Saturday 8 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி .......! (51)

 பணம் தான் வியாபாரம்!

நாட்டுக்கோட்டை செட்டியார் என்றாலே நம்மில் பெரும்பாலும் அறிந்திருப்பர். மலாய் மொழியில் பேசும் போது பணக்காரர்களை "செட்டி"  என்று குறிப்பிடும் அளவுக்கு செட்டியார்கள் மிகவும் பிரபலம்!

பொதுவாக இவர்களின் காலம் என்பது தமிழ் முஸ்லிம்கள் வருகைக்குப் பின்னரே நிகழ்ந்திருக்கிறது எனலாம்.

இவர்களிடம் உள்ள குறிப்பிடத்தக்க அமசம் என்பது இவர்கள் வியாபாரம் செய்ய வந்தவர்கள் என்பதை விட இவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பண உதவி செய்து அதன் மூலம்  மற்றவர்களைப் பொருளாதார வளர்ச்சி பெறச் செய்தவர்கள் என்று சொல்லலாம். அது தான் லேவாதேவி தொழில்.

ஆமாம்,  வங்கிகள் அதிகம் இல்லாத ஒரு காலக்கட்டத்தில் இவர்கள் தான் பெரும்பாலும் வங்கிகளாக செயல்பட்டனர்.  அந்த வகையில் நாட்டின் வளர்ச்சிக்கு இவர்களின் பங்கு அளப்பரியது.

அந்த காலக்கட்டத்தில் சீனர்களும் தொழிலாளர்களாகத்தான் வேலை செய்து வந்திருக்கின்றனர். அதனால் வியாபாரத்துறையில் அவர்களின் ஈடுபாடு அதிகம் இல்லை. அதன் பின்னர் தான் சீனர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு செட்டியார்கள் பெரும் அளவில் பங்காற்றிருக்கின்றனர்.

இப்போது வங்கிகள் அதிகம் பெருகிவிட்டதால் செட்டியார்களின் லேவாதேவி தொழில் என்பது நசிந்து விட்டது என்று சொல்லலாம். அதனால் அவர்கள் வேறு பல தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். செட்டியார் சமூகத்தினர் மற்றவர்களிடம் போய் வேலை செய்வது என்பது அரிது. தங்களை ஏதோ ஒரு வகையில் வியாபாரத்தில் ஈடுபடுத்திக் கொள்ளுவது என்பது தான் அதிகம்.

மலேசிய நாட்டின் பல சிறிய பெரிய நகரங்களில் அவர்கள் தொழில் செய்யாத இடமே இல்லை. இன்று வங்கிகள் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் அவர்கள் இருந்திருக்கின்றனர்.

தமிழ்ச் சமூகத்தில் செட்டியார் சமூகத்தினர் தனித்து நிற்கின்றனர், அவர்களுக்கென்று ஒரு முருகன் கோயில். தனி கணக்கு வழக்குகள்.  கூடிப்பேசி முடிவு எடுப்பது. சமூகத்தில் எந்த அடிதடியும் இல்லை. வர்த்தகத்தில் மட்டும் ஈடுபாடு.  தங்களின் கட்டுப்பாட்டில் பல நிறுவனங்கள்.    நாட்டின் பல துறைகளில்  முத்திரைப் பதித்திருக்கின்றனர். அமைதியான சமூகம் என்று பெயர் எடுத்திருக்கின்றனர்.

நாட்டுக்கோட்டை செட்டியார்கள் நமது தமிழ்ச் சமூகத்தின் பெருமை மிக்க சமூகம். அவர்களின் வழி தனி வழியாகத்தான் இன்றுவரை உள்ளது. மற்ற சமூகத்தினருக்கு நல்ல வழிகாட்டியாகவும் உள்ளனர்.

பணம் பணத்தைக் கொண்டு வரும்!  முன்னேற்றத்தையும் கொண்டு வரும்!

No comments:

Post a Comment