Showing posts with label கேள்வி-பதில் (17). Show all posts
Showing posts with label கேள்வி-பதில் (17). Show all posts

Thursday, 19 January 2023

அப்படியெல்லாம் நடக்காது, தம்பி!

 

நம் இந்திய இளைஞரிடையே உள்ள பிரச்சனை என்ன? 

சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்னும் ஆசை இப்போது நமது இளைஞரிடையே  அதிகரித்துக் கொண்டு வருவது நமக்கு மகிழ்ச்சியே! 

வரும்போதே ஏதோ பெரிதாகச் சாதித்துவிட வேண்டும் என்கிற ஆசை இருக்கலாம். தவறில்லை. எல்லாருமே சாதனைகள் புரிய வேண்டும் என்று தான் நினைக்கிறோம்

ஆனால் இவர்கள் நினைப்பு இன்னும் அதிகம்! தொழில் ஆரம்பித்து இரண்டு, மூன்று மாதங்களில் பணத்தை அள்ளிக் குவிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு வருவது தான் பேராபத்து!

அப்படியெல்லாம் நடக்க வழியில்லை தம்பி! அதனை நீ முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு மூன்று மாதங்களில் எதையும் சாதித்துவிட முடியாது.

பணத்தை வேண்டுமானால் வாரி இறைக்கலாம்.  பணம் உள்ளவர்களும் தொழில் செய்ய வருகிறார்கள். பணம் இல்லாதவர்களும் தொழில் செய்ய வருகிறார்கள். நோக்கம் என்னவோ ஒன்று தான். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டும் தான்.

ஆனால் இதற்கெல்லாம் மேல் நாம் முதலில் அனுபவத்தைப் பெற வேண்டும். அனுபவம் என்பது சும்மா வந்து விடாது. தொழில் செய்ய செய்யத் தான்  நமக்கு அனுபவம் கிடைக்கும். அனுபவம் இல்லாவிட்டாலும் நாம் செய்கின்ற தொழில் மூலம் அனுபவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் செய்கின்ற தொழில் மூலமே நமக்கு அனுபவம் கிடைத்துவிடும். 

நமது இளைஞர்கள் பலர் உடனடியாக இலாபம் வரவேண்டும் என்று எண்ணுகின்றனர். இலாபத்தை மறந்து விடுங்கள். நட்டம் ஏற்படாமல்  தொழில் செய்தாலே நீங்கள் சரியான பாதையில் செல்லுகிறீர்கள் என ஏற்றுக் கொள்ளலாம். அல்லது குறைவான இலாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் கூட அதுவும் சரியான பாதை தான்.

இலாபம் என்பதெல்லாம் உடனடியாக வருவதில்லை. படிப்படியாகத்தான், தொழில் வளர வளர, இலாபமும் அதிகரிக்கும். எந்தத் தொழிலும் உடனடியாக அள்ளிக்கொட்டி விடாது.

தொழில் செய்ய வேண்டும் என்று ஆர்வம் உள்ள இளைஞர்கள் பணமே பிரதானம் என்று நினைத்துக் கொண்டு வராதீர்கள். ஒரு சில இளைஞர்கள் "இரண்டு மூன்று மாதங்கள் வியாபாரம் செய்து பார்ப்போம்!  சரிப்படவில்லை என்றால்  மீண்டும் வேலைக்குப் போய்விடுவோம்" என்கிற எண்ணத்தில் வருகிறார்கள். இந்த மனப்பான்மை தொழிலுக்குச் சரிப்பட்டு வராது.  அரைமனதோடு வருபவர்கள் நம்பிக்கை இல்லாமல் வருகிறார்கள். வந்த வேகத்தில் போயும் விடுகிறார்கள்!

தொழில் என்பது சும்மா தட்டிவிட்டு  ஓடிவிடுவதல்ல! அது ஒரு நீண்ட கால பயணம்.  அது தொடர்ந்து பயணிக்க வேண்டும். பலதலைமுறைகள்  பயணிக்க வேண்டும். அதைத்தான் சீனர்கள் செய்கின்றனர். அதைத்தான் தமிழ் முஸ்லிம்கள் செய்கின்றனர். அதைத்தான் குஜாராத்தியர்கள் செய்கின்றனர். அதைத்தான் தமிழர்களும் செய்ய வேண்டும்.

தொழில் செய்ய வருபவர்கள் அப்படி ஒரு நீண்டகால திட்டத்தோடு வரவேண்டும். தொழிலில் நாம் வளர்ந்து வருகிறோம். தொடர்வோம்!

Wednesday, 18 May 2022

சிறு வியாபாரங்கள்


 பெரும் பெரும் வியாபாரங்கள் என்பது வேறு சிறு சிறு வியாபாரங்கள் என்பது வேறு.

ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்பது பணம் சம்பாதிப்பது மட்டும் தான். வேறு நோக்கம் இல்லை. 

அதற்காக சிறு வியாபாரங்களைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்த சிறு வியாபாரங்கள் தான் பிற்காலத்தில் பெரும் வியாபாரமாக  மாற்றம் கண்டன. சீனர், இந்தியர், மலாய் இனத்தவர் யாராக இருந்தாலும் வியாபாரத்தில்  ஒரே நாளில் எங்கிருந்தோ குதித்து வந்த விடவில்லை.

இன்று சீனர்கள் பெரும் வியாபாரங்களில் கொடிகட்டிப்பறக்கக்  காரணம் அன்று அவர்களது முன்னோர் சிறு வியாபாரங்களில் ஈடுபட்டு  தங்களது பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டவர்கள் தான். சீனர்கள் மட்டும் அல்ல நமது தமிழ் முஸ்லிம்கள், குஜாராத்தியர், மலபாரிகள் என்று யாரை எடுத்துக் கொண்டாலும் அந்த வழியில் வந்தவர்கள் தான்.

சிறு வியாபாரங்களில் நாம் ஈடுபடும் போது குறைந்தபட்சம் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையில் அவர்கள் அதனை பெருந்தொழிலாக மாற்றி அமைத்து விடுவார்கள். அதற்கு ஒரு தொடக்கம் தேவை. தொடக்கம் இருந்தால் தான்  அதன் நீட்சியும்  சிறப்பாக  அமையும்.

நமது சமுதாயத்தில் வியாபாரம் தொடங்குவதையே  ஏதோ பாவம் செய்வதைப் போன்ற ஒரு தோற்றத்தை நமது சுற்றுச்சூழல்  ஏற்படுத்திவிடுகிறது.வியாபாரத்தில் யார் யார் தோற்றுப் போனார்கள் என்கிற புள்ளிவிவரத்தை நமக்கு அடுக்குவார்கள்! வெற்றி பெற்றவர்களைப் பற்றி அவர்கள் வாய் திறக்கமாட்டார்கள்.  உண்மையில் தோல்வி அடைந்தவர்களை விட வெற்றி பெற்றவர்களே அதிகம்.

உங்களைச் சுற்றிப் பாருங்கள். உங்கள் நண்பர்கள் அனைவருமா  வியாபாரத்தில் தோல்வி அடைந்தவர்கள்? வெற்றி பெற்றவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்!  அப்படி ஒருவர் வெற்றி பெற்றால்  அதனை ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டம் என நா கூசாமல் பேசுவார்கள்.

அதனால் தான் நாம் சொல்ல வருவதெல்லாம் நிறைய பணம் போட்டு வியாபாராம் செய்யுங்கள் என்று நாம் சொல்ல வரவில்லை. இருக்கிற பணத்தையெல்லாம் கொண்டுவந்து கொட்டுங்கள் என்று நாம் சொல்லவில்லை. சிறிய அளவு முதலீட்டில் சிறியதாகவே வியாபாரத்தை ஆரம்பியுங்கள். அதனை வைத்தே படிப்படியாக வியாபாரத்தை விருத்தி செய்யுங்கள். 

வியாபாரம் செய்ய ஆரம்பித்த பிறகு வெற்றியைப் பற்றியே யோசியுங்கள்.  நட்டம் என்கிற ஒரு சொல் இருப்பதை மறந்துவிட்டு செயலாற்றுங்கள்.

வியாபாரம் செய்வோம்! வெற்றி பெறுவோம்!

Friday, 13 August 2021

ஜொகூர் சுல்தானுக்கு நன்றி!

 ஜொகூர் சுல்தானுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

ஜொகூர் மாநில பதினான்காம் சட்டசபை தொடக்க விழாவின் போது சுல்தான் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

"நடப்பிலுள்ள அரசாங்கத்தை கவிழ்க்கும் வேலையில் யாரேனும் ஈடுபட்டால் சட்டசபையைக் கலைத்துவிடத்  தயங்கமாட்டேன்!" என்கிற அவரின் எச்சரிக்கை, கவிழ்க்க முயற்சி செய்யும் எவருக்கும் ஒரு அபாய மணி என்பதைப் புரிந்து கொள்வார்கள்! 

சுல்தான் சொன்னது சரியா, தவறா என்பது பற்றி நமக்குக் கவலையில்லை. நாட்டில் நடக்கும் அநியாயங்களை அவர் பார்த்துக் கொண்டிருப்பது மட்டும் அல்ல "என்னால் அந்த அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது!" என்கிற - அவரது மாநிலத்தின் மீதான அந்த அக்கறை - வரவேற்கத்தக்கது! போற்றத்தக்கது!

இதோ ஒரு கேள்வி. சுல்தான் சட்டசபையைக் கலைப்பேன் என்று சொன்னாரே அவரை எதிர்த்து யாராவது கேள்வி கேட்க முடியுமா? எந்தக் கொம்பனாவது "சட்டம் இப்படிச் சொல்கிறது! சட்டம் அப்படிச்  சொல்கிறது!" என்று வியாக்கியானம் செய்து கொண்டிருக்க முடியுமா? யாருக்காவது அந்தத்  தைரியம் உண்டா?

