Wednesday 3 February 2021

என்ன செய்வது?

 மாணவர்கள் தவறு செய்கிறார்கள். உண்மை தான். என்ன செய்வது?

இணையத்தில் நேரலையில் மாணவர்களுக்குப் பாடங்கள் நடுத்தும் போது ஒரு சில மாணவர்கள் ஆபாச காணொளிகளை ஒளிபரப்பி பாடங்கள் நடத்துவதற்கு இடையூறாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இளம் கன்று பயம் அறியாது என்பார்கள்.  இந்த மாணவர்களும் அப்படித்தான். பயம் அறிவதில்லை.

இப்போதெல்லாம் குழந்தைகளாக இருக்கும் போதே அவர்கள்  கைகளில் அனைத்துத்  தொடர்பு சாதனைங்களும்  கைகளுக்கு வந்து விடுகின்றன. அனைவரும் தங்களுக்குத் தேவை இல்லாதவற்றையும் சேர்த்தே கற்றுக் கொள்கின்றனர்.

பிள்ளைகளுக்குக் கைபேசிகளைக் கையில் கொடுத்துவிட்டால்  போதும் அது அவர்களது உலகம்! சேட்டைகள் அடங்கி விடுகின்றன. பெற்றோர்களுக்கு நிம்மதி! 

ஆனால் இந்தப் பழக்கம் தொடர்ந்து ஊக்குவிக்கப் படும் போது அது வேறு பல குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டி குழந்தைகளைத் தவறான வழிக்குக் கொண்டு சென்று விடுகின்றன.

ஆனாலும் இதனை ஊக்குவிக்க முடியாது. பெற்றோர்கள் தான் பிள்ளைகளின் நடவடிக்கைகளில்  அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இங்கும் கூட ஒரு பிரச்சனை உண்டு. பெற்றோர்களை விட பிள்ளைகள் கணினியில் இன்னும் அதிகம் தெரிந்தவர்களாக இருக்கின்றனர் என்பதையும் மறுக்க முடியாது!

எப்படி இருப்பினும் இது  எல்லா வகுப்புகளில் நடக்காது என்பது உறுதி. குறிப்பிட்ட ஆசிரியர் சொன்னது போல இந்த மாணவர்கள் முதலாம் படிவத்திற்குச் செல்லும் மாணவர்கள். இவர்களுக்கு ஆசிரியர்களைத் தெரியாது.  ஆசிரியர்களுக்கு மாணவர்களைத் தெரியாது. அதனால் தங்களைக் கண்டு பிடிக்க முடியாது என்பதும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

ஆனாலும் இது  போன்ற செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இவர்களை எப்படி சமாளிப்பது என்பது கல்வித்துறைக்குத் தெரியும் என்று பெற்றோர்கள் அலட்சியமாக இருந்து விட முடியாது. ஆனால் இப்போது நடக்கும் குற்றங்கள் எல்லாம் பாட நேரத்திற்குப் பின்னர் தான் நடக்கிறது என்பதையும் பெற்றோர்களுக்குத் தெரியும். ஆனால் செய்வதறியாது திகைக்கின்றனர்!

ஒவ்வொன்றுக்கும் நவீன சாதனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. புது புது கண்டுப்பிடிப்புக்கள் வெளியாகின்றன. இதற்கும் ஒரு முடிவு வரும் என்று நம்புவோம்.

அனைத்துக்கும் ஒரு முடிவுண்டு. இதுவும் அப்படித்தான்!

No comments:

Post a Comment