Wednesday, 5 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி .........! (48)

சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள்!    


பிரச்சனைகள் எங்கும் உண்டு. எல்லாப் பக்கமும் உண்டு. தினசரி வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகளை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். ஆனால் அத்தனை பிரச்சனைகளையும் எப்படி எப்படியோ சமாளித்துக் கொண்டிருக்கிறோம்! அதாவது எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும் நம்மால் சமாளிக்க முடியும் என்கிற துணிச்சல் நமக்கு உண்டு.

ஆனால் அதுவே சொந்தத் தொழில் என்று வரும் போது அதனை சமாளிப்பதில் சிரமப்படுகிறோம். அதாவது  நாமே ஒரு பயத்தை ஏற்படுத்திக் கொள்ளுகிறோம்!  அதற்குப் பதிலாக அதனை எளிதாக எடுத்துக் கொண்டு அதனை சமாளிக்க முடியும் என்கிற நம்பிக்கையோடு செயல்படுவதே அறிவுடமை.

நம்மால் சமாளிக்க முடியும். அந்த ஆற்றல் நம்மிடம் உண்டு. வாழ்க்கையில் எல்லாமே ஒரு சமாளிப்புத் தன்மையைக் கொண்டது தான். சமாளிப்பது ஒரு பிரச்சனைக்குத் தற்காலிகத் தீர்வைக் கொடுக்கும்.

தொழில் செய்கின்ற ஒரு சிலரை நான் அறிவேன்.  எவ்வளவோ பிரச்சனைகள் அவர்களுக்கு உண்டு. தொழிலில் பிரச்சனைகள் என்றாலே அது பொருளாதாரச் சிக்கல்கள்  தான்! அதுவும் குறிப்பாக கடன் பிரச்சனைகளாகத் தான் இருக்கும். ஆனால் இந்த ஒரு சிலர்  இருக்கிறார்களே இவர்கள் ஒன்றுமே ஆகாதது போல சிரித்துப் பேசி மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்!  இவர்கள் எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும் அவைகளை மிக எளிதாக சமாளித்து விடுவார்கள்! அவர்கள் சொல்லுவதெல்லாம் ஒன்று தான்:  "இதுவும் கடந்து போகும்" என்பது தான்!  இன்னும் ஒரு சிலர் என்ன தான் தலை போகிற காரியமாக இருந்தாலும்: Take It Easy!  என்று சொல்லிவிட்டு அடுத்த காரியத்தைப் பார்க்க போய்விடுவார்கள்! நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ  அன்றாட வாழ்க்கையில் இப்படித்தான் பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது!

ஒரு சில வியாபாரிகளைப் பார்க்கும் போது நமக்கே பாவமாக இருக்கும்! எந்நேரமும் உம்ம்...என்று இருப்பார்கள்! பிரச்சனை பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிறிய பிரச்சனை அதனை சமாளிக்கத் தெரியாத அப்பாவியாக இருப்பார்கள்!

பிரச்சனைகள் எல்லாம் ஒன்று தான். அவைகளை சமாளிக்கும் திறன் நமக்கு வேண்டும். சாதாரண நடைமுறை வாழ்க்கையில் சமாளிக்கும் திறன் நமக்கு உண்டு. ஆனால் வியாபாரம் என்று வரும் போது நாம் தடுமாறுகிறோம். அந்த தடுமாற்றம் தேவையற்ற ஒன்று.

சவாலே சமாளி!

Sunday, 2 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.....! (47)

இது சரியான தருணமா?


புதிய தொழில்கள் செய்வதற்கு இது ஏற்ற தருணமா என்பது கேட்க வேண்டிய கேள்வி தான்.

