Friday 3 June 2022

தயக்கத்தை ஒதுக்கித் தள்ளுங்கள்!

 

தயக்கம், பயம் என்று எப்படிச் சொன்னாலும் அதன் தாக்கம் என்பது எல்லாரிடமும் உண்டு.  பெரும்பாலும் அனைவரிடமும் உண்டு.

நாம் பல காரியங்களைச் செய்ய முடியாததற்குக்  காரணம் தயக்கம் தான்.  தயக்கம் உள்ளவர்கள் அனைவற்றிலும்  பின்தள்ளப்படுகிறார்கள்.  தயக்கத்தினால்  நாம் முன்வராத போது மற்றவர்கள் முன்வந்து எளிதாக  கைப்பற்றிவிடுகிறார்கள்!

நமக்கு ஆங்கிலம்  பேசத் தெரிந்தாலும்  "சரியாகப் பேசுகிறோமா! தவறாகப் பேசுகிறோமா! மற்றவர்கள் சிரிப்பார்களா!"  இப்படி பலவாறாகத் தயங்கித்  தயங்கி கடைசியில் பேச முடியாமலேயே தோல்வியைத் தழுவி விடுகிறோம்!! இன்னொருவன் அரைகுறை ஆங்கிலத்தில் பேசி மற்றவர்களை அசத்தி விடுகிறான்! வெற்றியும் பெற்றுவிடுகிறான்.

தேவையெல்லாம் பேச வேண்டும் அவ்வளவு தான். யார் பேசுகிறானோ அவன் வெற்றி பெறுகிறான். பேசத் தயங்கியவன் தோல்வியோடு போகிறான்!

எல்லாவற்றுக்கும் தேவை ஒரு துணிச்சல் தான். துணிச்சல்  உள்ளவன் சாதித்து விடுகிறான்.

ஒரு சீன இளைஞன் புதிதாக வேலைக்கு வந்திருந்தான். அவன் சீன இடைநிலைப்பள்ளியில் படித்தவன்.  வேலைக்குத் தகுதியானவன் தான்.  நாங்கள் பேசுவது பெரும்பாலும் ஆங்கில மொழியில்.  அந்த இளைஞன் ஆங்கில பேசினால் சிரிக்கும்படியாகத் தான் இருக்கும்! அவன் எது பற்றியும் கவலைப்படவில்லை. அவன் பேசுவது தான் ஆங்கிலம்!  'கேட்டா கேள்! இல்லாவிட்டால் போ!' என்பது போல் பேசுவான்! எப்போதும்  ஆங்கில பத்திரிக்கையைக் கையில்  வைத்திருப்பான். ஒரு சில மாதங்களில் தனது பிழைகளைத் திருத்திக் கொண்டு நன்றாகவே பேச ஆரம்பித்து விட்டான்! இந்த இடத்தில் நமது இளைஞர்களை வைத்து பொருத்திப் பார்த்தால் வருத்தம் தான் வரும்!

எத்தனையோ திறமைசாலிகள், வசதி படைத்தவர்கள் யாராக இருந்தாலும் சரி நாலு பேர் முன்னால் அல்லது ஒரு மேடையில் நின்று பேச எத்தனை பேரால் முடியும்? வேர்த்து விறுவிறுத்துப் போகாதா! உலகிலேயே மிகவும் சிரமத்திற்குரிய காரியம் என்றால் அது மேடையில் பேசுவதுதான்!

நம்முள் இப்படி ஒரு தயக்கம் இருந்தால் ஒன்று செய்யலாம். நாலு பேர் முன்னால் பேசுங்கள். வாய்ப்புக் கிடைத்தால் மேடையில் பேசுங்கள். மேடையில் பேசி பழகிவிட்டால் அதற்குப்பின் எங்கு வேண்டுமானாலும் பேசிவிட முடியும். தயக்கம் போய்விடும்.

தயக்கம் நம்மை எல்லாவற்றிலிருந்தும் தள்ளி வைக்கும்! அதிலிருந்து நாம் விடுபட வேண்டும்!

No comments:

Post a Comment