Thursday, 3 November 2022
மாற்றங்கள் வேண்டும்!
Wednesday, 2 November 2022
ஈப்போ மாநகர மன்றத்திற்கு நன்றி!
நன்றி: வணக்கம் மலேசியா டாக்டர் செல்வமணி
டத்தோஸ்ரீ டாக்டர் என்.எஸ்.செல்வமணி அவர்களைப் பற்றி நான் எதனையும் அறியேன்.
இருந்தாலும் ஒரு தமிழரின் பெயர் ஒரு சாலைக்கு வைத்ததை நான் பெருமையாகவே கருதுகிறேன்.
இப்போது சாலைகளுக்குப் பெயர் வைப்பது எல்லாவற்றிலும் அரசியல் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. நாட்டுக்குச் சேவை ஆற்றியவர்களின் பெயர்கள் தான் பெரும்பாலும் சாலைகளுக்கு வைக்கப்படுகின்றன. ஆனால் என்ன செய்வது? கட்சிகளுக்குச் சேவை செய்தவர்களின் பெயர்கள் தான் முக்கியத்துவம் பெறுகின்றது!
க்ட்சிகளில் சேவை என்பது வேறு, நாட்டுக்குச் சேவை என்பது வேறு. நாட்டுக்குச் சேவை செய்தவர்களின் பெயர்கள் தான் என்றென்றும் நினைவு கூரப்பட வேண்டும்.
டாக்டர் செல்வமணி அவர்கள் ஈப்போ மக்கள் நன்கறிந்த கல்வியாளர். கல்விக்காக அவரது குடும்பம் நிறைய தியாகங்களைச் செய்திருக்கின்றனர். அவரது பாட்டனார் குழைந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக தனது நிலத்தையே தானமாகக் கொடுத்தவர். ஏழைக்குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதில் டாக்டர் செல்வமணி அவர்கள் நிறைய அக்கறையைக் காட்டியிருக்கிறார்.
அவரின் கல்வி சேவைக்காக 1997-ம் ஆண்டு அவருக்கு "தோக்கோ குரு" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
ஈப்போ அண்டர்சன் இடைநிலைப்பள்ளியில் ஆசிரியராகவும் பின்னர் முதல்வராகவும் பணியாற்றியவர். கல்வி என்று வரும்போது அவர் இனம், மதம், நிறம் எதுவும் பார்ப்பதில்லை. அனைத்து இன மாணவர்களும் கல்வி பயிலுவது அவர்களது உரிமை என்பது தான் அவரது கொள்கை. கடைசிவரை அவரது கொள்கையிலிருந்து அவர் மாறவில்லை.
ஆசிரியர் செல்வமணி அவர்கள் 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார். அப்போது அவருக்கு வயது 93. கல்விமான்களுக்கு இறப்பு என்பது இல்லை. அவர்கள் என்றென்றும் வாழ்ந்திருப்பர்.
அவரது நினைவாக சாலை ஒன்றுக்குப் பெயரிப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை ஈப்போ செயிண்ட் பிலோமினா தமிழ்ப்பள்ளி அறவாரியம் முன்வைத்து இப்போது அது நடப்புக்கு வந்திருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டு கால முயற்சியின் காரணமாக இது நிறைவேறியிருக்கிறது. இந்த அங்கீகாரம் பெற முயற்சிகள் செய்த ஈப்போ மாநகரமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயகோபி மற்றும் ஈப்போ மேயர் டத்தோ ருமைசி பஹாரின் அவர்களுக்கும் நன்றி! நன்றி! கூறுகிறோம்.
Tuesday, 1 November 2022
ஏனப்பா இந்த வெறி?
ஏனப்பா! இந்த வெறி உனக்கு? உன்னை யார் என்ன செய்தார்கள்? அல்லது அந்தக் கோலம் தான் உன்னை என்ன செய்தது?
உனக்குச் செய்ய திராணி இல்லையென்பதால் மற்றவர்கள் செய்வதை பார்த்து இரசிக்கக் கூட உனக்குத் திராணி இல்லையா? இதையெல்லாம் செய்ய உன்னால் முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். காரணம் இதற்கெல்லாம் கொஞ்சமாவது அறிவு தேவை. இப்படிச் செய்வதிலிருந்தே உனக்கு அது குறைவு என்பதை நீயே உலகிற்குப் பறை சாற்றுகிறாய்!
இதுபோன்ற கோலங்களை இந்திப் படங்களில் பார்த்தால் மகிழ்ச்சியில் துள்ளுகிறாய். ஆனா நேரடியாக இது போன்ற கோலங்களைப் பார்த்தால் மனம் வெதும்புகிறாய். 'நம்மால் முடியவில்லையே!' என்று இயலாமையில் வன்முறையாளனாக மாறுகிறாய்!
தம்பி! நீ தவறான போதனைகளால் பீடிக்கப்பட்டிருக்கிறாய். உங்களுக்கு எப்படிக் கலாச்சாரங்கள் உள்ளவனவோ அதே போல உலகமெங்கிலும் அனைத்து இனத்தவருக்கும் பண்பாடுகள், கலாச்சாரங்கள் உள்ளன. இருக்கத்தான் செய்யும்.
அது நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அதற்கு மரியாதைக் கொடுக்கத்தான் வேண்டும். எல்லாப் பண்பாடுகளும், கலாச்சாரங்களும் உயர்ந்தவைகள் தாம். எதுவும் தாழ்ந்ததில்லை.
அது பண்பாடு உள்ளவனுக்குத்தான் தெரியும். ஆனால் உனக்குத் தெரியவில்லையே! பணபாட்டோடு வளர்க்கப்படாதவர்களின் செயல்கள் இப்படித்தான் இருக்கும்.
தம்பி! மற்றவர்களின் கலை கலாச்சாரங்களைப் பற்றி பொறாமை கொள்ளாதே. பொறாமை என்பது அழிவு சக்தி. ஆக்ககரமாக வாழ கற்றுக்கொள். எல்லாக் கலைகளுமே ஆக்ககரமான செய்திகளைச் சொல்லுகின்றன. தெரியவில்லை என்றால் கேட்டுத் தெரிந்து கொள்.
இது வெறும் கோலம் மட்டும் அல்ல. ஆயிரக்ககணக்கான சிறு சிறு உயிர்களுக்கு அது உணவாகவும் பயன்படுகிறது என்பது தான் அதற்கான முக்கியத்துவம். உனக்குத் தெரியாது என்பதனால் அது தேவை இல்லை என்பதாகாது.
இப்படி வெறித்தனமாக நடந்து கொள்வது யாருக்கும் உதவாது.மற்றவர்களின் கலாச்சாரங்களை மதிக்கக் கற்றுக்கொள். எல்லாக் கலைகளையும் ஏற்றுக்கொள். அதனால் ஒன்றும் எதுவும் குறைந்து போய் விடாது.
வேண்டால் இந்த விபரீத விளையாட்டு!