Saturday 4 June 2022

நான் வழிமொழிகிறேன்!

 


பினாங்கு மாநில துணை முதல்வர், பேராசிரியர் டாக்டர் இராமசாமி அவர்கள்  சொன்னதை நான் வழி மொழிகிறேன்! அவர் மட்டும் அல்ல சுகாதார அமைச்சர் கைரி ஜாமாலுடின் அவர்களும் இதே கருத்தைத்தான்  வலியுறுத்தியிருக்கிறார்.

அவர்கள் சொல்ல வருவதெல்லாம் இப்போதைக்கு அடுத்த பொதுத் தேர்தல் தேவை இல்லை என்பது தான்.

ஒரு சிலர்,  அம்னோ தரப்பிலிருந்து,   வேறு விதமாக இதனைக் கயிறு திரிக்கின்றனர்!  'ஏன் தேர்தலைத் தாமதப்படுத்துகிறீர்கள்?' என்று கேளவிகளை எழுப்புகின்றனர். இந்த அறிவிலிகள் ஒன்று அறியாதவர்களா?  தேர்தலை  இங்கு  யாரும் தாமதப்படுத்தவில்லை!  அடுத்தப் பொதுத் தேர்தல் என்பது இன்னும் ஓராண்டுக்குப் பின்னர்  என்பதை இவர்கள் அறிந்தவர்கள் தான்.

தேர்தலை நடத்த வேண்டும் என்று அவசரப்படுத்தும் அவசரக்குடுக்கைகள் யார்?  எல்லாருமே ஏதோ ஒரு வகையில் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளவர்கள் தான்! இவர்களெல்லாம் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்தால் அடுத்த பொதுத்தேர்தல் என்பது அவர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் என்பதை முழுமையாக புரிந்து வைத்திருக்கிறார்கள்! 

இவர்களின் சுயநலத்திற்காகவே பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கின்றனர்!

பொது மக்களைப் பொறுத்தவரை தேர்தலை எதிர்கொள்ள யாரும் தயாராக இல்லை. விலைவாசி உயர்வு,  பெட்ரோல் டீசல் விலை உயர்வு, உணவு பொருள்களின் விலை உயர்வு - எல்லாமே உயர்வு உயர்வு என்று மக்கள்  புலம்பிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் தேர்தலை யாரும் விரும்புவதாக இல்லை. 

ஆனால் இந்த சூழலே அம்னோவுக்குச் சாதகமாக இருக்கும் என்று அம்னோ நம்புகிறது. மக்கள் தேர்தலைப் புறக்கணித்தால்  அது அம்னோவுக்கு இலாபம். காரணம் அவர்கள் கட்சியினர் திரண்டு வந்து பாரிசானுக்கு வாக்களிப்பர் என்பது தான் அவர்கள் போடும்  கணக்கு. இது எதிர்கட்சிகளுக்குப் பாதகமாக அமையும்.

அதனால் நியாயப்படி தேர்தல் எப்போது நடக்க வேண்டுமோ அப்போது நடக்கட்டும். மக்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ அவர்கள் பக்கம் வாக்களிக்கட்டும். அப்போது யாரும் குறை சொல்லப்போவதில்லை! இப்போது தேர்தல் வைப்பது ஒரு தலைசார்பாக அமையலாம்! சாத்தியம் உண்டு.

தேர்தல் இப்போதைக்குத் தேவை இல்லை என்பதே நமது நிலைப்பாடு.  பிரதமர் இஸ்மாயில் சப்ரி அம்னோவின் நெருக்குதல்களுக்கு அசைந்து கொடுக்கக் கூடாது. பிரதமர் இஸ்மாயில் இந்த தவணை மட்டுமே, இன்னும் ஓராண்டு மட்டுமே, பிரதமராக இருக்க முடியும். அதுவும் எதிர்கட்சிகளின் தற்காலிக ஒப்பந்தத்தின் படி அவர் இருக்க முடியும். அதன் பின்னர் அவர் பிரதமர் என்கிற கனவை மறந்துவிட வேண்டியது தான்! இருக்கிற இந்த நல்ல நேரத்தை, பிரதமர் பதவியை,  நல்ல நோக்கத்துக்காக அவர்  பயன்படுத்தட்டும்.

தேர்தல் இப்போதைக்குத் தேவை இல்லை!

No comments:

Post a Comment