள் என்பது நமக்குத் தெரிந்தது தான். ஆனால் அதை விட மற்ற இனத்தவர்கள் - சீனர் அல்லதோர் - வீட்டில் அடைந்து கிடப்பார்களா என்பதும் கேள்விக்குறியே!

இப்போது அரசாங்கம் மிகவும் கடுமையான, பெருந்தொற்றின் காலத்தில், சட்ட திட்டங்களைப் போட்டு வைத்திருக்கிறது. எல்லாம் சரி தான். ஆனால் விடுமுறை காலங்களில் சீனர் அல்லாதாரின்  கிராமத்தை நோக்கிய படையெடுப்பை, எப்படி சமாளிக்கப் போகிறது?

அதனால் இப்படியும் யோசிக்கலாம்.  சீனர் அல்லாதார் வெளி மாநிலங்களுக்குச் செல்லத் தடை,  வெளியூர்களுக்குச் செல்லத் தடை,  வெளி நகரங்களுக்குச் செல்லத் தடை - என்று இப்படியும் யோசிக்கலாமே!

இப்படி இவர்களின் நடமாட்டத்தைக்  குறைத்தாலே தொற்றின் வேகம் குறையுமே! அப்படித்தான் நான் நினைக்கிறேன்.

சீனர்கள் தங்களது புத்தாண்டை வீட்டுக்குள்ளே கொண்டாடட்டும்.  அதே போல சீனர் அல்லாதார் வீட்டுக்கு வெளியே நடமாட்டத்தைக் குறைக்கட்டும்.

தொற்றை ஒழிக்க எல்லாருமே ஒத்துழைக்க வேண்டும். இது அனைத்து மலேசியர்களின் பொறுப்பு.

நோயை இப்போது நாம் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் வீட்டுக் காவல் போல் காவலில் நாம் தான் இருந்து கொண்டிருக்கிறோம்.

இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றால் அதற்கு நம் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.

கொஞ்சம் யோசிப்போமா!


டாக்டர் மகாதிர் தவறு செய்தது உண்டோ?

 டாக்டர் மகாதிர் தான் செய்த தவற்றை,  இப்போது மட்டுமல்ல, எப்போதுமே ஏற்றுக் கொண்டவர் அல்ல!

ஒரு காலக் கட்டத்தில் ம.இ.கா.வின்,  மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனம் படுபாதாளத்தில் தள்ளப்பட்டதற்கு இவரும் ஒரு முக்கியமான காரணம்.  இவர் தனது தவற்றை ஒப்புக் கொள்ளாததால் அனைத்துப் பழியும் அப்போதைய தேசியத் தலைவர் மீது பழி போட  நமக்கும் வசதியாக இருந்தது! காரணம் அவர் தானே அதன் தலைவராக இருந்தவர்!

டாக்டர் மகாதிர் இரண்டாவது முறை பிரதமராக இருந்த போது தீடீரென தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு பக்காத்தான் கட்சியினர் மட்டும் அல்ல, பொது மக்களையும் திகிலடைய செய்து விட்டார்! இப்படி ஒர்  எதிர்பாராத திருப்பம் நமது  நாட்டு அரசியலில் எப்போதுமே ஏற்பட்டதில்லை!

அன்றிலிருந்து இன்று வரை இந்நாட்டில் மக்களாட்சி போய் துக்ளக்கின் துக்கடா  ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது! எதுவுமே சரியாக இல்லை! எதையுமே இவர்களால் சரி செய்ய முடியவில்லை!

அப்படி இராஜினாமா செய்துவிட்டுப் போனவர் அந்த பிரதமர் பதவியை துணப் பிரதமரிடம் ஒப்படைத்திருக்கலாம். அல்லது ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டபடி அன்வார் இப்ராகிமிடமே ஒப்படைத்திருக்கலாம்.  அவர் இரண்டுமே செய்யவில்லை.  அவர் இருவரையுமே நம்பவில்லை! யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஒருவர் இடையிலே புகுந்து  பதவியைக் கடத்திக் கொண்டு போனது தான் மிச்சம்!

பிரதமர் பதவி என்றால் ஏதோ அவர் வைத்தது தான் சட்டம் என்கிற எண்ணத்திலிருந்து அவரால் விடுபட முடியவில்லை! தான் சொல்லுவதைத்  தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்கிற எண்ணத்திலேயே ஊறிப்போனவர்!

பக்கத்தான் ஆட்சி கவிழ்வதற்கு அவரே காரணம்! மக்கள் அனைவருமே அவர் தான் காரணம் என்கிற  ஒத்த கருத்த உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவரோ ஆட்சி கவிழ்வதற்கு தான் காரணம் அல்ல என்று ஒவ்வொருமுறையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்; மறுத்துக் கொண்டிருக்கிறார்!

