Saturday, 3 September 2022

ஊழல்வாதிகள் வேட்பாளர்களா?

 


ஒரு சில அரசில்வாதிகள் ஏதோ ஞானம் பெற்றவர்கள் போல தங்களை அறியாமலே ஒரு சில கருத்துக்களை உதிர்த்துவிடுகின்றனர்! 

அவர்கள் தான் உண்மையான அரசியல்வாதிகள்! "சொல்லுவதோடு சரி!  சொல்வது போல நான் செயல்படமாட்டேன்!" இது தான் உண்மையான அரசியல்வாதியின் கொள்கை!

ஆனால் அவரே ஊழல் அரசியல்வாதியாக இருந்தாலும் அவருக்கு ஒரு நல்ல நோக்கம் இருக்கிறது!  "நாங்கள் ஊழல்வாதிகள் தான்! ஆனால் இனி மேல் வருபவர்கள் எங்களைப்போல் இருக்க வேண்டாம்!" என்று சொல்லுகின்ற துணிவாவது அவருக்கு இருக்கிறதே அதைப் பாராட்டுவோம்!

இன்று நமது நாட்டு அரசியலில் யார் வேட்பாளர்களாக அறிமுகப்படுத்தப் படுகின்றனர்?  சேவை மனப்பான்மையோடு அரசியலுக்கு வருபவர்கள் குறைந்து போயினர் என்கிற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. அதன் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும். "அவரிடம் பணம் இல்லை! அதனால் அவருக்குச் சேவையில் நாட்டம் இல்லை!" என்பதாக இவர்களே அதற்கு ஒரு வியாக்கியானம் கொடுப்பார்கள்!

அரசியல் கட்சிகள் பணம் உள்ள வேட்பாளர்களைத்தான் விரும்புகின்றனர். காரணம் அவர்களால் பணம் செலவு செய்ய முடியும். பணம் செலவு செய்பவர்கள் அரசியலுக்கு வர ஒரு நோக்கம் உண்டு. பணம் போட்டால் பணத்தை எடுக்க வேண்டும். இவர்களில் பலர் இதற்கு முன்னர் அதைத்தான் செய்தனர். அரசியலுக்கு வந்தால் அதைத்தான் அவர்கள் செய்வார்கள்! அவர்களுக்குச் சேவையைப் பற்றி "அனா, ஆவன்ன!"  கூட அறியாதவர்கள்! அது தான் அரசியல்!

நமக்கு இதுபற்றியெல்லாம் கவலை இல்லை. அரசியலை ஒதுக்கிவிட முடியாது. நமக்குத் தேவை அரசியலுக்கு நல்லவர்கள் வரவேண்டும். வல்லவர்கள் வரவேண்டும். கைசுத்தமானவர்கள் வரவேண்டும். ஊழல், கிரிமினல் பின்னணி உள்ளவர்களை அரசியலில் அனுமதிக்கக் கூடாது. இது தான் முக்கியம்.

எல்லா அரசியல் கட்சிகளும் இதனை ஒரு கொள்கையாகக் கொள்ள வேண்டும். தவறுகள் நடந்திருக்கலாம். அது தொடர வேண்டும் என்பது அவசியல் இல்லை. ஊழல் சாதாரண விஷயம் அல்ல. நாட்டை அரித்துத் தின்னும் ஒரு பயங்கர நோய். அதை வளர விடக்கூடாது என்பது தான் நமது நோக்கம்.

வருங்காலங்களில் அனைத்துக் கட்சியினரும் ஊழல் வாதிகளை வேட்பாளர்களாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று நாம் கெஞ்சிக் கேட்டுக்  கொண்டாலும் ஊழலுக்குப் பெயர் போன பாரிசான் போன்ற கட்சிகள் அதனை ஒரு பொருட்டாக மதிக்கப் போவதில்லை. அப்படியே அவர்கள் வளர்க்கப்பட்டவர்கள்!

அந்த குறிப்பிட்ட அரசியல்வாதி எதனை மனதில் வைத்துக் கொண்டு  சொன்னாரோ நமக்குத் தெரியாது. ஆனால் அது நல்ல கருத்து என்பதில் சந்தேகமில்லை.

