Saturday, 8 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி .......! (51)

 பணம் தான் வியாபாரம்!

நாட்டுக்கோட்டை செட்டியார் என்றாலே நம்மில் பெரும்பாலும் அறிந்திருப்பர். மலாய் மொழியில் பேசும் போது பணக்காரர்களை "செட்டி"  என்று குறிப்பிடும் அளவுக்கு செட்டியார்கள் மிகவும் பிரபலம்!

பொதுவாக இவர்களின் காலம் என்பது தமிழ் முஸ்லிம்கள் வருகைக்குப் பின்னரே நிகழ்ந்திருக்கிறது எனலாம்.

இவர்களிடம் உள்ள குறிப்பிடத்தக்க அமசம் என்பது இவர்கள் வியாபாரம் செய்ய வந்தவர்கள் என்பதை விட இவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பண உதவி செய்து அதன் மூலம்  மற்றவர்களைப் பொருளாதார வளர்ச்சி பெறச் செய்தவர்கள் என்று சொல்லலாம். அது தான் லேவாதேவி தொழில்.

ஆமாம்,  வங்கிகள் அதிகம் இல்லாத ஒரு காலக்கட்டத்தில் இவர்கள் தான் பெரும்பாலும் வங்கிகளாக செயல்பட்டனர்.  அந்த வகையில் நாட்டின் வளர்ச்சிக்கு இவர்களின் பங்கு அளப்பரியது.

அந்த காலக்கட்டத்தில் சீனர்களும் தொழிலாளர்களாகத்தான் வேலை செய்து வந்திருக்கின்றனர். அதனால் வியாபாரத்துறையில் அவர்களின் ஈடுபாடு அதிகம் இல்லை. அதன் பின்னர் தான் சீனர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு செட்டியார்கள் பெரும் அளவில் பங்காற்றிருக்கின்றனர்.

இப்போது வங்கிகள் அதிகம் பெருகிவிட்டதால் செட்டியார்களின் லேவாதேவி தொழில் என்பது நசிந்து விட்டது என்று சொல்லலாம். அதனால் அவர்கள் வேறு பல தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். செட்டியார் சமூகத்தினர் மற்றவர்களிடம் போய் வேலை செய்வது என்பது அரிது. தங்களை ஏதோ ஒரு வகையில் வியாபாரத்தில் ஈடுபடுத்திக் கொள்ளுவது என்பது தான் அதிகம்.

மலேசிய நாட்டின் பல சிறிய பெரிய நகரங்களில் அவர்கள் தொழில் செய்யாத இடமே இல்லை. இன்று வங்கிகள் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் அவர்கள் இருந்திருக்கின்றனர்.

தமிழ்ச் சமூகத்தில் செட்டியார் சமூகத்தினர் தனித்து நிற்கின்றனர், அவர்களுக்கென்று ஒரு முருகன் கோயில். தனி கணக்கு வழக்குகள்.  கூடிப்பேசி முடிவு எடுப்பது. சமூகத்தில் எந்த அடிதடியும் இல்லை. வர்த்தகத்தில் மட்டும் ஈடுபாடு.  தங்களின் கட்டுப்பாட்டில் பல நிறுவனங்கள்.    நாட்டின் பல துறைகளில்  முத்திரைப் பதித்திருக்கின்றனர். அமைதியான சமூகம் என்று பெயர் எடுத்திருக்கின்றனர்.

நாட்டுக்கோட்டை செட்டியார்கள் நமது தமிழ்ச் சமூகத்தின் பெருமை மிக்க சமூகம். அவர்களின் வழி தனி வழியாகத்தான் இன்றுவரை உள்ளது. மற்ற சமூகத்தினருக்கு நல்ல வழிகாட்டியாகவும் உள்ளனர்.

பணம் பணத்தைக் கொண்டு வரும்!  முன்னேற்றத்தையும் கொண்டு வரும்!

Friday, 7 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி......! (50)

வியாபாரந்தான் அவர்களது தொழில்!


 
தமிழ் முஸ்லிம்கள் பினாங்கு மாநிலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தவர்கள்.  அவர்கள் வந்த காலந்தொட்டே வியாபாரம் தான் அவர்களின் தொழில்.  வெள்ளைக்காரர்கள் அங்கு வருவதற்கு முன்னரே அவர்கள் அங்கிருந்து தொழில் செய்து வருகின்றனர்.

தமிழ் முஸ்லிம்கள் சிறிய  சமூகத்தினர் தான். இப்போதும்  அதே நிலை தான். அவர்கள் அந்த காலத்து மலேயாவிற்கு வரும் போது ஆயிரக்கணக்கிலோ இலட்சக்கணக்கிலோ வரவில்லை. சிறு சிறு குழுக்கலாக வந்தவர்கள்.

ஆரம்பக் காலத்தில்  சிறிய சிறிய மளிகைக் கடைகள், உணவுக் கடைகள்,  சைக்களில் பொருள்களை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வது போன்றவைகளில் தான் அவர்கள் கவனம் செலுத்தினர். அத்தோடு இன்னும் கடற்கரை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டனர்.