இங்கு நாம் சட்டத்தைப் பற்றி பேசவில்லை. நாம் பேசுவதெல்லாம் நாடு நம் கண்முன்னே சீரழிகிறது. கொள்ளையடிக்கப்படுகிறது. தொற்று நோய் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அரசியல்வாதிகள் ஜாலியாக நாட்டை வலம் வருகின்றனர். அரசியல் பேசுகின்றனர். அரசியல்வாதிகள் விலை பேசப்படுகின்றனர். பல கோடிகள் கைமாறுகின்றன. ஓர் அற்புதமான வாழ்க்கை.

இங்கே மக்கள் வேலையில்லாமல் அவதிப்படுகின்றனர். கையில் காசு இல்லை. இனி எத்தனை நாளைக்கு இந்த  நிலை. எதாவது மாற்றம் வருமா அல்லது வராமலே போகுமா? இது எப்போது மாறும? அல்லது மாறவே மாறாதா?

இப்படி ஒரு சூழலில் நாடு இருந்ததில்லை. இன்றைய நிலை நமக்குப் புதிது. நாம் அனுபவிக்காதது. எந்த ஒரு முடிவும் தெரியாமல் இப்படி இழுத்துக் கொண்டே போனால் நாம் என்ன வாழ்வதா, சாவதா?

நமக்குத் தெரிந்ததெல்லாம் யாருக்கும் - நாடு இன்று இருக்கும் நிலை பார்த்து - அக்கறையில்லை. அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை. அரசியல்வாதிகளுக்குத்  தான் நாட்டு நிலைமை சாதகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது!

ஜொகூர் சுல்தான் அவர்களுக்கு நமது கோடான கோடி நன்றிகள்!

Monday, 31 May 2021

மீண்டும் ஊரடங்கு!

 மீண்டும் ஊரடங்கு வந்துவிட்டது!

எதிர்பார்த்தது தான்.  இப்படித்தான் இது வரும் போகும். அடுத்த பொதுத் தேர்தல் வரும் வரை கோவிட்-19 கட்டுப்பாட்டிற்குள்  வரப்போவதில்லை.

அரசியல்வாதிகள் எப்படி வேண்டுமானாலும் சட்டத்தை தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவார்கள்! இப்போது அந்த ஆட்டம் தான் நடந்து கொண்டிருக்கிறது!

மக்களின் கஷ்டத்தையோ, பிரச்சனையையோ அரசியல்வாதிகள் கண்டு கொள்வதாக இல்லை. அவர்கள் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும். கொள்ளை அடிக்க வேண்டும். பதவியில் இருக்கும் வரை எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்ட வேண்டும். சுரண்டலுக்குத் தான் முதலிடம்.  தாங்கள் என்ன பணியில் இருக்கிறோம் எனபதைக் கூட அவர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதில்லை.  பதவியில் உள்ளவர்களில் பலர் ஊரடங்குகளை மீறியிருக்கிறார்கள். ஏதோ விசாரணை என்கிற பெயரில் காவல்துறையினர் அவர்களைக் கூப்பிட்டு விசாரிக்கிறார்கள். எல்லாம் கண்துடைப்பு என்பது நமக்கும் தெரியும். அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.  அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது, என்ன செய்ய?

இங்கு நாம் முக்கியமாக ஒன்றை ஞாபகத்தில் வைக்க வேண்டும். குடும்பங்களில் வேலை இல்லையென்றால்  அவர்களால் என்ன செய்ய முடியும்?  அவர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு யார் சாப்பாடு போடுவது? ஒருவர் வேலை செய்தாலாவது ஏதோ சமாளிக்கலாம்.   வேலை இருந்தும் வேலைக்குப் போக முடியாமல் வீட்டில் அடைந்து கிடந்தால் அந்த குடும்பம் என்ன செய்யும்?  பிள்ளைகளுக்குத் தெரியுமா வீட்டு நிலைமை, நாட்டு நிலைமை? அவர்களுக்கு நாம் கொடுக்கும் பாடம் எடுபடுமா?

ஆனாலும் ஒன்றை நினைத்து நாம் பெருமிதம் அடையளாம்.  பலர் பல வழிகளில் உணவுகள் வழங்கி உதவி செய்கிறார்கள். அரசாங்கம் கண்களை மூடிக் கொண்டாலும் தனிப்பட்ட முறையில் நிறுவனங்கள், உணவகங்கள், தனிப்பட்ட மனிதர்கள் பல வழிகளில் மக்களுக்கு உதவிகள் செய்கின்றனர்.

உண்மையைச் சொன்னால் அரசியல்வாதிகளைத் தவிர நெஞ்சில் ஈரமுள்ள மனிதர்கள் நம்மிடையே நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் தான் இந்த உலகை வாழ வைக்கிறார்கள்.

பசிப்பவர்களுக்கு உணவுகள் கொடுப்பது தான் முதன்மையானது. மற்றவை எதுவாக இருந்தாலும் அதனைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

ஊரடங்கு என்பது சாதாரண  விஷயம் அல்ல. பல பேருடைய வாழ்க்கை அதில் அடங்கியிருக்கிறது. மேல் நாடுகளில் பசியில்லாமல் தனது மக்களை அரசாங்கங்கள் பார்த்துக் கொள்கின்றன. ஆசிய நாடுகளில் அரசியல்வாதிகள் தங்களையே பார்த்துக் கொள்வதால்  மக்களைப் பார்க்க ஆளில்லை!

ஊரடங்கின் போது நல்லதே நடக்க வேண்டும் என வேண்டுகிறேன்!


Thursday, 27 May 2021

வலிமை வாய்ந்த சமூகம்


நமது சகோதர இனமான சீன சமுகத்தைப் பற்றிப் பேசும் போது  ஒரு விஷயத்தை நாம்  தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

சீனர்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறி இருக்கின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

வழக்குரைஞர்கள் என்றாலே அது இந்தியர்கள் தான் என்று சொல்லப்படுவதுண்டு.  அவர்கள் நீதிமன்றங்களில் காணப்படுவது குறைவாக இருக்கலாம் ஆனால் அவர்கள் பெரும்பாலும் வர்த்தகத்துறையினரைச் சார்ந்து இருக்கிறார்கள். ஆலோசனைகள்  கொடுப்பது, வழிகாட்டுதல் போன்றவை அவர்களது பணியாக இருக்கும்.

மருத்துவத்துறையில் அவர்களை அதிகமாகக் காண முடிகிறது. இன்று பெரும்பாலான கிளினிக்குகள் அவர்களுடையவை. அதுவும் குறிப்பாக நிபுணத்துவம் என்பது அவர்கள் கையில்.  இன்று எதைனை எடுத்துக் கொண்டாலும் மருத்துவத் துறையில் அவர்கள் தான் நிபுணர்களாக இருக்கிறார்கள்.

கணக்கியல் துறை என்றாலும் அவர்களே முன்னணியில் நிற்கின்றனர். இன்று பெரும்பாலான நிறுவனங்கள் அவர்களை நம்பியே இருக்கின்றன. பல பெரும் நிறுவனங்களில் அவர்களே அதிகம் பங்கு பெற்றிருக்கின்றனர்.

இப்படி எதனை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் இல்லாத துறைகள் என்று எதுவும் இல்லை. அந்த அளவுக்கு  அவர்களின் உச்சத்தை தொட முடியாத அளவுக்கு நமக்கும் அவர்களுக்கும் பெரும் இடைவெளி உள்ளது! அதனால் நான் நம்மை குறைத்து மதிப்பிடவில்லை என்பதையும் அறிந்து கொள்க.

இவற்றை நான் ஏன் பட்டியல் இட்டிருக்கின்றேன் என்றால் இவ்வளவு இருந்தும், எல்லாத் துறைகளிலும் அவர்கள் பேர் போட்டிருந்தாலும், நாம் அவர்களைப் பற்றி பேசும் போது அவர்களை எப்படிக் குறிப்பிடுகிறோம். அதைத்தான் நான் சொல்ல வருகிறேன். 

எத்தனையோ சாதனைகள் அவர்களிடமிருந்தும் நாம் அவர்கலைப்பற்றி பேசும் போது  "சீனர்கள் பணக்காரர்கள்!" என்கிற ஒரே வார்த்தையில் சுருக்கி விடுகிறோம்! மற்றவைகளைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படவில்லை. பணம் மட்டும் தான் நம் முன் நிற்கிறது! பணம் இருந்ததால் தான் அவர்களால் இந்த அளவுக்கு உயரமுடிந்திருக்கிறது என்பதும் உண்மை.

ஆனால் சீனர்களிடம் எத்தனையோ பண்புகள் இருந்தும், திறமைகள் இருந்தும் அவைகள் எல்லாம் மறக்கடிக்கப்படுகின்றன. ஒன்றே ஒன்று தான் நமது ஞாபகத்திற்கு வருகின்றது. அது தான் பணம்.

உலகில் ஒரு சில இனத்தினரை நினைத்தாலே  நமக்கு வருவதெல்லாம் பணம் தான். யூதர்கள் என்றாலே பணம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. அவர்கள் தான் உலகில் உள்ள பல தொழில்களுக்கு சொந்தக்காரர்கள். இன்று சீன நாடு மற்றவர்களை விட பொருளாதாரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக வலம் வருகிறது என்றால் அதற்குப் பணம் தான் காரணம். பணத்தை வைத்துக் கொண்டு பல நாடுகளை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஏன்? அடிமையாக வைத்திருக்கிறது என்று கூட சொல்லலாம்.

பணம் வலிமை வாய்ந்தது. அதனால் தான் சீனர்களைப் பற்றிப் பேச பலர் பின் வாங்குகின்றனர்.  இந்தியர்களைப் பற்றிப் பேசும் ஜாகிர் நாயக் அவரது சிஷ்யரும் சீனர்களைப் பற்றிப் பேச முடிகிறதா?

சீனர்கள் வலிமை வாய்ந்த சமூகம். அதற்குக் காரணம் பணம்!

Wednesday, 19 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி ........! (58)

 சீனர் சமூகமே நமக்கு எடுத்துகாட்டு (iv)

ஒரு காலக் கட்டத்தில் சிறந்த கல்வியாளர்களைக் கொண்ட சமூகமாக நாம் இருந்தோம்.

