Wednesday, 6 September 2023

உணவுகளின் விலையேற்றம்!

 

பொதுவாகவே இந்திய உணவகங்களில் உணவுகளில் விலையேற்றம் நம்மைத் திணற அடிக்கிறது! 

இந்திய உணவகங்கள், மாமாக் உணவகங்கள், , தெருக்கடை உணவகங்கள் உட்பட விலையேற்றம் என்பது கன்னாபின்னா என்று ஏறிக் கொண்டிருப்பது  கண்ணுக்குத் தெரிகிறது.  விழிகளும்  பிதுங்குகின்றன!

யாரைத்தான் குறை சொல்வது?  கோழிகளின் விலையேற்றம் தான் நமக்கு முதல் எதிரி. அரிசி விலையேறுகிறது என்று தான் செய்திகள் வந்தன. அதற்குள் உணவகங்கள் அரிசி விலையேற்றமும் ஒரு காரணம் என்கின்றனர்! அதற்குள் அரிசி விலை  ஏறிவிட்டதா? புரியவில்லை. அவர்கள் சொல்லுவதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான்  வேண்டும். உணவகத் துறையில் நாம் இல்லையே! என்ன செய்ய?

இன்றைய நிலையில் நாம் யாரைக்  குறிப்பிட்டு  குறை சொல்லுவது?  தெரு ஓர  உணவகங்களிலிருந்து உலக அளவில் பிரசித்திப்பெற்ற  உணவகங்கள்  வரை  எல்லாவற்றிலும் தாறுமாறான விலையேற்றம் கண்டு விட்டன!

சாதாரண உணவகங்களின் விலையேற்றம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் சுவையைப் பற்றி  நாம் பேசுவதில்லை.  அதன் விலையைத் தான் பேசுகிறோம். வாய்க்கு வக்கனையாக இல்லையென்றால் சிறிய உணவகங்களைப் பற்றி நம் வாய்க்கு வந்த மாதிரி பேசுகிறோம். பொதுவெளியில் அவர்களைக் கண்ட மாதிரி விமர்சனம் செய்கிறோம். அவர்களின் கடைகளுக்கே போகக் கூடாது என்று பொதுசேவையும் செய்கிறோம்! 

பாவம்! எது நடந்தாலும் சிறிய உணவகங்களைத் தான் குறி வைக்கிறோம்.  உலகப்புகழ் பெற்ற உணவகங்களுக்குப் போய் 'ஒன்னுமே நல்லாயில்லெ!' என்று சொல்லுவதோடு சரி!  வேறு எந்த குறைபாட்டையும் நாம் வைப்பதில்லை!  மீண்டும் மீண்டும் அங்கு தான் போகிறோம்! மீண்டும் அதே குறைபாடுகளைத்தான் சொல்லுகிறோம். ஆனால் அவர்களுக்குத்தான் ஆதரவைத் தருகிறோம். ஒரே காரணம் தான். அங்குப் போவதில் ஒரு கௌரவம் கிடைக்கிறது.  மற்றவர்களிடம் சொல்லிச் சொல்லி பெருமைப்படுகிறோம். குழந்தைகளும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்று சொல்லுகிறோம்.  குழந்தைகளின் பிறந்த நாள்களைக் கொண்டாடுகிறோம்.  விருந்துகளுக்கு ஏற்பாடுகள் செய்கிறோம். விலைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.

ஆனாலும் விலையேறிவிட்டதாக ஒவ்வொரு நாளும் புலம்புகிறோம்!  விலையேற்றத்திற்குச் சிறிய,  நடுத்தர உணவகங்களே காரணம் என்பது போல  பேசுகிறோம்! பெரிய உணவகங்கள் எந்த விலையில் விற்றாலும்  அதனை ஏற்றுக் கொள்கிறோம்!

ஒன்று மட்டும் நிச்சயம். உணவகங்களில் இனி விலை குறையும் என்று எதிர்பார்க்க முடியாது. சாப்பிடத்தான் வேண்டும் என்றால் சாப்பிடத்தான் வேண்டும். அது சிறியதோ, பெரியதோ உங்கள் கையில் உள்ள பணத்தை பொறுத்தது! விலைகள் குறைவதற்கான வாய்ப்பில்லை!

