ஏனப்பா! இந்த வெறி உனக்கு? உன்னை யார் என்ன செய்தார்கள்? அல்லது அந்தக் கோலம் தான் உன்னை என்ன செய்தது?
உனக்குச் செய்ய திராணி இல்லையென்பதால் மற்றவர்கள் செய்வதை பார்த்து இரசிக்கக் கூட உனக்குத் திராணி இல்லையா? இதையெல்லாம் செய்ய உன்னால் முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். காரணம் இதற்கெல்லாம் கொஞ்சமாவது அறிவு தேவை. இப்படிச் செய்வதிலிருந்தே உனக்கு அது குறைவு என்பதை நீயே உலகிற்குப் பறை சாற்றுகிறாய்!
இதுபோன்ற கோலங்களை இந்திப் படங்களில் பார்த்தால் மகிழ்ச்சியில் துள்ளுகிறாய். ஆனா நேரடியாக இது போன்ற கோலங்களைப் பார்த்தால் மனம் வெதும்புகிறாய். 'நம்மால் முடியவில்லையே!' என்று இயலாமையில் வன்முறையாளனாக மாறுகிறாய்!
தம்பி! நீ தவறான போதனைகளால் பீடிக்கப்பட்டிருக்கிறாய். உங்களுக்கு எப்படிக் கலாச்சாரங்கள் உள்ளவனவோ அதே போல உலகமெங்கிலும் அனைத்து இனத்தவருக்கும் பண்பாடுகள், கலாச்சாரங்கள் உள்ளன. இருக்கத்தான் செய்யும்.
அது நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அதற்கு மரியாதைக் கொடுக்கத்தான் வேண்டும். எல்லாப் பண்பாடுகளும், கலாச்சாரங்களும் உயர்ந்தவைகள் தாம். எதுவும் தாழ்ந்ததில்லை.
அது பண்பாடு உள்ளவனுக்குத்தான் தெரியும். ஆனால் உனக்குத் தெரியவில்லையே! பணபாட்டோடு வளர்க்கப்படாதவர்களின் செயல்கள் இப்படித்தான் இருக்கும்.
தம்பி! மற்றவர்களின் கலை கலாச்சாரங்களைப் பற்றி பொறாமை கொள்ளாதே. பொறாமை என்பது அழிவு சக்தி. ஆக்ககரமாக வாழ கற்றுக்கொள். எல்லாக் கலைகளுமே ஆக்ககரமான செய்திகளைச் சொல்லுகின்றன. தெரியவில்லை என்றால் கேட்டுத் தெரிந்து கொள்.
இது வெறும் கோலம் மட்டும் அல்ல. ஆயிரக்ககணக்கான சிறு சிறு உயிர்களுக்கு அது உணவாகவும் பயன்படுகிறது என்பது தான் அதற்கான முக்கியத்துவம். உனக்குத் தெரியாது என்பதனால் அது தேவை இல்லை என்பதாகாது.
இப்படி வெறித்தனமாக நடந்து கொள்வது யாருக்கும் உதவாது.மற்றவர்களின் கலாச்சாரங்களை மதிக்கக் கற்றுக்கொள். எல்லாக் கலைகளையும் ஏற்றுக்கொள். அதனால் ஒன்றும் எதுவும் குறைந்து போய் விடாது.
வேண்டால் இந்த விபரீத விளையாட்டு!
No comments:
Post a Comment