இன்று நிலைமை  மாறி விட்டது. இன்று சீனர்கள் தான் சிறந்த கல்வியாளர்களாக இருக்கின்றனர்.  தனியார் பலகலைக்கழகங்களில் அவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். பெரும்பாலான பேராசிரியர்களாக அவர்கள் தான் இருக்கின்றனர். உண்மையைச் சொன்னால் நாம் தான் கல்வித்துறையில் கோலோச்சினோம். இன்று அதனையும் இழந்தோம்.

நாம் பெரிய பெரிய கல்வி நிறுவனங்களை விடுவோம். சாதாரண இடை நிலைக்கல்வி, தொழில் பயிற்சிக் கல்வி  இவைகளைப் பற்றி  பார்ப்போம்.

தொடக்கக் கல்வி முடிந்து இடைநிலைப் பள்ளிகளுக்குப் போகும்  போது  கணிசமான மாணவர்கள் இடைநிலைப் பள்ளிகளைத் தவிர்க்கின்றனர். முதல் அடி அங்கே விழுகிறது. அடுத்து இடைநிலைப் பள்ளிகளில் ஐந்தாம் பாரம் வரை  அனைத்து மாணவர்களும் போய் சேருவதில்லை. அடுத்த அடி இங்கே!

இப்படி விடுபட்டுப் போன மாணவர்களின் நிலை என்ன? இவர்களில் பெரும்பாலானோர் ஒன்று: குடிகாரர்கள் அடுத்து: குண்டர் கும்பல். இப்படி உருப்படாத மாணவர்களை குண்டர் கும்பல்கள் தங்களுடன் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்.

இதனை நாம் சீன மாணவர்களோடு ஒப்பிடும் போது நாம் மிகவும் அதிகம்.  அவர்கள் குறைவான விழுக்காடு தான்.  அதே சமயத்தில்  அவர்களின் பாதை வேறு. ஏதோ ஒரு வியாபார நிறுவனங்களில் , தொழில் நிறுவனங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுகின்றனர். ஒன்று தொழிலைக் கற்றுக் கொள்ளுகின்றனர். அடுத்து சொந்தமாக வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.

படிக்கவில்லை என்றாலும் சீன மாணவர்கள்  தங்களுக்கு ஏற்ற ஒரு பாதையை அமைத்துக் கொள்ளுகின்றனர். அது அவர்களுக்கு ஆக்ககரமாக அமைகிறது. தமிழ் மாணவர்கள் குடி, குண்டர் கும்பல் என்று சீரழிவு பாதைக்கு இழுத்துச் செல்லப்படுகின்றனர்.  சீனப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டியாக அமைகின்றனர்.

இன்று இந்திய மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி பெற நிறையவே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. முன்பு போல முணுமுணுக்க ஒன்றுமில்லை. ஆனாலும் மாணவர்கள் தயாராக இல்லை.

வாய்ப்புகள் இருந்தும் அதனை நாம் பயன்படுத்திக் கொள்வதில்லை. நமது இந்திய பெற்றோர்கள் பொறுப்பற்று நடந்து கொண்டால் அதற்கு அரசாங்கத்தைக் குறை சொல்லுவதில் பயனில்லை.

நமது மாணவர்கள் பொறுப்பற்றுப் போவதற்கு பெற்றோர்களே முழு காரணமாக அமைகின்றனர்.

பெற்றோர்களே நீங்கள் தான் பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருந்து வழிகாட்ட வேண்டும்.

Monday, 17 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.....! (57)

சீனர் சமுகமே நமக்கு எடுத்துக்காட்டு!   (iii)


பொதுவாகவே இந்தியர்கள் குடிகார சமூகம் என்கிற பெயர் எடுத்துவிட்டோம்! ஏன்? வளர்ந்து வரும் இளைய சமுதாயம் கூட குடிகாரர்கள் என்பது மற்றவர்கள் சொல்ல வேண்டாம்.  நாம் கண்கூடாகவே பார்க்கிறோம்.  பள்ளி மாணவர்கள் கூட அதற்கு விதிவிலக்கல்ல!

ஒரு வித்தியாசம். இந்த மாணவர்களின் பெற்றோர்களைத் தவிர மற்ற பொது மக்கள் பெரும்பாலும் இதனை அறிந்து வைத்திருக்கிறார்கள்!

ஆனால் உண்மையில் நாம் அந்த  அளவு பெரிய குடிகாரர்களா? இல்லை!  நாம் குடிப்பதை விட நாம் செய்கின்ற ஆர்ப்பாட்டம் அதிகம்! கொஞ்சம் குடித்துவிட்டு அதிக ஆர்ப்பாட்டம் செய்கின்றவர்கள் நாம்! ரோடுகளில் விழுந்து கிடப்பது, ரகளைச் செய்வது, வம்பிழுப்பது,  உதை வாங்குவது, அடித்துக் கொள்ளுவது - இவைகள் எல்லாம் நாம் போதையில் இருக்கிறோம் என்பதற்கான அறிகுறிகள்!

ஆனால் குடிப்பதில் கில்லாடிகள் என்றால் அது சீனர்கள் தான்.  ஒரு வித்தியாசம். அவர்கள் குடிகாரர்கள் என்பது அவ்வளவாக வெளியே தெரிவதில்லை. அவர்கள் அதனைக் காட்டிக் கொள்ளுவதில்லை. ஏதோ குடித்தோம்! போய்ப் படுத்தோம்! என்பது தான் அதிகம். வரம்பு மீறுவது அங்கும் உண்டு. வெளியே தெரிவதில்லை!

மனிதன் குடிப்பது என்பது உலக அதிசயம் உல்ள. ஆனால் அதனை  ஏதோ தொழில் போல செய்வது என்பது நாமாகத்தான் இருக்க வேண்டும்! சீனர்கள் குடிக்கிறார்கள் ஆனால் அவர்களின் குடும்ப வாழ்க்கைப் பாதிப்பதில்லை. அவர்களின் தொழில் பாதிப்பதில்லை. நமது நிலை அப்படி அல்ல. தொழில் செய்பவர்கள் கூட தங்களின் தொழிலில் கவனம் செலுத்தாத நிலை நம்மிடையே உண்டு.

சீனர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.   நமது வேலையிலோ, தொழிலோ முழு கவனத்தைச் செலுத்துங்கள். உங்கள் உழப்பை வீணடிக்காதீர்கள். பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள். நீங்கள் குடித்துத்தான் ஆக வேண்டும் என்றால் கூட்டம் போட்டுக் கும்மாளம் அடிக்காதீர்கள்.  உங்கள் வீட்டிலேயே குடித்துவிட்டு அமைதியாகப்  படுத்து விடுங்கள்.

இந்திய இனம் ஏழைகள் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். குடிப்பதற்காக இவர்கள் ஏராளமாக செலவு செய்கிறார்கள்! இவர்கள் குடும்பம் என்ன நிலையில் இருக்கிறதோ நமக்குத் தெரியவில்லை. ஆனால் குடித்துவிட்டு அடித்துக் கொள்ளுவதில் மன்னராக இருக்கிறார்கள்!

இந்த குடிகாரர் பிரச்சனையில் கூட  சீனர்கள் தான் நமக்கு உதாரணம். மதுபான விற்பனை நிறுவனங்கள் இந்தியர்களை நம்பி இல்லை, சீனர்கள் தான் அவர்களின் பிரதான வாடிக்கையாளர்கள். ஆனால் நமக்குத் தான் குடிகாரப்பட்டம் எளிதாக கிடைக்கிறது!

நாம் குடியை மறந்தால் நமது முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். குடித்தாலும் கும்மாளம் அடிக்க வேண்டாம்.!


Saturday, 15 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி ........! (56)

சீனர் சமூகமே நமக்கு எடுத்துக்காட்டு   (ii)


உலகத்தில் உள்ள வேறு எந்த மனிதரையும் நாம் தேடி ஓட வேண்டியதில்லை! நமது பக்கத்து வீட்டு அல்லது அடுத்த தெரு அல்லது பக்கத்து தாமானில் உள்ள சீன சகோதரர்களைப் பார்த்தாலே போதும். கொஞ்சம் உற்றுக் கவனியுங்கள். அவர்களின் வாழ்க்கை முறையைப் பாருங்கள்.

அதெப்படி அவர்களால் முடிகிறது என்கிற கேள்வி எழத்தான் செய்யும். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் கடவுளை நம்புகிறார்களோ இல்லையோ அவர்கள் பணத்தை நம்புகிறார்கள். முதலில் பணம், பிள்ளைகளின் கல்வி. கல்வி சரியாக அமையாவிட்டால் ஏதாவது தொழில். இப்படித்தான் அவர்களது வாழ்க்கை அமைகிறது.

கல்வியில் தோல்வி என்றால் ஏதாவது ஒரு நிறுவனத்தில் போய் வேலை செய்வது என்பது பெரும்பாலும் இல்லை.  இந்தியர்களும் மலாய்க்காரர்களும் தான் இந்த வேலைகளுக்கு அடித்துக் கொள்ளுகிறோம்! சீன இளைஞர்கள் ஏதாவது தொழிலைக்  கற்றுக் கொண்டு பின்னர் அதனையே தங்களது தொழிலாக்கிக் கொள்கின்றனர்.

சான்றுக்கு ஒன்று சொல்லுகிறேன்.  ஒரு சிறிய நிறுவனம்.கார்களுக்கு புது டயர் போடுகின்ற அல்லது மாற்றம் செய்கின்ற வேலை.  ஒரு சீன இளைஞன் அங்கு வேலை செய்து கொண்டிருந்தான். ஓராண்டுக்குப் பின்னர் இன்னொரு சீன இளைஞன் வந்து சேர்ந்தான். சுமார் இரண்டு மூன்று ஆண்டுகள் இருவரும் வேலை செய்தனர்.  இருவருமே போதுமான பணம் சேர்த்துக் கொண்டனர்.  இருவரும் வளர்ந்து வரும் இன்னொரு பட்டணத்தில் சொந்தமாக ஒரு கடையை அவர்கள் ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் கற்றுக்கொண்ட அதே தொழில்.  இப்போது அது பெரியதொரு நிறுவனமாக மாறிவிட்டது!