காரணம் எத்தனையோ தொழில்கள் மூடப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் புதியதொழில்கள் தொடங்குவதற்கு இது சரியான தருணம் அல்ல என்கிற முணுமுணுப்பு நமக்கும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

ஆனாலும்  புதிய புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.  அப்படி ஒன்றும் முழுமையாக நின்றுப்போய் விட வில்லை. அதிலும் குறிப்பாக சிறு சிறு முயற்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சிறிய தொழில்கள் ஆங்காங்கே தொடங்கப்பட்டு பலதொழில்கள் வெற்றிகரமாக நடந்து கொண்டு இருக்கின்றன. இதற்காக  நம்மின பெண்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். காரணம் வேலை இல்லை. குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். வேறு வழியில்லை. தங்களுக்கு என்ன தெரியுமோ அதைச் செய்கின்றனர். பெரும்பாலும் உணவு சார்ந்த வியாபாரங்கள்.  இதில் பெண்கள் பங்கு தான் அதிகம்.

இன்னொன்று இந்த தொற்று நோய் காலத்தில் ஓரளவு பணம் வைத்திருப்பவர்களைக் கவர்ந்த தொழில் என்றால் அது மளிகைக் கடைகள். எத்தனை பேரங்காடிகள் இருந்தாலும் நமக்கு அருகில் இருப்பவை இந்த சிறிய நடத்தர மளிகைக் கடைகள் தான். நாம் பெரும்பாலும் தூரமான இடங்களுக்குப் போக முடியாத சூழலில் இந்த கடைகள் தான் நமக்கு வாய்ப்பாக அமைகின்றன.

இன்னும் கணினி நிறுவனங்களும் ஆங்காங்கே தலைதூக்க ஆரம்பித்து விட்டன!  கையில் பணம் இருந்தால் எங்கே பணம் பார்க்க முடியுமோ அங்கே எல்லாம் பணம் உள்ளவர்கள் பாய ஆரம்பித்துவிட்டனர்!

ஆக ஏதோ ஒரு வகையில் ஒரு சில தொழில்கள் மீண்டும் தலை காட்டுகின்றன. தொழில்களை நிறுத்த முடியாது. எல்லாத் தொழில்களும் நாட்டில் மூடப்பட்டுக் கிடந்தால் அது நாட்டுக்கு நல்லதல்ல. சிறு நடத்தர தொழில்கள்  மீண்டும் வர வேண்டும். மீண்டும் தொடக்கபட வேண்டும்.

ஆனால் உணவகத் தொழில் தான் இன்னும் நம் இனத்தவருக்கு விரும்பி செய்கின்ற தொழிலாக இருக்கிறது. அதுவும் சரிதான்.  ஒரு பக்கம் ஆள் பற்றாக்குறை என்று சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கம் புதிதாக திறக்கப்படும் தொழில் என்றால் அது உணவகத் தொழில் தான்.

தொழில் செய்ய இது சரியான தருணமா என்று கேட்டால் "ஆம்!இல்லை!" என்று தான் சொல்ல வேண்டியுள்ளது!  எல்லாம் அவரவர் கையிருப்பைப் பொறுத்தது!

துணிந்தவனுக்கு துக்கமில்லை என்பார்கள். எல்லாமே சரியான தருணம் தான்!

Saturday, 1 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி........! (46)

 சிறு தொழில்களே பொருளாதார பலம்!

பொருளாதாரம் என்னும் போது நம்மை சீனர்களோடு ஒப்பிடுவது சரியாக வராது.

அவர்கள் பொருளாதாரத்தில் வளர்ந்துவிட்ட ஒரு சமூகம். அவர்கள் சிறிய தொழில், நடுத்தரத் தொழில் அடுத்து பெரும் தொழில்கள் அனைத்தும் சீனர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.   

