Thursday 1 September 2022

இலஞ்சம் நமது முதல் எதிரி!

 

இலஞ்சம் என்றாலும் சரி, ஊழல் என்றாலும் சரி, கையூட்டு என்றாலும் சரி, பெயர் தான் வித்தியாசமே தவிர மற்றபடி மக்களிடமிருந்து அரசியல்வாதிகள்  கொள்ளையடிக்கும் பணம் தான் இலஞ்சம்!

இன்று நமது நாட்டின் முதல் எதிரி என்றால் அது இலஞ்சம் தான். மேல்நிலை அரசியல்வாதிகளிலிருந்து  கீழ்நிலை அரசாங்க ஊழியன் வரை இலஞ்சத்தை மிக முக்கியமானதாகக்  கருதுகிறான்! இதற்கெல்லாம் காரணம் அரசியல்வாதிகள். பாதைப் போட்டுக் கொடுத்தவர்கள் அரசியல்வாதிகள்.

முன்பு இலஞ்சம் என்பதெல்லாம் சிறிய அளவில் நடந்து கொண்டிருந்தது. அது ஒன்றும் பெரிய அளவில் மக்களைப் பாதிக்கவில்லை. ஆனால் இப்போது இலஞ்சம் என்பது நாட்டையே பாதிக்கிறது. நாட்டுப்பற்றுள்ள, சமயப்பற்றுள்ள ஒருவன் செய்யத் துணியாததை இலஞ்சம்  செய்யத் துணிய வைக்கிறது!

நமது இந்திய அரசியல் தலைவர்கள் இலஞ்சத்திலேயே ஊறிப்போனவர்கள். மக்களைக் கொள்ளையடித்தார்கள். பள்ளி நிலங்களைக் கொள்ளையடித்தார்கள். ஆனால் அவர்களை யாரும் ஒன்றும் செய்யும் முடியவில்லை! வெளியே தைரியமாக, வெட்ட வெளியில் சுற்றி வருகிறார்கள்! அதனால் தான் இன்றைய இந்தியத் தலைவர்களைப் பலர் பின்பற்ற நினைக்கிறார்கள்! மித்ராவில் அது தான் நடந்தது. ஆனால் அதே இந்தியத் தலைவர்கள் இப்போது மக்களைப் பார்க்கவே  கூசுகிறார்கள்! தலைகாட்டவே பயப்படுகிறார்கள்! எங்களுக்கு மலாய்க்காரர் தொகுதிகளைக் கொடுங்கள் என்று கதற வேண்டிய நிலை!

அதை விடுவோம். இப்போது நீதிமன்றம் நஜிப்-ரோஸ்மாவுக்குக் கொடுத்த தண்டனை மற்ற அரசியல்வாதிகளுக்குப் பாடமாக அமையுமா? புத்தி உள்ளவனுக்குப் பாடமாக அமைய வேண்டும். இனி வருங்காலங்களில் "நான் எதையும் செய்வேன்!" என்கிற மனோநிலை அடிப்பட்டுப் போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

"இனி எங்கள் கட்சி ஆட்சி தான்!" என்று யாரும் சொல்ல முடியாத சூழல் நாட்டில் உருவாகிவிட்டது. எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆட்சி எப்படி வேண்டுமானாலும் அமையலாம்.  தனிக்கட்சி ஆட்சி என்பதைவிட கூட்டாட்சி முறைகள் கூட வரலாம். மக்கள் யாரையும் நம்பத் தயாராக இல்லை! எல்லாம் போலிகள் என்று தெரிந்துவிட்டது!

ஒரே கட்சி ஆட்சி என்றால் கொள்ளயடித்தாலும் "பரவாயில்லை! நீ மன்னிக்கப்பட்டாய்!" என்று சொல்லி தப்பித்து விடலாம். அடுத்த பொதுத் தேர்தலில் ஒரு வேளை எதிர்க்கட்சி ஆட்சியைப் பிடித்தால் இப்போது இலஞ்சம் வாங்கிக் கொண்டிருப்பவர்கள் நீதிமன்றத்தை எதிர்நோக்க வேண்டி வரும்! இப்போது போல் இழுத்துக் கொண்டே போக முடியாது. வழக்குகளுக்கு நீதி வேண்டும், அது தான் முக்கியம். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்  பழையன கிளறப்படும்!

இலஞ்சம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அது மாபெரும் நோய். இந்த விஷயத்தில் முதலில் தண்டிக்கபட வேண்டியவர்கள் அரசியல்வாதிகள்.  அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட்டால்  மற்றவர்கள் தானாகவே திருந்தி விடுவார்கள்!

இலஞ்சம் என்பது நாட்டின் முதல் எதிரி! அதனை ஒழிப்போம்!


No comments:

Post a Comment