Saturday 1 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி........! (46)

 சிறு தொழில்களே பொருளாதார பலம்!

பொருளாதாரம் என்னும் போது நம்மை சீனர்களோடு ஒப்பிடுவது சரியாக வராது.

அவர்கள் பொருளாதாரத்தில் வளர்ந்துவிட்ட ஒரு சமூகம். அவர்கள் சிறிய தொழில், நடுத்தரத் தொழில் அடுத்து பெரும் தொழில்கள் அனைத்தும் சீனர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.   

நமது சமுதாயத்தைப் பொருத்தவரை நாம் ஆரம்பப் புள்ளியில் உள்ளவர்கள்.   இனி நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதைத்தான் யோசிக்க வேண்டும். எல்லாக் காலங்களிலும்  சம்பளம் வாங்கும் சமூகமாகவே நாம்  இருக்கப் போகிறாமா, அப்படியே சம்பளத்தை நம்பியே வாழ்கின்ற சமூகமாக இருக்கப்போகிறோமா என்பதை நாம் யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

நமது குடும்பங்களிலும் எங்கோ ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும்.  அது அத்தியாவசியம். இப்போதுள்ள இளைஞர்களுக்குக் கல்வி உண்டு. பல தகுதிகளைப் பெற்றிருக்கின்றனர். அவர்கள் அனுபவம் பெற சில நிறுவனங்களில் வேலை செய்து அனுபவம் பெற்றுக் கொள்ளலாம். அதன் பின்னர் சொந்த தொழிலுக்கு வரலாம். அவருடைய சொந்தங்கள் அவருக்கு உறுதுணையாக இருக்க  வேண்டும்.  "ஆ! ஊ!" என்று பயத்தைக் காட்டி ஒடுக்கிவிடக் கூடாது!

எனக்குத் தெரிந்த இளைஞர் ஒருவர். படித்தவர். ஒரு நிறுவனத்தில் விற்பனையாளராகச் சேர்ந்தார். பின்னர் அதன் நிறுவனத்தின் நிர்வாகியாக உயர்ந்தார். அதன் பின்னர் சொந்தமாகவே தொழிலைத் தொடங்கினார். இப்போது இரண்டு நிறுவனங்கள்     அவரது கைவசம். இரண்டும் வெற்றிகரமாக இயங்குகின்றன. இப்போது அவர் வெற்றிகரமான ஒரு தொழிலதிபர். அவரது பின்னணியோ அப்படி ஒன்றும் சொல்லும்படியாக இல்லை.  தோட்டப்பாட்டளியின் மகன் தான். முதலில் அவர் அனுபவத்தைத் தேடிக் கொண்டார். பின்னர் தானே களத்தில் இறங்கினார்.  எல்லாமே அவரது பணம் தான்.  யாருடைய உதவியையும் அவர் நாடவில்லை.

நமது வளர்ச்சி என்பது இப்படித்தான் அமைய வேண்டும். வேலையில் சேருவது அனுபவம் பெற என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  பெரியதொரு படிப்பைப் படித்து விட்டு வேலை செய்கிறோம் என்றால் அது அனுபவம் பெற என்பதாக இருக்க வேண்டும்.

சிறு தொழில்களில் நாம் அதிகமாகக் கால்பதிக்க வேண்டும்.  இப்போது நமது பெண்கள் சிறு சிறு தொழில்களில் நிறையவே கவனம் செலுத்துகின்றனர். அதுவே நல்ல வளர்ச்சி.  நமது சமூகத்தில் பெண்கள் முன் எடுப்பது நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்றே கருதுகிறேன். அது போல இளைஞர்களும் வியாபாரம் செய்ய முன் வர வேண்டும். உங்களுக்கு ஏற்ற தொழில்களை தேர்ந்தெடுங்கள். அதன் பின்னர் அதனை நீங்கள் விரிவுபடுத்தலாம்.

நாம் தொழில் செய்வது என்பது காலத்தின் கட்டாயம். பணம் இல்லாத சமூகம் ஓர் அடிமைச் சமூகம் என்பதை நினைவில் வையுங்கள்! பொருளாதாரம் அற்ற சமுதாயத்தை யார் வேண்டுமானாலும் கேலியும் கிண்டலும் செய்வான். பொறுத்துக் கொண்டு போக வேண்டியது தான்.

சிறிய தொழில்களில் அதிக ஈடுபாடு காட்டுங்கள். சிறிய தொழிலாக இருந்தாலும் அது மிகவும் சக்தி வாய்ந்த தொழில் என்பதை மறவாதீர்கள். 

நமது சமுதாயத்திற்குப் பொருளாதார பலம் மிகவும் முக்கியம். பொருளாதார பலம் நமக்குக் கௌரவத்தைக் கொடுக்கும். பெருந்தொழில்களில் ஈடுபடும் முன்னர் கீழ்மட்டத்தில் உள்ள தொழில்களை நம் வசமாக்குவோம். 

தொழில் தான் நம் வருங்காலம்!

       

No comments:

Post a Comment