Sunday, 5 June 2022
வீடு வாங்குகிறீர்களா?
Saturday, 4 June 2022
நான் வழிமொழிகிறேன்!
அவர்கள் சொல்ல வருவதெல்லாம் இப்போதைக்கு அடுத்த பொதுத் தேர்தல் தேவை இல்லை என்பது தான்.
ஒரு சிலர், அம்னோ தரப்பிலிருந்து, வேறு விதமாக இதனைக் கயிறு திரிக்கின்றனர்! 'ஏன் தேர்தலைத் தாமதப்படுத்துகிறீர்கள்?' என்று கேளவிகளை எழுப்புகின்றனர். இந்த அறிவிலிகள் ஒன்று அறியாதவர்களா? தேர்தலை இங்கு யாரும் தாமதப்படுத்தவில்லை! அடுத்தப் பொதுத் தேர்தல் என்பது இன்னும் ஓராண்டுக்குப் பின்னர் என்பதை இவர்கள் அறிந்தவர்கள் தான்.
தேர்தலை நடத்த வேண்டும் என்று அவசரப்படுத்தும் அவசரக்குடுக்கைகள் யார்? எல்லாருமே ஏதோ ஒரு வகையில் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளவர்கள் தான்! இவர்களெல்லாம் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்தால் அடுத்த பொதுத்தேர்தல் என்பது அவர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் என்பதை முழுமையாக புரிந்து வைத்திருக்கிறார்கள்!
இவர்களின் சுயநலத்திற்காகவே பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கின்றனர்!
பொது மக்களைப் பொறுத்தவரை தேர்தலை எதிர்கொள்ள யாரும் தயாராக இல்லை. விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, உணவு பொருள்களின் விலை உயர்வு - எல்லாமே உயர்வு உயர்வு என்று மக்கள் புலம்பிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் தேர்தலை யாரும் விரும்புவதாக இல்லை.
ஆனால் இந்த சூழலே அம்னோவுக்குச் சாதகமாக இருக்கும் என்று அம்னோ நம்புகிறது. மக்கள் தேர்தலைப் புறக்கணித்தால் அது அம்னோவுக்கு இலாபம். காரணம் அவர்கள் கட்சியினர் திரண்டு வந்து பாரிசானுக்கு வாக்களிப்பர் என்பது தான் அவர்கள் போடும் கணக்கு. இது எதிர்கட்சிகளுக்குப் பாதகமாக அமையும்.
அதனால் நியாயப்படி தேர்தல் எப்போது நடக்க வேண்டுமோ அப்போது நடக்கட்டும். மக்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ அவர்கள் பக்கம் வாக்களிக்கட்டும். அப்போது யாரும் குறை சொல்லப்போவதில்லை! இப்போது தேர்தல் வைப்பது ஒரு தலைசார்பாக அமையலாம்! சாத்தியம் உண்டு.
தேர்தல் இப்போதைக்குத் தேவை இல்லை என்பதே நமது நிலைப்பாடு. பிரதமர் இஸ்மாயில் சப்ரி அம்னோவின் நெருக்குதல்களுக்கு அசைந்து கொடுக்கக் கூடாது. பிரதமர் இஸ்மாயில் இந்த தவணை மட்டுமே, இன்னும் ஓராண்டு மட்டுமே, பிரதமராக இருக்க முடியும். அதுவும் எதிர்கட்சிகளின் தற்காலிக ஒப்பந்தத்தின் படி அவர் இருக்க முடியும். அதன் பின்னர் அவர் பிரதமர் என்கிற கனவை மறந்துவிட வேண்டியது தான்! இருக்கிற இந்த நல்ல நேரத்தை, பிரதமர் பதவியை, நல்ல நோக்கத்துக்காக அவர் பயன்படுத்தட்டும்.
தேர்தல் இப்போதைக்குத் தேவை இல்லை!
Friday, 3 June 2022
தயக்கத்தை ஒதுக்கித் தள்ளுங்கள்!