கல்வி குறித்து ஓர் எடுத்துக்காட்டு. ஒரு பாட்டி, தாய், மூன்று பேரப்பிள்ளைகள். பாட்டிக்கு வேலை இல்லை. தாய் ஒரு கடையில் சுத்தம் செய்கின்ற வேலை. பேரன் பெரியவன் படிக்கிறான். இருவர் இன்னும் பள்ளி போகவில்லை. பாட்டி குப்பைகளைக் கிளறி எதை எதையோ பொறுக்கிக் கொண்டிருப்பார். அது அவர் வேலை. தாய் வேலை முடிந்ததும் அவரும் பாட்டியோடு சேர்ந்து குப்பைகளில் மூழ்கிவிடுவார். பேரப்பிள்ளைகளும் பாட்டியோடும்  தாயோடும்  சேர்ந்து குப்பைகளில் உதவி செய்வர்.  பாட்டி இவ்வளவு ஆர்வத்தோடு செய்வதற்குக் காரணம் உண்டு.  பேரனுக்குக்  கணினி வேண்டும்.  வந்து விலையெல்லாம் விசாரித்துவிட்டுப் போனார். பணம் சேர்ந்ததும் வந்து கணினியை வாங்கினார்.  இதில் என்ன ஆச்சரியம் என்றால்  அவரிடமிருந்ததெல்லாம் கசங்கிப் [போன ஒரு வெள்ளி நோட்டுக்களும் ஷில்லிங்குளும்  தாம்.

நம்மோடு ஒப்பிட்டுப் பாருங்கள். வீட்டை விற்போம். சொத்தை விற்போம் கணினி வாங்க பள்ளிகள் உதவ வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனையை ஏற்படுத்துவோம்!. சொந்தக் காலில் நிற்பது என்பது நாம் விரும்பாதது!

சீன சமூகம் யாரையும் எதிர்பார்ப்பதில்லை. சொந்தக் காலில் நிற்பதைத் தான் அவர்கள் கௌரவமாக எண்ணுகின்றனர். கிடைத்தால் ஏற்றுக் கொள்வோம். கிடைக்காவிட்டால் மாறிக் கொள்வோம்! அவ்வளவு தான்!

யாரையும் குறை சொல்லுவதில்லை. நம்முடைய பிரச்சனை நாம் தான் பொறுப்பு. மற்றவர்களைக் குறை சொல்லுவதால் எந்தப் பயனுமில்லை. இது தான் சீன சமூகம்!

நம்மாலும் முடியும்!




Friday, 14 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (55)

சீனர் சமூகமே நமக்கு எடுத்துக்காட்டு  (i)

நாம் மலேசியர்கள். நம் நாட்டில் பெரும் பணக்காரர்கள் என்று வரும்  போது  யார் நம் கண் முன்னே வருவர்?

எல்லா இனத்தவரிலும் பணக்காரர்கள் உண்டு.  சீனர், இந்தியர், மலாய்க்காரர் அனைவரிலும் உண்டு.  ஆனால் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் எங்கே போகிறோம்?  எத்தனை கடைகள் இருந்தாலும் கடைசியில் சீனர் கடைகளுக்குத் தான் போகிறோம்! இந்தியர் கடைகள் ஐந்து இருந்தால் சீனர் கடைகள் ஐநூறு இருக்கும் போது நாம் இயல்பாகவே சீனர்களை நாடித்தான் செல்ல வேண்டிய சூழல்!

சீனர்கள் எல்லா விதத் தொழில்களிலும் இருக்கின்றனர். சிறிய, நடுத்தர, பெரிய - இப்படி அனைத்துத் தொழில்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர். அதனால் தான் பொருளாதாரம் என்னும் போது அனைத்தும் அவர்கள் கையில் இருப்பதால் இயல்பாகவே அவர்கள் தான் முன்னணியின் நிற்கின்றனர்.

அன்று சிறிய தொழில்களைச் செய்தவர்களின் வீட்டுப் பிள்ளைகள் இன்று அவைகளைப்  பெரிய தொழில்களாக மாற்றிவிட்டனர்!  எல்லாருமே சிறிய தொழில்களிலருந்து தான் வர வேண்டும். யாரும் விதிவிலக்கல்ல!

சிறிய தொழில்களிலும்,  நடுத்தர தொழில்களிலும் ஈடுபாடு காட்டினால் தான் பெரிய  தொழில்களுக்குப் போக முடியும். அது தான் பரிணாம வளர்ச்சி என்பது. எடுத்த எடுப்பில் பெரிய தொழில்களில் குதித்து விட முடியாது. அது சாத்தியமுமில்லை. வாய்ப்புமில்லை.

இன்று நாட்டின் பொருளாதார சக்தி என்பது சீனர்களின் கையில் தான். எல்லாத் தொழில்களையும் அவர்கள் தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர்!  அவர்களிடம் பொருள்களை வாங்கித்தான் மற்ற இனத்தவர் தொழில் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. அதனை அப்படி ஒன்றும் எளிதில் மாற்றி விட முடியாது. அவர்களும் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை!  அது அவர்களின் கடும் உழைப்பால் நேர்ந்தது. 

நாம், குறிப்பாக தமிழர்கள், சீனர்களிடமிருந்து படிக்க வேண்டியது நிறையவே உள்ளது.  அதுவும் தொழில் ஈடுபாடு வேண்டுமென்றால் நாம் சீனர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தாலே போதும். நாம் தலைநிமிர்ந்து வாழலாம்.

Tuesday, 11 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி......! (53)



சிறுபான்மையினரா? அதனால் என்ன?





 Tan Sri A.K.Nathan & Narish Nathan  (Eversendai Corporation)









ஆம்! நாம் சிறுபான்மையினர் தான்! அதனால் என்ன? 

மலேசிய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நமது சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இருக்கிறார்.  அதுவே நமக்குப் பெரும்பான்மையினரின் பெருமையைக் கொடுக்கிறதே!  அதற்காக நம்மை நாமே பாராட்டிக் கொள்ளலாம்!

மேலே படத்தில் உள்ள ஏ.கே.நாதன் பெரும் தொழில் அதிபர்களில் ஒருவர். அவர் சார்ந்த தொழில் அதிகம் வெளி நாடுகளில்! இவரைப் போன்ற தொழில் அதிபர்கள் இன்னும் பலர் இருக்கின்றனர்.  பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள் ஞானலிங்கம், டோனி ஃபெர்னாண்டெஸ், மோகன் லூர்துநாதன் இப்படிப் பலர்.

நாம் சிறுபான்மையினர் என்று கவலைப்பட ஒன்றுமில்லை.   சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் படித்த ஒன்று ஞாபத்திற்கு வருகிறது. இந்தோனேசிய மக்கள் தொகையில் சீனர்களின் தொகை சுமார் 3% விழுக்காடு தான்.  இந்த மூன்று விழுக்காடு சீன மக்கள் தான் இந்தோனேசியாவின் 90% விழுக்காடு பொருளாதாரத்தைக் கையில் வைத்திருக்கின்றனர்!

நமது மலேசிய நாட்டில் நம் விழுக்காடு என்பது 8% விழுக்காடு என்பதும் கூட சிறிது என்று சொல்ல இடமில்லை. நம்மால் மலேசிய பணக்கரர் பட்டியலில்  இடம் பிடிக்காவிட்டாலும் கூட வேறு வகையில் நமது பலத்தைக் காட்டலாம். சிறிய, நடுத்தர தொழில்களில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் நமது வேண்டுகோள்.

நம்மால் எந்த தொழில் - நமக்கு ஏற்றத் தொழில் எது,  போன்றவைகளைத் தெரிந்து கொண்டு தொழிலில் இறங்க வேண்டும் என்பது  நமது தலையாய்க் கடமை. இன்று நாம் அசட்டையாக இருந்து விட்டால் பாக்கிஸ்தானியரும், வங்காளதேசிகளும் நம்முடைய தொழில்களை அவர்கள் பிடித்துக் கொள்ளுவார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

தொழில் செய்ய வாய்ப்புக்கள் அதிகம். தொழிலில் இறங்க நமக்குத் துணிச்சல் வேண்டும். ஆயிரத்தில் ஒருவனாக இருக்க வேண்டும். தொழில் செய்பவன் தனித்து நிற்பவன். தொழில் என்பது துணிச்சல் மட்டும் தான்.

சிறுபான்மை, பெரும்பான்மை என்பதெல்லாம் தேவை இல்லாத ஒன்று. தேவை துணிச்சல் ஒன்றே!


Monday, 10 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........! (52)

 சிறுபான்மை தான் ஆனால்....!


நமது மலேசிய இந்தியர்களில் குஜாராத்தியர் என்பவர்கள் சிறுபான்மை இனத்தவர் தான். 

ஏன் நம்மில் பலருக்கு  குஜாராத்தியர் என்றாலே யார் என்று தெரிய வாய்ப்பில்லை  இங்கு பலர் அவர்களைப்  பட்டேல் என்பார்கள். தமிழ் நாட்டில் இவர்களை மார்வாடிகள் அல்லது பணியாக்கள் எனகிறார்கள்.

ஆனால் நம்மில் பலருக்குத் தெரிந்த ஒன்று இவர்கள் பெரும்பாலும் தொழில் செய்பவர்கள். எல்லாப் பெரிய சிறிய பட்டணங்கள் ஒன்று விடாமல் இவர்கள் தொழில் செய்கிறார்கள். அதுவும் குறிப்பாக வீட்டுத் தளவாடப் பொருள்களை விற்பவர்களாக இருக்கிறார்கள்.

இவர்களுடைய தொடர்புகள் பெரும்பாலும் தமிழ்ச் சமூகத்தோடு தான். ஆனால் இப்போது மாறிவிட்டது. மலாய் சமூகத்தினரோடும் அதிகமான தொடர்புகள் ஏற்பட்டுவிட்டது. சீன சமூகத்தோடு வாய்ப்பில்லை. இவர்கள் செய்கின்ற தொழிலைத்தான்  அவர்களும் செய்கிறார்கள்!