அப்படியே ஊழல்வாதிகள் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும்  நாம் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

வாழ்க மலேசியா!

Friday, 2 September 2022

ஒதுக்கப்படுகிறாரா?

 

சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் வருகின்ற  பொதுத்தேர்தலில்  போட்டியிடுவாரா அல்லது ஒதுக்கப்படுவாரா எனறு பேச்சுக்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன!

நானும் ரம்பாவ் தொகுதியைச் சேர்ந்தவன் தான்.  கைரி எப்போதுமே சிரித்த முகத்துடனே வலம் வருபவர். நல்ல சுறுசுறுப்பான மனிதர். இளமைத் துள்ளும் முகம். இங்கிலாந்தில் படித்தவர். இன பாகுபாடின்றி பழகுபவர்.

எனக்கு அவர் எப்போதுமே பிடித்தமான மனிதர் தான். இந்த கோவிட்-19 காலகட்டத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர். இன்றைய நிலையிலும் சிறப்பாகவே பணியாற்றிக் கொண்டிருப்பவர்.  அவர் எப்போது சுகாதார அமைச்சராக தனது பணியை ஆரம்பித்தாரோ அப்போதிருந்தே  அவரது பணியைச் சிறப்பாகவே செய்து வந்திருக்கிறார்.

அம்னோ அவரை ஒதுக்குகிறதா அல்லது இதே தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும், அம்னோ  துணைத்தலைவருமான முகமட் ஹசான் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கைரியை ஒதுக்கிவிட்டு ஹசான்  நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட விரும்புகிறா  என்பது புரியவில்லை.

முகமட் ஹசானும் போட்டியிட்ட ரந்தாவ் தொகுதியில் செல்வாக்குப் பெற்றவர் தான். எல்லா இனத்தவரின் ஆதரவு அவருக்கும் உள்ளது. இருவருமே நல்ல சேவையாளர்கள் என்பதில் ஐயமில்லை. ஹசான் இத்தனை ஆண்டுகள் போட்டியிட்ட தொகுதிலேயே  போட்டியிட  வேண்டுமென்று விரும்புகிறார். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அவர் போட்டியிட பல தொகுதிகள் உள்ளன. அவர் மாநில முதலைமைச்சராக  இருந்தவர். அவர் மாநில அளவில் செல்வாக்கு உடையவர். எங்கும் போட்டியிடலாம்.

ஆனால் கைரியின் நிலை வேறு. அவர் ஒரு தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டவர்.  தனது தொகுதியில் செல்வாக்கை வளர்த்துக் கொண்டவர். அதனால் அவர் தொடர்ந்து தனது தொகுதியில் போட்டியிடுவதைத் தான் அவர் விரும்புவார்.

ஆனால் இப்போது நடப்பது என்ன என்று புரியவில்லை. கைரியை அம்னோ கைவிடுகிறதா அல்லது ஹசான்,  கைரியை கைவிடுமாறு  அம்னோவை நெருக்குகிறாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கைரி நல்ல சேவையாளர். அவர் தொடர்ந்து அம்னோவில் இருப்பது கட்சிக்கு நல்லது.  ஊழலையே மூலதனமாகக் கொண்ட ஒரு கட்சி அம்னோ.  கைரி போன்றவர்களின் பெயர் ஊழலில் இதுவரை சம்பந்தப்படவில்லை. 

மற்றவர்களிடம் இல்லாத சிறப்பு கைரியிடம் உள்ளது. அவர் எப்போதும் ஒரு படித்த மனிதராகவே நடந்து கொள்கிறார்.

அதுவே அவரது சிறப்பு!

Thursday, 1 September 2022

இலஞ்சம் நமது முதல் எதிரி!

 

இலஞ்சம் என்றாலும் சரி, ஊழல் என்றாலும் சரி, கையூட்டு என்றாலும் சரி, பெயர் தான் வித்தியாசமே தவிர மற்றபடி மக்களிடமிருந்து அரசியல்வாதிகள்  கொள்ளையடிக்கும் பணம் தான் இலஞ்சம்!