தயக்கம், பயம் என்று எப்படிச் சொன்னாலும் அதன் தாக்கம் என்பது எல்லாரிடமும் உண்டு. பெரும்பாலும் அனைவரிடமும் உண்டு.
நாம் பல காரியங்களைச் செய்ய முடியாததற்குக் காரணம் தயக்கம் தான். தயக்கம் உள்ளவர்கள் அனைவற்றிலும் பின்தள்ளப்படுகிறார்கள். தயக்கத்தினால் நாம் முன்வராத போது மற்றவர்கள் முன்வந்து எளிதாக கைப்பற்றிவிடுகிறார்கள்!
நமக்கு ஆங்கிலம் பேசத் தெரிந்தாலும் "சரியாகப் பேசுகிறோமா! தவறாகப் பேசுகிறோமா! மற்றவர்கள் சிரிப்பார்களா!" இப்படி பலவாறாகத் தயங்கித் தயங்கி கடைசியில் பேச முடியாமலேயே தோல்வியைத் தழுவி விடுகிறோம்!! இன்னொருவன் அரைகுறை ஆங்கிலத்தில் பேசி மற்றவர்களை அசத்தி விடுகிறான்! வெற்றியும் பெற்றுவிடுகிறான்.
தேவையெல்லாம் பேச வேண்டும் அவ்வளவு தான். யார் பேசுகிறானோ அவன் வெற்றி பெறுகிறான். பேசத் தயங்கியவன் தோல்வியோடு போகிறான்!
எல்லாவற்றுக்கும் தேவை ஒரு துணிச்சல் தான். துணிச்சல் உள்ளவன் சாதித்து விடுகிறான்.
ஒரு சீன இளைஞன் புதிதாக வேலைக்கு வந்திருந்தான். அவன் சீன இடைநிலைப்பள்ளியில் படித்தவன். வேலைக்குத் தகுதியானவன் தான். நாங்கள் பேசுவது பெரும்பாலும் ஆங்கில மொழியில். அந்த இளைஞன் ஆங்கில பேசினால் சிரிக்கும்படியாகத் தான் இருக்கும்! அவன் எது பற்றியும் கவலைப்படவில்லை. அவன் பேசுவது தான் ஆங்கிலம்! 'கேட்டா கேள்! இல்லாவிட்டால் போ!' என்பது போல் பேசுவான்! எப்போதும் ஆங்கில பத்திரிக்கையைக் கையில் வைத்திருப்பான். ஒரு சில மாதங்களில் தனது பிழைகளைத் திருத்திக் கொண்டு நன்றாகவே பேச ஆரம்பித்து விட்டான்! இந்த இடத்தில் நமது இளைஞர்களை வைத்து பொருத்திப் பார்த்தால் வருத்தம் தான் வரும்!
எத்தனையோ திறமைசாலிகள், வசதி படைத்தவர்கள் யாராக இருந்தாலும் சரி நாலு பேர் முன்னால் அல்லது ஒரு மேடையில் நின்று பேச எத்தனை பேரால் முடியும்? வேர்த்து விறுவிறுத்துப் போகாதா! உலகிலேயே மிகவும் சிரமத்திற்குரிய காரியம் என்றால் அது மேடையில் பேசுவதுதான்!
நம்முள் இப்படி ஒரு தயக்கம் இருந்தால் ஒன்று செய்யலாம். நாலு பேர் முன்னால் பேசுங்கள். வாய்ப்புக் கிடைத்தால் மேடையில் பேசுங்கள். மேடையில் பேசி பழகிவிட்டால் அதற்குப்பின் எங்கு வேண்டுமானாலும் பேசிவிட முடியும். தயக்கம் போய்விடும்.
தயக்கம் நம்மை எல்லாவற்றிலிருந்தும் தள்ளி வைக்கும்! அதிலிருந்து நாம் விடுபட வேண்டும்!