ஆனால் இவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் இன்றைய நிலையில்  நாம் அலசி ஆராய்ந்தால் இந்திய சமூகத்தில் பெரும் பணக்காரர்களாக இருப்பவர்கள் இவர்கள் தான்!

இவர்களைப் பற்றியான ஒரு விஷயம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இவர்கள் எங்கும் வேலை செய்ததாகத் தெரியவில்லை!  இந்த நாட்டிற்கு வரும்போதே தொழிலோடு வந்திருக்கிறார்கள்! அதுவும் குறிப்பாக வீட்டுத் தளவாடப் பொருள்களை விற்பவர்களாகத்தான் வந்திருக்கிறார்கள்! பின்னர் மற்ற பல தொழில்களில் கவனம்  செலுத்தியிருக்கிறார்கள்.

அவர்களிடம் உள்ள ஒரு சிறப்பு அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களோடு கொண்டு செல்வது தொழில் என்பது மட்டும் தான்.

அவர்கள் இல்லாத நாடுகளே இல்லை எனலாம். எல்லா நாடுகளிலும் அவர்கள் செய்வது வியாபாரம் மட்டும் தான். வியாபாரத்தையும் இவர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தியாவில் இந்த இனத்தவரே பணக்காரர்களாக இருக்கிறார்கள். இந்தியாவின் முதல் பணக்காரர் அம்பானி குஜராத்தியர் தான்.

உலகில் உழைப்பு என்றால் நம்மைப் பொறுத்தவரை அது ஜப்பானியர் அல்லது சீனராகத்தான் இருக்கு முடியும் என்கிறோம். ஆனால் இவர்களோ "குஜாராத்தியர் போல் உழைக்க யாருமில்லை. எங்களோடு யாராலும் போட்டி போட முடியாது!" என்கிறார்கள்! 

மலேசிய இந்தியர்களில் இந்த குஜாராத்தியரே பெரும் பணக்காரர்கள் என்று துணிந்து சொல்லலாம். நமக்கு அவர்களைப் பற்றி அதிகம் தெரியவில்லை காரணம் அவர்கள் நம்மிடையே  அதிகம் பேசப்படுவதில்லை.

தொழில் செய்வதற்கு சிறிய இனமோ பெரிய இனமோ என்கிற அவசியமில்லை. தேவை எல்லாம் துணிச்சல் தான்.  அந்த துணிச்சல் என்பது குஜராத்தியரிடம் உள்ளது.  அவர்கள் மக்களை நம்புகிறார்கள். அது தான் அவர்களின் வெற்றி.

பணமிருந்தால் நாம் தான் பெரும்பான்மை!


Saturday, 8 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி .......! (51)

 பணம் தான் வியாபாரம்!

நாட்டுக்கோட்டை செட்டியார் என்றாலே நம்மில் பெரும்பாலும் அறிந்திருப்பர். மலாய் மொழியில் பேசும் போது பணக்காரர்களை "செட்டி"  என்று குறிப்பிடும் அளவுக்கு செட்டியார்கள் மிகவும் பிரபலம்!

பொதுவாக இவர்களின் காலம் என்பது தமிழ் முஸ்லிம்கள் வருகைக்குப் பின்னரே நிகழ்ந்திருக்கிறது எனலாம்.

இவர்களிடம் உள்ள குறிப்பிடத்தக்க அமசம் என்பது இவர்கள் வியாபாரம் செய்ய வந்தவர்கள் என்பதை விட இவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பண உதவி செய்து அதன் மூலம்  மற்றவர்களைப் பொருளாதார வளர்ச்சி பெறச் செய்தவர்கள் என்று சொல்லலாம். அது தான் லேவாதேவி தொழில்.

ஆமாம்,  வங்கிகள் அதிகம் இல்லாத ஒரு காலக்கட்டத்தில் இவர்கள் தான் பெரும்பாலும் வங்கிகளாக செயல்பட்டனர்.  அந்த வகையில் நாட்டின் வளர்ச்சிக்கு இவர்களின் பங்கு அளப்பரியது.

அந்த காலக்கட்டத்தில் சீனர்களும் தொழிலாளர்களாகத்தான் வேலை செய்து வந்திருக்கின்றனர். அதனால் வியாபாரத்துறையில் அவர்களின் ஈடுபாடு அதிகம் இல்லை. அதன் பின்னர் தான் சீனர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு செட்டியார்கள் பெரும் அளவில் பங்காற்றிருக்கின்றனர்.

இப்போது வங்கிகள் அதிகம் பெருகிவிட்டதால் செட்டியார்களின் லேவாதேவி தொழில் என்பது நசிந்து விட்டது என்று சொல்லலாம். அதனால் அவர்கள் வேறு பல தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். செட்டியார் சமூகத்தினர் மற்றவர்களிடம் போய் வேலை செய்வது என்பது அரிது. தங்களை ஏதோ ஒரு வகையில் வியாபாரத்தில் ஈடுபடுத்திக் கொள்ளுவது என்பது தான் அதிகம்.

மலேசிய நாட்டின் பல சிறிய பெரிய நகரங்களில் அவர்கள் தொழில் செய்யாத இடமே இல்லை. இன்று வங்கிகள் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் அவர்கள் இருந்திருக்கின்றனர்.

தமிழ்ச் சமூகத்தில் செட்டியார் சமூகத்தினர் தனித்து நிற்கின்றனர், அவர்களுக்கென்று ஒரு முருகன் கோயில். தனி கணக்கு வழக்குகள்.  கூடிப்பேசி முடிவு எடுப்பது. சமூகத்தில் எந்த அடிதடியும் இல்லை. வர்த்தகத்தில் மட்டும் ஈடுபாடு.  தங்களின் கட்டுப்பாட்டில் பல நிறுவனங்கள்.    நாட்டின் பல துறைகளில்  முத்திரைப் பதித்திருக்கின்றனர். அமைதியான சமூகம் என்று பெயர் எடுத்திருக்கின்றனர்.

நாட்டுக்கோட்டை செட்டியார்கள் நமது தமிழ்ச் சமூகத்தின் பெருமை மிக்க சமூகம். அவர்களின் வழி தனி வழியாகத்தான் இன்றுவரை உள்ளது. மற்ற சமூகத்தினருக்கு நல்ல வழிகாட்டியாகவும் உள்ளனர்.

பணம் பணத்தைக் கொண்டு வரும்!  முன்னேற்றத்தையும் கொண்டு வரும்!

Wednesday, 5 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி .........! (48)

சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள்!    


பிரச்சனைகள் எங்கும் உண்டு. எல்லாப் பக்கமும் உண்டு. தினசரி வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகளை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். ஆனால் அத்தனை பிரச்சனைகளையும் எப்படி எப்படியோ சமாளித்துக் கொண்டிருக்கிறோம்! அதாவது எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும் நம்மால் சமாளிக்க முடியும் என்கிற துணிச்சல் நமக்கு உண்டு.

ஆனால் அதுவே சொந்தத் தொழில் என்று வரும் போது அதனை சமாளிப்பதில் சிரமப்படுகிறோம். அதாவது  நாமே ஒரு பயத்தை ஏற்படுத்திக் கொள்ளுகிறோம்!  அதற்குப் பதிலாக அதனை எளிதாக எடுத்துக் கொண்டு அதனை சமாளிக்க முடியும் என்கிற நம்பிக்கையோடு செயல்படுவதே அறிவுடமை.

நம்மால் சமாளிக்க முடியும். அந்த ஆற்றல் நம்மிடம் உண்டு. வாழ்க்கையில் எல்லாமே ஒரு சமாளிப்புத் தன்மையைக் கொண்டது தான். சமாளிப்பது ஒரு பிரச்சனைக்குத் தற்காலிகத் தீர்வைக் கொடுக்கும்.

தொழில் செய்கின்ற ஒரு சிலரை நான் அறிவேன்.  எவ்வளவோ பிரச்சனைகள் அவர்களுக்கு உண்டு. தொழிலில் பிரச்சனைகள் என்றாலே அது பொருளாதாரச் சிக்கல்கள்  தான்! அதுவும் குறிப்பாக கடன் பிரச்சனைகளாகத் தான் இருக்கும். ஆனால் இந்த ஒரு சிலர்  இருக்கிறார்களே இவர்கள் ஒன்றுமே ஆகாதது போல சிரித்துப் பேசி மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்!  இவர்கள் எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும் அவைகளை மிக எளிதாக சமாளித்து விடுவார்கள்! அவர்கள் சொல்லுவதெல்லாம் ஒன்று தான்:  "இதுவும் கடந்து போகும்" என்பது தான்!  இன்னும் ஒரு சிலர் என்ன தான் தலை போகிற காரியமாக இருந்தாலும்: Take It Easy!  என்று சொல்லிவிட்டு அடுத்த காரியத்தைப் பார்க்க போய்விடுவார்கள்! நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ  அன்றாட வாழ்க்கையில் இப்படித்தான் பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது!

ஒரு சில வியாபாரிகளைப் பார்க்கும் போது நமக்கே பாவமாக இருக்கும்! எந்நேரமும் உம்ம்...என்று இருப்பார்கள்! பிரச்சனை பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிறிய பிரச்சனை அதனை சமாளிக்கத் தெரியாத அப்பாவியாக இருப்பார்கள்!

பிரச்சனைகள் எல்லாம் ஒன்று தான். அவைகளை சமாளிக்கும் திறன் நமக்கு வேண்டும். சாதாரண நடைமுறை வாழ்க்கையில் சமாளிக்கும் திறன் நமக்கு உண்டு. ஆனால் வியாபாரம் என்று வரும் போது நாம் தடுமாறுகிறோம். அந்த தடுமாற்றம் தேவையற்ற ஒன்று.

சவாலே சமாளி!

Sunday, 2 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.....! (47)

இது சரியான தருணமா?