நமது சமுதாயத்தைப் பொருத்தவரை நாம் ஆரம்பப் புள்ளியில் உள்ளவர்கள்.   இனி நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதைத்தான் யோசிக்க வேண்டும். எல்லாக் காலங்களிலும்  சம்பளம் வாங்கும் சமூகமாகவே நாம்  இருக்கப் போகிறாமா, அப்படியே சம்பளத்தை நம்பியே வாழ்கின்ற சமூகமாக இருக்கப்போகிறோமா என்பதை நாம் யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

நமது குடும்பங்களிலும் எங்கோ ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும்.  அது அத்தியாவசியம். இப்போதுள்ள இளைஞர்களுக்குக் கல்வி உண்டு. பல தகுதிகளைப் பெற்றிருக்கின்றனர். அவர்கள் அனுபவம் பெற சில நிறுவனங்களில் வேலை செய்து அனுபவம் பெற்றுக் கொள்ளலாம். அதன் பின்னர் சொந்த தொழிலுக்கு வரலாம். அவருடைய சொந்தங்கள் அவருக்கு உறுதுணையாக இருக்க  வேண்டும்.  "ஆ! ஊ!" என்று பயத்தைக் காட்டி ஒடுக்கிவிடக் கூடாது!

எனக்குத் தெரிந்த இளைஞர் ஒருவர். படித்தவர். ஒரு நிறுவனத்தில் விற்பனையாளராகச் சேர்ந்தார். பின்னர் அதன் நிறுவனத்தின் நிர்வாகியாக உயர்ந்தார். அதன் பின்னர் சொந்தமாகவே தொழிலைத் தொடங்கினார். இப்போது இரண்டு நிறுவனங்கள்     அவரது கைவசம். இரண்டும் வெற்றிகரமாக இயங்குகின்றன. இப்போது அவர் வெற்றிகரமான ஒரு தொழிலதிபர். அவரது பின்னணியோ அப்படி ஒன்றும் சொல்லும்படியாக இல்லை.  தோட்டப்பாட்டளியின் மகன் தான். முதலில் அவர் அனுபவத்தைத் தேடிக் கொண்டார். பின்னர் தானே களத்தில் இறங்கினார்.  எல்லாமே அவரது பணம் தான்.  யாருடைய உதவியையும் அவர் நாடவில்லை.

நமது வளர்ச்சி என்பது இப்படித்தான் அமைய வேண்டும். வேலையில் சேருவது அனுபவம் பெற என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  பெரியதொரு படிப்பைப் படித்து விட்டு வேலை செய்கிறோம் என்றால் அது அனுபவம் பெற என்பதாக இருக்க வேண்டும்.

சிறு தொழில்களில் நாம் அதிகமாகக் கால்பதிக்க வேண்டும்.  இப்போது நமது பெண்கள் சிறு சிறு தொழில்களில் நிறையவே கவனம் செலுத்துகின்றனர். அதுவே நல்ல வளர்ச்சி.  நமது சமூகத்தில் பெண்கள் முன் எடுப்பது நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்றே கருதுகிறேன். அது போல இளைஞர்களும் வியாபாரம் செய்ய முன் வர வேண்டும். உங்களுக்கு ஏற்ற தொழில்களை தேர்ந்தெடுங்கள். அதன் பின்னர் அதனை நீங்கள் விரிவுபடுத்தலாம்.

நாம் தொழில் செய்வது என்பது காலத்தின் கட்டாயம். பணம் இல்லாத சமூகம் ஓர் அடிமைச் சமூகம் என்பதை நினைவில் வையுங்கள்! பொருளாதாரம் அற்ற சமுதாயத்தை யார் வேண்டுமானாலும் கேலியும் கிண்டலும் செய்வான். பொறுத்துக் கொண்டு போக வேண்டியது தான்.

சிறிய தொழில்களில் அதிக ஈடுபாடு காட்டுங்கள். சிறிய தொழிலாக இருந்தாலும் அது மிகவும் சக்தி வாய்ந்த தொழில் என்பதை மறவாதீர்கள். 

நமது சமுதாயத்திற்குப் பொருளாதார பலம் மிகவும் முக்கியம். பொருளாதார பலம் நமக்குக் கௌரவத்தைக் கொடுக்கும். பெருந்தொழில்களில் ஈடுபடும் முன்னர் கீழ்மட்டத்தில் உள்ள தொழில்களை நம் வசமாக்குவோம். 

தொழில் தான் நம் வருங்காலம்!