அன்று அவர்களால் ஏற்படுத்தப்பட்ட பல தொழில்கள் இன்று உலக அளவில் சென்று விட்டன. இன்று அவர்களின் தொழில்கள் பல அவர்களின் வாரிசுகளால் வெற்றிகரமாக நடத்தப்படுகின்றன.

அன்று நமது தமிழ் முஸ்லிம்கள் ஊரறியாத  இந்த ஊருக்கு வந்து, இங்கு  வந்து வேலை செய்து, அதில் கிடைத்த ஊதியத்திலிருந்து சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டு தங்களை வளர்த்துக் கொண்டனர். அன்று அவர்கள் செய்த அந்த வியாபாரங்கள் தான் இன்று வளர்ந்து ஆலமரமாக 
நிற்கின்றன.

அவர்களுடைய வாரிசுகள் இன்று பல துறைகளில் வளர்ச்சி அடைந்திருக்கின்றனர். வியாபாரம், அரசியல், அரசாங்க வேலைகள் என்று பெரிய அளவில் அவர்களின் முன்னேற்றம் அமைந்திருக்கின்றது. வியாபாரத்துறை இன்றளவும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

ஒரு கணம் அவர்களது வளர்ச்சியைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போம். அவர்கள் இங்கு  வந்த போது பினாங்கு என்பதே ஏதோ ஒரு பெரிய கிராமமாகத்தான் இருந்திருக்க வேண்டும். துறைமுகம் இருந்ததால் அதனையொட்டி பல தொழில்கள்  தோன்றிருக்கின்றன. அந்த சூழலை வைத்து அவர்கள் தங்களது வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டனர்.

தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந்த போது பணத்தோடு வரவில்லை. கிடைத்த வேலைகளைச் செய்து, கிடைத்த பணத்தை சேர்த்து வைத்து, அதன் மூலம் சிறு சிறு வியாபாரங்கள் செய்து தங்களை வளர்த்துக் கொண்டனர். அன்று அந்த சிறு வியாபாரிகள் தான் இன்றைய பினாங்கின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றனர். அவர்களும் இன்று பெரிய பெரிய நிறுவனங்களை நடத்துகின்றனர்.

ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். சிறிய அளவில் வியாபாரங்களில் ஈடுபட்ட தமிழ் முஸ்லிம்கள் இன்று பொருளாதாரத்தில் வலுவான நிலையில் உள்ளனர் என்பதை மறப்பதற்கில்லை.

இன்று அவர்கள் தமிழ்ச் சமூகத்திற்குப் பெருமை சேர்க்கின்றனர்!


Wednesday, 5 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி........! (49)


அனுபவங்கள் வெற்றிக்கு அடையாளம்


ஒரு தொழில் முனைவருக்கு தோல்விகள் என்பது வெற்றிக்கான அடையாளம். எத்தனை தோல்விகள் அடைந்தாலும் அடுத்தடுத்து அவர்களது முயற்சிகள் தொடரும்.

தொழில் செய்வதில் தடைகள் வரத்தான் செய்யும். அப்படி  தடையே இல்லாவிட்டால் யார் வேண்டுமானாலும் தொழிலை கையில் எடுப்பார்கள்!  ஓரிரு தடைகள் மட்டும் தான் என்றால்  எல்லாருமே தொழில் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.  தொழிலில் பல தடைகள், பல பிரச்சனைகள், பண பிரச்சனைகள் உள்பட அனைத்தும் உண்டு!

அதனால் தான் நமது இனத்தினர் தொழில் என்றாலே ரொம்பவும் யோசிக்கின்றனர். கடைசிவரை யோசித்துக் கொண்டே இருக்கின்றனர்! அங்கு தான் தவறுகள் நடக்கின்றன. யோசித்து ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என்றால் அதற்கு யோசிக்காமலே இருந்து விடலாம்! ஏன் அந்த சுமையை சுமந்து கொண்டே இருக்க வேண்டும்? ஆமாம், அதுவும் ஒரு சுமை தானே!

ஆனால் ஒன்று உங்களின் இயலாமையை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு இலவசமாக உங்களின் இயலாமையைப்  பரப்பிக் கொண்டு திரியாதீர்கள்!

தொழில் முனைவோர் என்றாலே அவர்களுக்கு அசாதாரண செயல்கள் செய்வதில் அசாத்தியமானவர்கள்.  எத்தனை தோல்விகள் வந்தாலும்  "நீயா நானா ஒரு கை பார்ப்போம்!" என்கிற மனநிலையில் இருப்பவர்கள். தோல்விகள் அவர்களைத் தலைநிமிரச் செய்யுமே தவிர துவண்டுப் போகச் செய்யாது!

எத்தனை தோல்விகள் வந்தாலும் அதனை வெற்றியாக மாற்றும் திறமை தொழில் முனைவோருக்கு உண்டு. அவர்கள் தான் உண்மையான தொழில் முனைவோர். அவர்கள் தோல்விகளை பாடமாக எடுத்துக் கொள்வார்கள். பாடமாக எடுத்துக் கொண்டு தங்களது தொழிலைத் தொடர்வார்கள்.

தோல்விகளே வெற்றிப்படிகள்!