அனுபவங்கள் வெற்றிக்கு அடையாளம்
ஒரு தொழில் முனைவருக்கு தோல்விகள் என்பது வெற்றிக்கான அடையாளம். எத்தனை தோல்விகள் அடைந்தாலும் அடுத்தடுத்து அவர்களது முயற்சிகள் தொடரும்.
தொழில் செய்வதில் தடைகள் வரத்தான் செய்யும். அப்படி தடையே இல்லாவிட்டால் யார் வேண்டுமானாலும் தொழிலை கையில் எடுப்பார்கள்! ஓரிரு தடைகள் மட்டும் தான் என்றால் எல்லாருமே தொழில் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். தொழிலில் பல தடைகள், பல பிரச்சனைகள், பண பிரச்சனைகள் உள்பட அனைத்தும் உண்டு!
அதனால் தான் நமது இனத்தினர் தொழில் என்றாலே ரொம்பவும் யோசிக்கின்றனர். கடைசிவரை யோசித்துக் கொண்டே இருக்கின்றனர்! அங்கு தான் தவறுகள் நடக்கின்றன. யோசித்து ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என்றால் அதற்கு யோசிக்காமலே இருந்து விடலாம்! ஏன் அந்த சுமையை சுமந்து கொண்டே இருக்க வேண்டும்? ஆமாம், அதுவும் ஒரு சுமை தானே!
ஆனால் ஒன்று உங்களின் இயலாமையை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு இலவசமாக உங்களின் இயலாமையைப் பரப்பிக் கொண்டு திரியாதீர்கள்!
தொழில் முனைவோர் என்றாலே அவர்களுக்கு அசாதாரண செயல்கள் செய்வதில் அசாத்தியமானவர்கள். எத்தனை தோல்விகள் வந்தாலும் "நீயா நானா ஒரு கை பார்ப்போம்!" என்கிற மனநிலையில் இருப்பவர்கள். தோல்விகள் அவர்களைத் தலைநிமிரச் செய்யுமே தவிர துவண்டுப் போகச் செய்யாது!
எத்தனை தோல்விகள் வந்தாலும் அதனை வெற்றியாக மாற்றும் திறமை தொழில் முனைவோருக்கு உண்டு. அவர்கள் தான் உண்மையான தொழில் முனைவோர். அவர்கள் தோல்விகளை பாடமாக எடுத்துக் கொள்வார்கள். பாடமாக எடுத்துக் கொண்டு தங்களது தொழிலைத் தொடர்வார்கள்.
தோல்விகளே வெற்றிப்படிகள்!
No comments:
Post a Comment