புதிய தொழில்கள் செய்வதற்கு இது ஏற்ற தருணமா என்பது கேட்க வேண்டிய கேள்வி தான்.

காரணம் எத்தனையோ தொழில்கள் மூடப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் புதியதொழில்கள் தொடங்குவதற்கு இது சரியான தருணம் அல்ல என்கிற முணுமுணுப்பு நமக்கும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

ஆனாலும்  புதிய புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.  அப்படி ஒன்றும் முழுமையாக நின்றுப்போய் விட வில்லை. அதிலும் குறிப்பாக சிறு சிறு முயற்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சிறிய தொழில்கள் ஆங்காங்கே தொடங்கப்பட்டு பலதொழில்கள் வெற்றிகரமாக நடந்து கொண்டு இருக்கின்றன. இதற்காக  நம்மின பெண்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். காரணம் வேலை இல்லை. குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். வேறு வழியில்லை. தங்களுக்கு என்ன தெரியுமோ அதைச் செய்கின்றனர். பெரும்பாலும் உணவு சார்ந்த வியாபாரங்கள்.  இதில் பெண்கள் பங்கு தான் அதிகம்.

இன்னொன்று இந்த தொற்று நோய் காலத்தில் ஓரளவு பணம் வைத்திருப்பவர்களைக் கவர்ந்த தொழில் என்றால் அது மளிகைக் கடைகள். எத்தனை பேரங்காடிகள் இருந்தாலும் நமக்கு அருகில் இருப்பவை இந்த சிறிய நடத்தர மளிகைக் கடைகள் தான். நாம் பெரும்பாலும் தூரமான இடங்களுக்குப் போக முடியாத சூழலில் இந்த கடைகள் தான் நமக்கு வாய்ப்பாக அமைகின்றன.

இன்னும் கணினி நிறுவனங்களும் ஆங்காங்கே தலைதூக்க ஆரம்பித்து விட்டன!  கையில் பணம் இருந்தால் எங்கே பணம் பார்க்க முடியுமோ அங்கே எல்லாம் பணம் உள்ளவர்கள் பாய ஆரம்பித்துவிட்டனர்!

ஆக ஏதோ ஒரு வகையில் ஒரு சில தொழில்கள் மீண்டும் தலை காட்டுகின்றன. தொழில்களை நிறுத்த முடியாது. எல்லாத் தொழில்களும் நாட்டில் மூடப்பட்டுக் கிடந்தால் அது நாட்டுக்கு நல்லதல்ல. சிறு நடத்தர தொழில்கள்  மீண்டும் வர வேண்டும். மீண்டும் தொடக்கபட வேண்டும்.

ஆனால் உணவகத் தொழில் தான் இன்னும் நம் இனத்தவருக்கு விரும்பி செய்கின்ற தொழிலாக இருக்கிறது. அதுவும் சரிதான்.  ஒரு பக்கம் ஆள் பற்றாக்குறை என்று சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கம் புதிதாக திறக்கப்படும் தொழில் என்றால் அது உணவகத் தொழில் தான்.

தொழில் செய்ய இது சரியான தருணமா என்று கேட்டால் "ஆம்!இல்லை!" என்று தான் சொல்ல வேண்டியுள்ளது!  எல்லாம் அவரவர் கையிருப்பைப் பொறுத்தது!

துணிந்தவனுக்கு துக்கமில்லை என்பார்கள். எல்லாமே சரியான தருணம் தான்!

Friday, 30 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி .......! (45)

தொழில் செய்பவன் வீழ்வதில்லை


தொழில் செய்பவன் வீழ்ச்சி அடைவதில்லை. ஏன் அவனுக்கு வீழ்ச்சி என்பதில்லை!

ஆனால் அதற்காக வீழ்ச்சி அடையாமலா இருக்கிறார்கள்? வீழ்ச்சி என்றாலும். தோல்வி என்றாலும் அது நடந்து கொண்டு தான் இருக்கும். நாம் நமது தொழிலை ஒன்றும் நடவாதது போல் தொடர்ந்து கொண்டு தான் இருக்க வேண்டும்.

வீழ்ச்சி என்றால் நாம் எங்கோ, எதிலோ சரியாகச் செய்யவில்லை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை! இப்போது அது நமக்குக் கண் முன்னாலேயே தெரிகிறது! அது போதும். அது தான் நமது தேவை. இனி நாம் அதனைச் சரிசெய்து கொண்டு நமது தொழிலைத் தொடர வேண்டியது தான்.

வீழ்ச்சி என்பதெல்லாம் நமக்குப் பாடங்கள். வீழ்ச்சி என்று ஒன்று இல்லாவிட்டால், தோல்வி என்று ஒன்று இல்லாவிட்டால், சறுக்கல் என்று ஒன்று இல்லாவிட்டால் நாம் எங்கே தவறு செய்தோம் என்பது நமக்குத் தெரியாது, நமக்குப் புரியாது!

நமது தவறுகளைப் புரிய வைக்கவே நமக்கு வீழ்ச்சிகள் வருகின்றன; வர வேண்டும். அந்த வீழ்ச்சிகள் எதனால் வருகின்றன, எங்கே நாம் தவறு செய்தோம், யாரை நம்பி நாம் மோசம் போனோம்,  ஏதாவது கீழறுப்பு வேலைகள் நடந்தனவா போன்ற கேள்விகள் எழ வேண்டும். அப்போது தான் நமது கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்கும். ஒரு சில விஷயங்களை நாம் அலட்சியப்படுத்தி விட முடியாது.

வீழ்ச்சி என்பது தொழிலில் இல்லை. அது பாடம்.  சில பாடங்களை நாம் சொந்த காசு போட்டுப் படிக்கிறோம். சில பாடங்களை நாம் அனுபவங்கள் மூலம் படிக்கிறோம். தொழிலில் நாம் செய்யும் தவறுகள் வீழ்ச்சிகள் அல்ல.  அவை பாடங்கள். பாடங்களைப் படிப்பதற்கு வீழ்ச்சி என்று சொல்ல முடியுமா?  எல்லாமே நமது மனதில் தான் இருக்கிறது! வீழ்ச்சி என்றால் அது வீழ்ச்சி!  வீழ்ச்சியில்லை என்றால் அது வீழ்ச்சி இல்லை. அப்படித்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் எதிர்மறை கண் கொண்டு பார்க்காதீர்கள். எது நடந்தாலும் "அது நன்மைக்கே!" என்கிற மனநிலை நமக்கு இருக்க வேண்டும். அது தான் நேர்மறை.

மீண்டும் சொல்லுகிறேன். தொழில் செய்பவனுக்கு வீழ்ச்சி என்பது இல்லை. தற்காலிகமாக ஏற்படுகின்ற சில வீழ்ச்சிகளை, சில இடர்பாடுகளை,  சில தடங்கல்களை  வீழ்ச்சி என்று சொல்லி, பெரிதுபடுத்தி தொழிலை விட்டே  ஓடி விடாதீர்கள் என்பதே எனது வேண்டுகோள்.

எல்லாருமே, வணிகத்துறையில் ஈடுபட்டவர்கள்  அனைவருமே, வீழ்ச்சியைச் சந்தித்தவர்கள் தான். அது ஒரு தற்காலிகத் தடங்கள், அவ்வளவு தான்!  அது தொடர வேண்டும்!

வீழ்ச்சி என்று சொல்லி வீழ்ந்து விட வேண்டாம்!

Wednesday, 28 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி........! (43)

 தோல்வி என்பது மிகப்பெரிய வாய்ப்பு!

தோல்வி என்பது மிகப்பெரிய வாய்ப்பு என்பது தான் நமது புரிதலாக இருக்க வேண்டும்.

தோல்வி என்றதும் "கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்"  என்கிற  மாதிரி சிலர் ஒடுங்கி, அடங்கி விடுவர்.  கடன் பட்டவர்கள் கலங்குவது என்பது இயல்பு தான். காரணம் கடனைப் போல கலங்க வைப்பது வேறு எதுவும் இல்லை.

வர்த்தகத்தில் தோல்வி என்பது பொருளாதாரம் தான். கடன் படுவது தான். கடன்பட்டால் நெஞ்சம் கலங்கும் தான். கடன் நம்மை ஒடுக்கி விடும் என்பது உண்மை தான்.  எல்லாருக்கும் அந்த அனுபவம் உண்டு.  நமக்கும் அந்த அனுபவம் உண்டு. அதனால் கடன் படுவது என்பது வர்த்தகத்தில் இயல்பான ஒன்று.  ஆனால் ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமானது!

ஆக தோல்வி என்பதே பொருளாதாரத் தோல்வி தான்.  அதனை எப்படி அணுகலாம் என்பது தான் நமது நோக்கம். எல்லாமே அனுபவத்தின் அடிப்படையில் தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. நமக்குத் தெரிந்த சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வோம்.

கடன் என்றதும் முதலில் நம்மிடம் உள்ள பயத்தைப் போக்க வேண்டும். இங்கு பயம் தேவை இல்லை.  பயத்தைக் களைவது தான் நமது முதல் வேலை. அடுத்து நாம் யாரிடம் கடன்பட்டிருக்கிறோமோ அவர்களிடம் உட்கார்ந்து பேச ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.  இங்கு "நீ பெரியவனா, நான் பெரியவனா?"  என்கிற  பாகுபடுகள் தேவை இல்லை. இரண்டு பேருமே பெரியவர்கள் தான்! ஆனால் கடன்பட்டவர் தன்னைத் தானே சிறியவர் ஆக்கிக் கொள்வது என்பது இயல்பு!  அது தவிர்க்க முடியாதது!

நாம் செய்ய வேண்டியதெல்லாம் உட்கார்ந்து பேசி நாம் அவர்களின் கடனை எப்படி அடைக்கைப் போகிறோம் என்கிற நமது பரிந்துரையை அவர்கள் முன் வைக்க வேண்டும். நம்மிடம் எந்த ஒரு திட்டமும் இல்லாமல் அவர்களிடம் போய் வெறும் வாய்மொழியாக எதனை வேண்டுமானாலும் கூறலாம். அவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள். கடிதம் மூலமாக செய்வதை அவர்கள் ஏற்றுக்கொள்ள சாத்தியங்கள் உண்டு. அதில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் அது பற்றி விவாதித்து மாற்றங்கள் செய்யலாம். எல்லாவற்றுக்குமே சாத்தியங்கள் உண்டு.