இன்று நமது நாட்டின் முதல் எதிரி என்றால் அது இலஞ்சம் தான். மேல்நிலை அரசியல்வாதிகளிலிருந்து  கீழ்நிலை அரசாங்க ஊழியன் வரை இலஞ்சத்தை மிக முக்கியமானதாகக்  கருதுகிறான்! இதற்கெல்லாம் காரணம் அரசியல்வாதிகள். பாதைப் போட்டுக் கொடுத்தவர்கள் அரசியல்வாதிகள்.

முன்பு இலஞ்சம் என்பதெல்லாம் சிறிய அளவில் நடந்து கொண்டிருந்தது. அது ஒன்றும் பெரிய அளவில் மக்களைப் பாதிக்கவில்லை. ஆனால் இப்போது இலஞ்சம் என்பது நாட்டையே பாதிக்கிறது. நாட்டுப்பற்றுள்ள, சமயப்பற்றுள்ள ஒருவன் செய்யத் துணியாததை இலஞ்சம்  செய்யத் துணிய வைக்கிறது!

நமது இந்திய அரசியல் தலைவர்கள் இலஞ்சத்திலேயே ஊறிப்போனவர்கள். மக்களைக் கொள்ளையடித்தார்கள். பள்ளி நிலங்களைக் கொள்ளையடித்தார்கள். ஆனால் அவர்களை யாரும் ஒன்றும் செய்யும் முடியவில்லை! வெளியே தைரியமாக, வெட்ட வெளியில் சுற்றி வருகிறார்கள்! அதனால் தான் இன்றைய இந்தியத் தலைவர்களைப் பலர் பின்பற்ற நினைக்கிறார்கள்! மித்ராவில் அது தான் நடந்தது. ஆனால் அதே இந்தியத் தலைவர்கள் இப்போது மக்களைப் பார்க்கவே  கூசுகிறார்கள்! தலைகாட்டவே பயப்படுகிறார்கள்! எங்களுக்கு மலாய்க்காரர் தொகுதிகளைக் கொடுங்கள் என்று கதற வேண்டிய நிலை!

அதை விடுவோம். இப்போது நீதிமன்றம் நஜிப்-ரோஸ்மாவுக்குக் கொடுத்த தண்டனை மற்ற அரசியல்வாதிகளுக்குப் பாடமாக அமையுமா? புத்தி உள்ளவனுக்குப் பாடமாக அமைய வேண்டும். இனி வருங்காலங்களில் "நான் எதையும் செய்வேன்!" என்கிற மனோநிலை அடிப்பட்டுப் போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

"இனி எங்கள் கட்சி ஆட்சி தான்!" என்று யாரும் சொல்ல முடியாத சூழல் நாட்டில் உருவாகிவிட்டது. எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆட்சி எப்படி வேண்டுமானாலும் அமையலாம்.  தனிக்கட்சி ஆட்சி என்பதைவிட கூட்டாட்சி முறைகள் கூட வரலாம். மக்கள் யாரையும் நம்பத் தயாராக இல்லை! எல்லாம் போலிகள் என்று தெரிந்துவிட்டது!

ஒரே கட்சி ஆட்சி என்றால் கொள்ளயடித்தாலும் "பரவாயில்லை! நீ மன்னிக்கப்பட்டாய்!" என்று சொல்லி தப்பித்து விடலாம். அடுத்த பொதுத் தேர்தலில் ஒரு வேளை எதிர்க்கட்சி ஆட்சியைப் பிடித்தால் இப்போது இலஞ்சம் வாங்கிக் கொண்டிருப்பவர்கள் நீதிமன்றத்தை எதிர்நோக்க வேண்டி வரும்! இப்போது போல் இழுத்துக் கொண்டே போக முடியாது. வழக்குகளுக்கு நீதி வேண்டும், அது தான் முக்கியம். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்  பழையன கிளறப்படும்!

இலஞ்சம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அது மாபெரும் நோய். இந்த விஷயத்தில் முதலில் தண்டிக்கபட வேண்டியவர்கள் அரசியல்வாதிகள்.  அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட்டால்  மற்றவர்கள் தானாகவே திருந்தி விடுவார்கள்!

இலஞ்சம் என்பது நாட்டின் முதல் எதிரி! அதனை ஒழிப்போம்!