ஆட்சி கவிழ்ந்ததற்கு யார் யாரையோ குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார். தன்னைத் தவிர மற்றவர்களை எல்லாம் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். குறைந்தபட்சம் துணைப் பிரதமருக்கு விட்டுக் கொடுத்திருந்தால் கூட மனம் ஆறியிருக்கும். அவராலும் நல்லதொரு ஆட்சியைக் கொண்டு வந்திருக்க முடியும். 

இப்போது ஆட்சி நடக்கிறதா நடக்கவில்லையா என்று கூட நமக்குத் தெரியவில்லை! ஏற்கனவே நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் எல்லாம் சேர்ந்து இப்போது ஆட்சி நடத்துகிறார்கள்!

அதன் பலனை இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!

டாக்டர் மகாதிர் தவறு செய்பவரா இல்லையா அவரைப் பொறுத்தவரை இல்லை! இல்லை! இல்லை! நம்மைப் பொறுத்தவரை ஆம்! ஆம்! ஆம்!

Wednesday, 3 February 2021

என்ன செய்வது?

 மாணவர்கள் தவறு செய்கிறார்கள். உண்மை தான். என்ன செய்வது?

இணையத்தில் நேரலையில் மாணவர்களுக்குப் பாடங்கள் நடுத்தும் போது ஒரு சில மாணவர்கள் ஆபாச காணொளிகளை ஒளிபரப்பி பாடங்கள் நடத்துவதற்கு இடையூறாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இளம் கன்று பயம் அறியாது என்பார்கள்.  இந்த மாணவர்களும் அப்படித்தான். பயம் அறிவதில்லை.

இப்போதெல்லாம் குழந்தைகளாக இருக்கும் போதே அவர்கள்  கைகளில் அனைத்துத்  தொடர்பு சாதனைங்களும்  கைகளுக்கு வந்து விடுகின்றன. அனைவரும் தங்களுக்குத் தேவை இல்லாதவற்றையும் சேர்த்தே கற்றுக் கொள்கின்றனர்.

பிள்ளைகளுக்குக் கைபேசிகளைக் கையில் கொடுத்துவிட்டால்  போதும் அது அவர்களது உலகம்! சேட்டைகள் அடங்கி விடுகின்றன. பெற்றோர்களுக்கு நிம்மதி! 

ஆனால் இந்தப் பழக்கம் தொடர்ந்து ஊக்குவிக்கப் படும் போது அது வேறு பல குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டி குழந்தைகளைத் தவறான வழிக்குக் கொண்டு சென்று விடுகின்றன.

ஆனாலும் இதனை ஊக்குவிக்க முடியாது. பெற்றோர்கள் தான் பிள்ளைகளின் நடவடிக்கைகளில்  அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இங்கும் கூட ஒரு பிரச்சனை உண்டு. பெற்றோர்களை விட பிள்ளைகள் கணினியில் இன்னும் அதிகம் தெரிந்தவர்களாக இருக்கின்றனர் என்பதையும் மறுக்க முடியாது!

எப்படி இருப்பினும் இது  எல்லா வகுப்புகளில் நடக்காது என்பது உறுதி. குறிப்பிட்ட ஆசிரியர் சொன்னது போல இந்த மாணவர்கள் முதலாம் படிவத்திற்குச் செல்லும் மாணவர்கள். இவர்களுக்கு ஆசிரியர்களைத் தெரியாது.  ஆசிரியர்களுக்கு மாணவர்களைத் தெரியாது. அதனால் தங்களைக் கண்டு பிடிக்க முடியாது என்பதும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

ஆனாலும் இது  போன்ற செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இவர்களை எப்படி சமாளிப்பது என்பது கல்வித்துறைக்குத் தெரியும் என்று பெற்றோர்கள் அலட்சியமாக இருந்து விட முடியாது. ஆனால் இப்போது நடக்கும் குற்றங்கள் எல்லாம் பாட நேரத்திற்குப் பின்னர் தான் நடக்கிறது என்பதையும் பெற்றோர்களுக்குத் தெரியும். ஆனால் செய்வதறியாது திகைக்கின்றனர்!

ஒவ்வொன்றுக்கும் நவீன சாதனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. புது புது கண்டுப்பிடிப்புக்கள் வெளியாகின்றன. இதற்கும் ஒரு முடிவு வரும் என்று நம்புவோம்.

அனைத்துக்கும் ஒரு முடிவுண்டு. இதுவும் அப்படித்தான்!