முக்கியமாக நமது கடன் பிரச்சனைகளை இப்படி அணுகுவது பயனாக இருக்கும். பயந்து ஓடுவது பயன் தராது! அவர்களைப் பார்த்து நடுங்குவது பயன் தராது! நாம் தவறு செய்யவில்லை. சில நிர்வாகக் குளறுபடியால் தவறுகள் நேர்ந்து விட்டன. அதனை உட்கார்ந்து பேசி நாம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

தவறுகள் நேர்வது எல்லாக் காலங்கிலும் உண்டு. ஒன்றும் புதிதல்ல. நமக்கு அது புதிதாக இருக்கலாம்.

தோல்வி என்பதை ஒரு வாய்ப்பாக  எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் நாம் படிக்க வேண்டியது நிறையவே உண்டு. முறையான ஒரு நிர்வாகத்தை நடத்துவதற்கு நமக்குத் தோல்விகள் தேவைப்படுகின்றன. தோல்விகள் என்றதுமே அச்ச உணர்வு தேவை இல்லை. அவைகளை எப்படி சரி செய்வது என்பது தான் முக்கியம்.

வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

Tuesday, 27 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..... ! (42)

உயரே! உயரே!


                                                                Petronas Twin Towers
பொதுவாக தொழிலில் உயர வேண்டும் என்னும் வேட்கை உள்ளவர்கள் எப்போதுமே உண்டு. 

ஆமாம்,  அதற்காகத்தானே தொழிலில் இறங்குகிறோம்?  தொழிலில் இறங்குபவர்கள் ஆயிரத்தில் ஒருவனாகத்தான் இருக்க விரும்புவார்கள். இல்லாவிட்டால் நூறோடு நூற்று ஒன்னாக  அவர்களும்  எங்கேயாவது  வேலை செய்து கொண்டு தான் இருக்கப் போகிறார்கள்!

வேலை செய்பவர்கள் அடுத்த பதவி உயர்வு,  ஒவ்வொரு வருடமும்  சம்பள உயர்வு - இது தான் அவர்களின் எதிர்பார்ப்பு. பதவி உயர்வு கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்!  பதவி உயர்வு என்பதெல்லாம் நிறுவனத்தின் உள்  அரசியலைப் பொறுத்தது!  சம்பள உயர்வு என்பதெல்லாம் அவர்களுடைய வேலை ஒப்பந்தத்தைப் பொறுத்தது. இது தான் அவர்களது எதிர்பார்ப்பு.  இந்த வருமானத்திற்குள் தான் அவர்கள் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் தொழில் செய்பவர்களின் வாழ்க்கை கொஞ்சம் வித்தியாசமானது. அவர்கள் தங்களின் வருமானத்தை மாத சம்பளம் வாங்குபவர்களோடு ஒப்பிட முடியாது. ஒரு நாள் வருமானம் மிகக் குறைவாக இருக்கும்.  அடுத்த நாள் வருமானம்  நாம் எதிர்பாராத அளவு நமது எதிர்பார்ப்பை  மிஞ்சிவிடும். அது தான் வியாபாரம் என்பது. வருமானத்தை அதிகரிக்க இன்னும் கொஞ்சம் உழைப்பை அதிகம் போட வேண்டும்.

வியாபாரத்துறையில் உழைப்பு மட்டும் தான் உங்களது வருமானத்தை அதிகரிக்கும்.  நாம் வேலை செய்யும் போது அதிக உழைப்பை நாம் கொடுத்தாலும் நமக்கு அது பெரிய அளவில் பயன் தராது. பயன் இல்லை என்றதுமே முணுமுணுக்கத் தோடங்கி விடுவோம்! இது இயல்பு தான். அது தான் நடந்து கொண்டிருக்கிறது!

வியாபாரத்தில் மாத சம்பளம் இல்லை என்றாலும் நமது மாத வருமானம்  ஒவ்வொரு மாதமும் - வித்தியாசப்படும். வித்தியாசம் என்பதை விட வருமானம் அதிகரிக்கும் என்று தாராளமாகச் சொல்லலாம். அதே போல இங்கே பதவி உயர்வு  என்பதெல்லாம் இல்லை.  நீங்கள் இருப்பதே பெரிய பதவி தான். முதலாளி என்பதே பெரிய பதவி தானே! அதைவிட பெரிய பதவி என்ன உண்டு? 

வியாபாரத்துறையில் உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள வாய்ப்புக்கள் அதிகம். உங்களின் வருமானத்தை நீங்களே திட்டமிடலாம். இந்த ஆண்டு உங்களின் வருமானம் ஐந்து இலட்சம் என்றால் அடுத்த ஆண்டு அதனை பத்து இலட்சமாக மாற்றிக் கொள்ளக் கூடிய சக்தி வியாபாரத்தில் மட்டுமே முடியும்.  உங்களுக்கென்று சில இலட்சியங்கள் இருக்கலாம். இலட்சங்கள் சம்பாதிக்கலாம்.  கோடிகளையும் சம்பாதிக்கலாம். ஒரு தொழில் சாம்ராஜ்யத்தை அமைக்கலாம். இதெல்லாம் முடியாது என்று சொல்ல முடியாது. தொழிலில் இதுவெல்லாம் சாத்தியம்.

தொழில் மட்டும் தான் உங்களை உயரே உயரே கொண்டு செல்லும். வானமே எல்லை என்பார்கள். உங்கள் எல்லையை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இங்கு உயரே உயரே என்றால் அது ஏதோ ஒரு இனத்தைத் தான் குறிக்கும் என்பதில்லை.  சீனர்களாலும் முடியும். அதே போல இந்தியர்களாலும் முடியும். சீனர்கள் தொழில் துறையில் பல தலைமுறைகளைக் கடந்து விட்டார்கள். நாமோ இன்னும் ஆரம்பக் கட்டத்தில் தான் இருக்கிறோம்.  ஆனால் நம்மில் ஒரு சிலராவது உலக வரிசையில் இருக்கத்தான் செய்கிறோம்.

தொழில் என்பது நம்மை உலகளவில் உயர்த்தும்.  அதைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள்.

Monday, 26 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.....! (41)

 முதலில் தோல்வி! அடுத்தது தான் வெற்றி!


வணிகத்தில்  வெற்றி என்பதெல்லாம் எடுத்த எடுப்பில் வர வழியில்லை. 

அதுவும் முதல் தலைமுறையில் வணிகத்தில் இருப்பவர்கள் அடுத்து வரப்போகும் தலைமுறையினரை விட கொஞ்சம் அதிகமாகவே தோல்விகளைச் சந்திக்க நேரிடும்.

அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை! காலங்காலமாக முதல் தலைமுறையினர் தான் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். காரணம் வணிகம் அவர்களுக்குப் புதிது. அனுபவக் குறைவு. வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்குக் கட்டுப்படியான விலைகளில் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும்.  பொருள்களைக் கொள்முதல் செய்கின்ற இடங்களில் அங்கு அவர்களின் திருப்தி என்பதும் முக்கியம். சமயங்களில் கூடுதலான விலைகளில் பொருள்களை வாங்க வேண்டி நேரும். கையில் பணம் இல்லாது கடனில் வாங்கினால் விலையோ இன்னும் அதிகரிக்கும்.

அத்தோடு முதல் தலைமுறையினருக்கு சுற்றும் புறமும், உறவுகளும் உற்றாரும் அவர்களின்  பல அமங்கலமான ஆலோசனைகளும் அவர்களைக் கிறுகிறுக்க வைக்கும்! நல்ல வார்த்தை, உற்சாகமான வார்த்தை, ஆறுதலான வார்த்தை எதனையும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது!  அதுவும் நாம் வெற்றி பெறுவதை விட தோல்வி அடைவதையே அவர்கள் விரும்புவார்கள்!    காரணம் "நான் அப்போதே சொன்னேன் பார்!" என்று  மார்த்தட்டுவதற்கு  அவர்களுக்கு நமது தோல்வி தான் ஆதாரம்!

ஆனாலும் எல்லா வணிகர்களுமே,  தங்களுக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, அனைத்தையும் கடந்து தான் செல்ல வேண்டும். அது நஷ்டமோ கஷ்டமோ,  கடுஞ்சொல்லோ கனிவான சொல்லோ, மானமோ அவமானமோ எல்லாமே வரத்தான் செய்யும். ஏன்? சாதாரணமாக தொழில் செய்பவர்களுக்கு மட்டும் தானா இவை  வருகின்றன? வேலை செய்து பிழைப்பவர்களுக்கும் வரத்தானே செய்கின்றன! ஆனால் ஒரு வித்தியாசம். தொழில் செய்பவர்களுக்குக் கொஞ்சம் அதிகமாகவே வரும். 

எப்படிப் பார்த்தாலும் வெற்றி தான் நமது இலக்கு என்றாலும் முதலில் தோல்வியைச் சந்தித்துவிட்டுத் தான் அடுத்து வெற்றிக்குச் செல்ல வேண்டும். அதனால் தோல்வி என்றதுமே ஓடி ஒளிய வேண்டும் என்கிற எண்ணத்தைப் போக்க வேண்டும். வெற்றிக்குப்  பாதை அமைத்துக் கொடுப்பதே தோல்விகள் தான்!  தோல்விகள் இல்லையென்றால் வெற்றியின் அருமை நமக்குத் தெரியாது.

தோல்வி தானே? இருந்துவிட்டுப் போகட்டும்! மீண்டும் தோல்வி வராமல் பார்த்து கொள்வோம்! ஒன்று தான் தேவை. நமது மனதை நாம் தான் தேற்றிக் கொள்ள வேண்டும். அதைத்தான், ஒரு சிலர்,  Take it Easy! என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே போய்விடுவார்கள்!

