Sunday 5 June 2022

வீடு வாங்குகிறீர்களா?

 


வீடு வாங்குகிறீர்களா? நல்ல விஷயம். நம் சமுதாயத்தினருக்கு மிகவும் தேவையான விஷயம். சொந்த வீடு இல்லாமல் எப்படி காலத்தைக் கழிப்பது? அதனால் 'தலைக்கு மேல் கூரை' என்பதை நம் சமுதாயம்  எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறது.

வீடு வாங்குவதில் இப்போது மிகவும் சிக்கலான காலகட்டம். அந்த காலம் போல மலிவு வீடுகள், நடுத்தர வீடுகள், அதிக விலையுள்ள வீடுகள் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு விற்பனையில் இருந்தன. அவை அரசாங்கத்தால் கட்டப்பட்ட வீடுகள்.

இப்போதோ அனைத்தும் தனியார் மயம்.  மலிவு விலை வீடுகளுக்குத் தனியார் நிறுவனங்கள் 'பை! பை!' சொல்லிவிட்டார்கள்!  தனியார் நிறுவனங்கள் இப்போது கட்டும் வீடுகள் அனைத்தும் ஐந்து இலட்சம், ஆறு இலட்சம் என்று விலைகளை நிர்ணயத்திருக்கின்றனர். அதனால் சராசரி குடும்பங்கள் வீடு வாங்குகின்ற சக்தியை இழந்துவிட்டனர். அது மட்டும் அல்ல வீடு வாங்கிய பின்னர் வாங்கியவர்கள் மேலும் ஒரு இலட்சத்திற்கும் மேல் சேலவு செய்ய வேண்டி வரும்! அந்த அளவுக்குத் தரமற்ற வீடுகளைத் தான் இப்போது பார்க்க முடிகிறது! அரசாங்கம் அதனைக் கண்டு கொள்வதில்லை! அது தான் பிரச்சனையே!

இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.  நீங்கள் வங்கியில் கடன் எடுத்துத் தான் ஆக வேண்டும் என்கிற சூழ்நிலை இருந்தால் எத்தனை ஆண்டுகள் நீங்கள் கடன் வாங்கப்போகிறீர்கள் என்பதில் கவனமாய் இருங்கள். முப்பது, முப்பத்தைந்து ஆண்டு கடன் என்றால் நான் அதனை ஆதரிக்கவில்லை. என்னுடைய சிபாரிசு என்றால் பத்து ஆண்டுகள் அல்லது மிஞ்சி மிஞ்சிப் போனால் பதினைந்து  ஆண்டுகள்! அவ்வளவு தான்! அதற்கு மேல் வேண்டாம் என்பது எனது கருத்து.

முப்பது ஆண்டுகள் என்னும் போது நீங்கள் வேலையில் இருப்பீர்களா உங்கள் பிள்ளைகள் தொடர்ந்து மாதத் தவணைகளைக் கட்டுவார்களா அல்லது அவர்கள் என்ன நிலையில் இருப்பார்கள் - இப்படி பலவற்றை யோசிக்க வேண்டியுள்ளது. முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அது பழைய வீடாகிவிடும்.  அது தேவையில்லை என்கிற நிலைமைக்குப் பிள்ளைகள்  வரலாம். அதனால் தவணையைக் கட்டாமல் தவிர்க்கலாம். அந்த வீடு பழையபடி வங்கிக்கே போக வேண்டிய சூழ்நிலை வரலாம்! பெற்றோர் கஷ்டப்பட்டு உழைத்து சுமார் 25 ஆண்டுகள் தவணைகளைக் கட்டிய பின்னர் அத்தனையும் வீணாகிவிடும்!  "வங்கிக்கே போனால் போகட்டும்!" என்று சொல்லும் மருமகள்களும் இருக்கிறார்கள்! பாதிக்கப்பட்ட  ஒரு வயதானவர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எதுவும் நடக்கலாம்.

அதனால் உங்கள் காலத்தில் நிம்மதியாக இருக்க வேண்டுமானால் - நீங்கள் வாங்குகிற வீடு உங்களுக்குச் சொந்தமாக இருக்க வேண்டுமானால் - தவணை ஆண்டுகளை முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள்.

நான் சொல்ல வருவதெல்லாம்  பத்து ஆண்டுகள் அல்லது பதினைந்து ஆண்டுகள் - நீங்கள் நிம்மதியாக உங்கள் கடைசி காலத்தைக் கழிப்பீர்கள்! புலம்ப வேண்டிய சூழல் வராது!

No comments:

Post a Comment