Saturday 3 September 2022

ஊழல்வாதிகள் வேட்பாளர்களா?

 


ஒரு சில அரசில்வாதிகள் ஏதோ ஞானம் பெற்றவர்கள் போல தங்களை அறியாமலே ஒரு சில கருத்துக்களை உதிர்த்துவிடுகின்றனர்! 

அவர்கள் தான் உண்மையான அரசியல்வாதிகள்! "சொல்லுவதோடு சரி!  சொல்வது போல நான் செயல்படமாட்டேன்!" இது தான் உண்மையான அரசியல்வாதியின் கொள்கை!

ஆனால் அவரே ஊழல் அரசியல்வாதியாக இருந்தாலும் அவருக்கு ஒரு நல்ல நோக்கம் இருக்கிறது!  "நாங்கள் ஊழல்வாதிகள் தான்! ஆனால் இனி மேல் வருபவர்கள் எங்களைப்போல் இருக்க வேண்டாம்!" என்று சொல்லுகின்ற துணிவாவது அவருக்கு இருக்கிறதே அதைப் பாராட்டுவோம்!

இன்று நமது நாட்டு அரசியலில் யார் வேட்பாளர்களாக அறிமுகப்படுத்தப் படுகின்றனர்?  சேவை மனப்பான்மையோடு அரசியலுக்கு வருபவர்கள் குறைந்து போயினர் என்கிற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. அதன் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும். "அவரிடம் பணம் இல்லை! அதனால் அவருக்குச் சேவையில் நாட்டம் இல்லை!" என்பதாக இவர்களே அதற்கு ஒரு வியாக்கியானம் கொடுப்பார்கள்!

அரசியல் கட்சிகள் பணம் உள்ள வேட்பாளர்களைத்தான் விரும்புகின்றனர். காரணம் அவர்களால் பணம் செலவு செய்ய முடியும். பணம் செலவு செய்பவர்கள் அரசியலுக்கு வர ஒரு நோக்கம் உண்டு. பணம் போட்டால் பணத்தை எடுக்க வேண்டும். இவர்களில் பலர் இதற்கு முன்னர் அதைத்தான் செய்தனர். அரசியலுக்கு வந்தால் அதைத்தான் அவர்கள் செய்வார்கள்! அவர்களுக்குச் சேவையைப் பற்றி "அனா, ஆவன்ன!"  கூட அறியாதவர்கள்! அது தான் அரசியல்!

நமக்கு இதுபற்றியெல்லாம் கவலை இல்லை. அரசியலை ஒதுக்கிவிட முடியாது. நமக்குத் தேவை அரசியலுக்கு நல்லவர்கள் வரவேண்டும். வல்லவர்கள் வரவேண்டும். கைசுத்தமானவர்கள் வரவேண்டும். ஊழல், கிரிமினல் பின்னணி உள்ளவர்களை அரசியலில் அனுமதிக்கக் கூடாது. இது தான் முக்கியம்.

எல்லா அரசியல் கட்சிகளும் இதனை ஒரு கொள்கையாகக் கொள்ள வேண்டும். தவறுகள் நடந்திருக்கலாம். அது தொடர வேண்டும் என்பது அவசியல் இல்லை. ஊழல் சாதாரண விஷயம் அல்ல. நாட்டை அரித்துத் தின்னும் ஒரு பயங்கர நோய். அதை வளர விடக்கூடாது என்பது தான் நமது நோக்கம்.

வருங்காலங்களில் அனைத்துக் கட்சியினரும் ஊழல் வாதிகளை வேட்பாளர்களாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று நாம் கெஞ்சிக் கேட்டுக்  கொண்டாலும் ஊழலுக்குப் பெயர் போன பாரிசான் போன்ற கட்சிகள் அதனை ஒரு பொருட்டாக மதிக்கப் போவதில்லை. அப்படியே அவர்கள் வளர்க்கப்பட்டவர்கள்!

அந்த குறிப்பிட்ட அரசியல்வாதி எதனை மனதில் வைத்துக் கொண்டு  சொன்னாரோ நமக்குத் தெரியாது. ஆனால் அது நல்ல கருத்து என்பதில் சந்தேகமில்லை.

அப்படியே ஊழல்வாதிகள் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும்  நாம் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

வாழ்க மலேசியா!

No comments:

Post a Comment