அடுத்து வெற்றி என்பதில் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஆமாம்,  அது தானே வர வேண்டும்? எத்தனை தோல்விகளைச் சந்தித்தாலும் அது முடியப் போவது வெற்றியில் தானே!

தோல்விகள் தொடர்ந்து வரலாம்! ஆனால் வெற்றி வர ஆரம்பித்துவிட்டால் அதுவும் தொடர்ந்து வரத்தான் செய்யும்! தோல்விகள் வரும்! அதைப் புறந்தள்ளுங்கள்! வெற்றி வரும் அதைக் கொண்டாடுங்கள்!


Saturday, 24 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி,,,,,,,,,! (38)

 பொறுமை காக்க வேண்டும்!

தொழில் செய்பவர்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். 

அவசரம் அவசரமாக, உடனடியாகப் பணத்தைப் பார்த்து விட வேண்டும் என்று செயல்பட்டால் கடைசியில் ஒன்றுமில்லாமல் போக வேண்டி வரும்! வரலாம்!

நண்பர் ஒருவரைத் தெரியும்.  தோட்டமொன்றில் தொழிலாளியாக இருந்தவர். பகுதி நேரமாக பொது சேவையிலும் ஆர்வம் காட்டினார். அந்த நேரத்தில் அவருக்கு ஒரு நபரின் தொடர்பு ஏற்பட்டது.  அந்த நபர் நிலம், வீடு ஆகியவற்றை விற்று பணம் சம்பாதிப்பவர். பொதுவாக பிரோக்கர் என்று சொல்லுவார்கள். 

அவருக்கும் அவரைப் போன்று செய்ய வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது.  அதில் தவறில்லை. மனிதன் என்றால் ஒவ்வொரு நாளும் வளர்ச்சியடைய வேண்டும். தேங்கிக் கிடந்தால் அது குட்டையாகி, குப்பையாகி விடும்!

நண்பரும் அவரைப் போன்றே ஓரிரண்டு முயற்சிகளைப் பண்ணினார். அவருடைய நல்ல நேரம். அவருடைய முயற்சிகள் பலனளித்தன. பணத்தைப் பார்த்தார். பணம் கட்டு கட்டாக வந்தது. அதனால் அதனை முழு நேரமாக செய்ய வேண்டும் என்கிற ஆசை அவருக்கு வந்துவிட்டது. அதுவும் தவறில்லை!

ஆனால் சில விஷயங்களில் அவர் கோட்டைவிட்டு விட்டார். அவருடைய கல்வி போதுமானதாக இல்லை. அவர் அதே தொழிலில் நிறைய படிக்க வேண்டியிருந்தது. சில நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளவேண்டி இருந்தது.  அவர் அதனை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. தனியாக ஒரு அலுவலகத்தைத் திறந்தார்.  அலுவலகம் ஏதோ பாதி கல்யாண மண்டபம் போல் காட்சியளித்தது!  ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்திக் கொண்டார். அந்த பெண்ணுக்கு  என்ன மொழில் தான் தெரியும் என்று கணிக்க முடியவில்லை. ஆங்கிலம் தெரியாவிட்டால் பரவாயில்லை. மலாய் மொழியிலேயே கடிதப் போக்குவரத்துகளை வைத்துக் கொள்ளலாம். அதுவும் இல்லை. இவர் என்னவோ சொல்லுவார் அவர் என்னவோ ஆங்கிலத்தில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எழுதுவார்! இவர் கடிதத்தில் கையெழுத்து இடுவார். அவர் போகுமிடம் எல்லாம் ஒரு வழக்கறிஞரைக் கூட்டிச் செல்லுவார். எல்லாம் பணம்  என்பதை மறந்து போனார்!

இரண்டு ஆண்டுகள் தாக்குப் பிடித்தார். அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை! எல்லாவற்றையும் இழுத்து மூடிவிட்டு தனது பழைய வேலைக்கே திரும்பிப் போய்விட்டார்!

அதில் நமக்கு வருத்தம் தான். அவர் தனது புதிய துறையில் சரியாகத்  திட்டமிடவில்லை. அவர் தனியாக அலுவலகம் திறக்க வேண்டிய அவசியமில்லை.  யாரும் அவருக்குத் தேவை இல்லை. தான் சொந்தமாகவே  நிலம், வீடு  விற்பனையைச் செய்திருக்கலாம். கடிதப் போக்குவரத்துகளைத் தனக்குத் தெரிந்தவர்களை வைத்தே செய்யலாம். தனக்குத் தேவை என்றால் வழக்கறிஞரின் உதவியை நாடலாம். எத்தனையோ வழிகள் இருந்தன. இப்போதும் இருக்கின்றன. முதலில் அவர் சிக்கனத்தைக் கடைபிடிக்கவில்லை என்பது தான் அவர் செய்த பெரிய தவறு. கொஞ்சம் ஆர்ப்பாட்டம் அதிகமாகப் போய்விட்டது. இல்லையென்றால் அவர் வெற்றிக்குரிய மனிதராக இருந்திருப்பார்.

ஒரு தொழிலில் இறங்கிவிட்டதும் உடனடியாகப் பணத்தைக் குவிக்கலாம் என்கிற எண்ணத்தைக் கைவிட வேண்டும்.  பொறுமை வேண்டும். 

பூமியை ஆள வேண்டும் என்றால், நண்பணே! பொறுமை வேண்டும்!


Wednesday, 21 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி .......! (36)

 தொழிலைப் பற்றிய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்!

தொழிலில் காலெடுத்து வைத்த பின்னர் உங்களது எண்ணங்கள் முழுவதும தொழிலில் தான் இருக்க வேண்டும்.

சொந்தக் கடை. நினைத்தால் கடையை அடைத்துவிட்டுப் போகலாம் என்று தொழிலுக்கு வருவதற்கு முன்னர் கூறலாம். ஆனால் வந்த பின்னர் அப்படியெல்லாம் தான்தோன்றித்தனமாக பேச முடியாது. அது உங்களுக்கே தெரியும். காரணம் நாம் தினமும் எதிர் நோக்கும் போட்டிகள் அதிகம். ஒரு நாள் அடைத்தால் நமது வாடிக்கையாளர்கள் வேறு ஒரு கடை பக்கம் திரும்பிவிடுவார்கள் என்கிற பயம் நமக்கு உண்டு. அடுத்த கடைக்காரனும் அப்படித்தான் நினைக்கிறான்! போட்டிகள் நிறைந்த உலகம்! அப்படித்தான் இருக்கும்!

இன்னொரு பக்கம் அரசியல்வாதிகள். எனக்குத் தெரிந்த நண்பர்களின் ஒரு சில அனுபவங்களைச் சொல்லுகிறேன். தொழிலில் இன்னும் சரியாக வளரவில்லை. வளர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் இருக்கிறார்கள். அதற்குள் அரசியல்வாதிகள் அவர்களைத் தேடி வந்துவிடுவார்கள். அவர்களுக்குப் பலவிதமான ஆசைகளைக்காட்டி அவர்களைப் பெரிய தொழிலதிபர் ரீதியில் அவர்களைக் கொண்டு சென்றுவிடுவார்கள். பாவம் அவர்கள்! தொழிலையும் கவனிக்க முடியாமல், அரசியலிலும் பேர் போட முடியாமல் தொழிலையே மூடிவிட்டுப் போகும் சூழல் ஏற்பட்டுவிடும்.

சீனர்களும் அரசியலில் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பணம் தான் முதலிடம். பணம் சம்பாதித்தப் பின்னர் தான்  அரசியல் பக்கம் தலை காட்டுவார்கள்.  தொழிலில் எந்த அளவு உயர முடியுமோ அந்த உச்சத்தை அவர்கள் தொட்ட பின்னர் தான் அரசியல், பொது சேவை என்பதெல்லாம் அதன் பின்னர் தான். நாமோ 'அதுவும் இல்லை இதுவும் இல்லை' இரண்டும் கெட்டான்!

தொழிலை நாம் விளையாட்டாக எடுத்துக் கொள்ளுகிறோம். அது தவறு. தொழில் என்பது மிகவும் சீரியஸான ஒரு விஷயம்.  கொஞ்சம் ஏமாந்தால் நாறிப் போவோம்!

நம்முடைய தேவை எல்லாம் தொழிலின் மூலம் பூர்த்தி செய்யப்பட  வேண்டும். அதற்காகத்தானே நாம் தொழிலில் இருக்கிறோம்? தொழிலை சரியான நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தொழிலை விட்டு நம்மாலும் ஓடிவிட முடியாது. நமக்கு உடலில் சக்தி இருக்கும் வரை நாம் உழைக்கப் போகிறோம்.  நமக்கு எப்போது ஓய்வு என்பதை யாராலும் அனுமானிக்க முடியாது! இருக்கும் வரை வேலை! அவ்வளவு தான்! நமது முன்னோடிகள் எல்லாம் அப்படித்தானே?

நாம் எந்நேரமும் தொழில், தொழில் தொழில் தான்! நாம் மூச்சு விடும் போதும் சரி,  தூங்கும் போது சரி, விழிக்கும் போதும் சரி, காலை மாலை இப்படி எல்லாக் காலங்களிலும் தொழில் தொழில் தொழில் மட்டும் தான். இதற்கெல்லாம் நமக்கு முன்னோடிகள் இருக்கிறார்கள்!  சீனர்கள் அப்படித்தானே இருக்கிறார்கள்!  அவர்கள் குடும்பங்கள் மகிழ்ச்சியாகத்தானே இருக்கின்றன. பொருளாதாரம் வலிமை பெற்றிருந்தால் மற்ற வலிமைகள் எல்லாம் தானாகவே வந்துவிடும்!

அருமை நண்பா! தொழில் என்று வந்துவிட்ட பின்னர் பொருளாதார வலிமைக்குத்தான் முதலிடம். பொருளாதார வலிமை தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது.

பொருளாதார வலிமையைப் பெருக்கிக் கொள்ளுங்கள்! வளமாக வாழுங்கள்!