Thursday 3 November 2022

மாற்றங்கள் வேண்டும்!

 

  
இப்போது தேர்தல் காலம். ஆமாம், 15-வது பொதுத் தேர்தல்  இந்த  மாதம் 19-ம் தேதி எனத்  தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 5-ம் தேதி நடைபெறும்.

இப்போதே போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது இறுதியானது அல்ல. கடைசி நேர மாற்றங்கள் ஏற்படலாம்.  ஆனால் இன்னும் வேறு சில மாற்றங்களும் வரும். போட்டியிடுகிறேன் என்று சொல்லி, வேட்பு மனு தாக்கல் செய்து, பின்னர் ஓரிரு நாட்களில்  வாபஸ் வாங்கும் கூத்துகளும் நடக்கும்! எல்லாம 'செட்டப்' செய்து வைத்திருப்பார்கள். இதெல்லாம் அரசியலில் உள்ளவர்களின்  விளையாட்டு!

எப்படியோ போகட்டும். நம்மைப் பொறுத்தவரை இப்போது நாம் மிகவும் இக்கட்டான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தனை ஆண்டுகாலம் நம்மால் வளர்க்கப்பட்டவர்கள் இப்போது  நம்மை அதள பாதாளத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்திருக்கின்றனர்.

வேறு யாரையும் நான் குற்றம் சொல்லவில்லை. நமது இனத்தவன் தான் நமக்குக் குழி ப்றித்தவன். நம் பெயரை வைத்துக் கொண்டு அவன் சம்பாதித்தானே தவிர நம்மைக் கழட்டிவிட்டுவிட்டான்!

கல்வியில், அதுவும் உயர்கல்வியில், நமக்கு உரிமையில்லை. இந்த நாட்டில் பிறந்தவன் அனாதையாக, குடியுரிமையின்றி, சுற்றிக் கொண்டிருக்கிறான். வேலை இல்லை, வாய்ப்பு இல்லை. குழந்தைகள் கல்வி கற்க இடமில்லை.

திறமை இருந்தும் அவன் வீதியில் சுற்ற வேண்டிய நிலை. இப்படி ஒரு சூழல் யாரால் உருவாக்கப்பட்டது?  நமது மாபெரும் தலைவர்களால் தானே! அவன் தானே நமக்கான பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சி செய்திருக்க வேண்டும்?  ஆனால் தீர்க்கவில்லை!

நமக்கு ஒரு மாற்றம் தேவை. எப்போதும் நாம்  கையாலாகாத ஒரு தலைமத்துவத்தை வைத்துக் கொண்டு மாரடித்துக் கொண்டிருக்கிறோம். அவர்களால் நமது மக்களுக்கு ஒன்றும் செய்ய இயலாது என்பது நன்கு புரிந்துவிட்டது. அவர்களால் முடியும் ஆனால் அந்த சுமையை அவர்கள் ஏற்கத் தயாரில்லை! அவர்கள் வாழ்ந்தால் போதும்  என்கிற சுயநலம் அவர்களைப் பீடித்துக் கொண்டது!

ஓர் ஆண்டு, ஈராண்டு பொறுக்கலாம்.  நாற்பது, ஐம்பது ஆண்டுகள் என்றால் எப்படி?  ஒரு முடிவே  இல்லாமல் போய்க் கொண்டிருந்தால் எப்படி? ஒன்று நல்லதைச் செய்ய வேண்டும்.  இல்லாவிட்டால் ஓடிப்போக வேண்டும். அவர்கள் ஓடிப்போவதாக இல்லை! நாம் தான் கழுத்தைப்பிடித்து விரட்டியடிக்க வேண்டும்.

மாற்றங்கள் நமக்குத் தேவை! மாற்றுவோம்!

No comments:

Post a Comment