Thursday 4 February 2021

டாக்டர் மகாதிர் தவறு செய்தது உண்டோ?

 டாக்டர் மகாதிர் தான் செய்த தவற்றை,  இப்போது மட்டுமல்ல, எப்போதுமே ஏற்றுக் கொண்டவர் அல்ல!

ஒரு காலக் கட்டத்தில் ம.இ.கா.வின்,  மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனம் படுபாதாளத்தில் தள்ளப்பட்டதற்கு இவரும் ஒரு முக்கியமான காரணம்.  இவர் தனது தவற்றை ஒப்புக் கொள்ளாததால் அனைத்துப் பழியும் அப்போதைய தேசியத் தலைவர் மீது பழி போட  நமக்கும் வசதியாக இருந்தது! காரணம் அவர் தானே அதன் தலைவராக இருந்தவர்!

டாக்டர் மகாதிர் இரண்டாவது முறை பிரதமராக இருந்த போது தீடீரென தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு பக்காத்தான் கட்சியினர் மட்டும் அல்ல, பொது மக்களையும் திகிலடைய செய்து விட்டார்! இப்படி ஒர்  எதிர்பாராத திருப்பம் நமது  நாட்டு அரசியலில் எப்போதுமே ஏற்பட்டதில்லை!

அன்றிலிருந்து இன்று வரை இந்நாட்டில் மக்களாட்சி போய் துக்ளக்கின் துக்கடா  ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது! எதுவுமே சரியாக இல்லை! எதையுமே இவர்களால் சரி செய்ய முடியவில்லை!

அப்படி இராஜினாமா செய்துவிட்டுப் போனவர் அந்த பிரதமர் பதவியை துணப் பிரதமரிடம் ஒப்படைத்திருக்கலாம். அல்லது ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டபடி அன்வார் இப்ராகிமிடமே ஒப்படைத்திருக்கலாம்.  அவர் இரண்டுமே செய்யவில்லை.  அவர் இருவரையுமே நம்பவில்லை! யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஒருவர் இடையிலே புகுந்து  பதவியைக் கடத்திக் கொண்டு போனது தான் மிச்சம்!

பிரதமர் பதவி என்றால் ஏதோ அவர் வைத்தது தான் சட்டம் என்கிற எண்ணத்திலிருந்து அவரால் விடுபட முடியவில்லை! தான் சொல்லுவதைத்  தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்கிற எண்ணத்திலேயே ஊறிப்போனவர்!

பக்கத்தான் ஆட்சி கவிழ்வதற்கு அவரே காரணம்! மக்கள் அனைவருமே அவர் தான் காரணம் என்கிற  ஒத்த கருத்த உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவரோ ஆட்சி கவிழ்வதற்கு தான் காரணம் அல்ல என்று ஒவ்வொருமுறையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்; மறுத்துக் கொண்டிருக்கிறார்!

ஆட்சி கவிழ்ந்ததற்கு யார் யாரையோ குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார். தன்னைத் தவிர மற்றவர்களை எல்லாம் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். குறைந்தபட்சம் துணைப் பிரதமருக்கு விட்டுக் கொடுத்திருந்தால் கூட மனம் ஆறியிருக்கும். அவராலும் நல்லதொரு ஆட்சியைக் கொண்டு வந்திருக்க முடியும். 

இப்போது ஆட்சி நடக்கிறதா நடக்கவில்லையா என்று கூட நமக்குத் தெரியவில்லை! ஏற்கனவே நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் எல்லாம் சேர்ந்து இப்போது ஆட்சி நடத்துகிறார்கள்!

அதன் பலனை இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!

டாக்டர் மகாதிர் தவறு செய்பவரா இல்லையா அவரைப் பொறுத்தவரை இல்லை! இல்லை! இல்லை! நம்மைப் பொறுத்தவரை ஆம்! ஆம்! ஆம்!

No comments:

Post a Comment