Tuesday, 5 September 2023

இதுவும் பிரச்சனையா!

 

இது ஒரு பிரச்சனையே அல்ல!  இதனை ஏன் ம.இ.கா.தகவல் பிரிவுத் தலைவர், தியாளன் ஒரு பிரச்சனையாகக் கருதுகிறார்  என்பது நமக்குப் புரியவில்லை! 

நமக்குப் புரிவதெல்லாம்  "நாங்கள் இன்னும் உயிரோடு தான் இருக்கிறோம்!" என்பதைக் காட்டிக்கொள்ள  இவரும் ஒரு விளம்பரத்தைத் தேடுகிறார்  என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.    

வெளிநாட்டுத் தொழிலாளர் பிரச்சனை என்பது ஒரு நீண்ட நாள் பிரச்சனை. அது சாமிவேலு காலத்துப் பிரச்சனை! ம.இ.கா.வால் அதனைச் செய்ய முடியவில்லை என்பதை நீங்களே ஒப்புக் கொண்டீர்கள்.

ம.இ.கா. காலத்துப் பிரச்சனை இப்போது பி.கே.ஆர். காலத்தில் வெற்றிகரமாக நடந்தேறியிருக்கிறது. அந்தப் பெருமையில் பி.கே.ஆரும்  பங்குப்  பெறத்தானே செய்யும்.  அந்தப் பிரச்சனையை அப்போதே சாமிவேலு காலத்திலேயே நீங்கள்  தலைமுழுகி விட்டீர்கள்.  ஆனால் இப்போது, சமீப காலம்வரை,   அந்தப் பிரச்சனையை பி.கே.ஆரும், ஜ.செ.க. வும் தானே  அதனை உயிர்ப்புடன் வைத்திருந்தன?  அவர்களும் இது பற்றி தொடர்ந்து வலியுறுத்தித் தானே வந்திருக்கிறார்கள்.

டத்தோ சரவணன் அவர்களைப் பாராட்டுகிறேன், தனக்கு வாய்ப்பு கிடைத்த போது  அந்தப் பிரச்சனையை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். இதனைச்  சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. பொதுவாக அரசியல்வாதிகள் பதவியில் இருக்கும் போது  வாய் திறக்கத்  தயங்குவார்கள். அப்போது பதவிக்குத் தான் முதலிடம். பதவியில் இல்லாத போது  துணிந்து கேட்பார்கள்!  தைரியம் தானாக வந்துவிடும். இழப்பதற்கு ஒன்றுமில்லை. அதைத்தான் டத்தோ சரவணன்  செய்திருக்கிறார்!   'காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தது போல' என்பார்கள். 

இருந்தாலும் டத்தோ  சரவணன் அவர்களை நான் பாராட்டுகிறேன். அது அவரது பணி தான். ஆமாம் இந்தியர்களுக்கு உதவுவதும் அவரது பணி தான். நல்லதைச் செய்திருக்கிறார். பாராட்டுகிறோம்.  ஆனால் இதற்கெல்லாம் பொதுவெளியில் சண்டை போடுவது  சிறுபிள்ளத்தனம். அவர் இதனை ஊக்குவிக்கக் கூடாது.  செய்யுங்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. இந்தியர்களுக்குப் பிரச்சனையா இல்லை. அறுபது ஆண்டு கால குப்பைகள் இன்னும் நிறையவே  இருக்கின்றன.

பொது மக்களான எங்களுக்கும் பல பிரச்சனைகள் புரிகின்றன. எந்தவொரு பிரச்சனையிலும் இந்திய தலைவர்கள் வாய் திறப்பதில்லை. ஏன் வம்பு என்று அமைதி காக்கிறார்கள். பேசுவார்கள் ஆனால் இந்தியர் பிரச்சனைகளைப் பேச மாட்டார்கள். இப்போதைக்கு பேசாமலிருப்பது தான் பாதுகாப்பு என்று நினைக்கிறார்கள்! பேராசிரிய இராமசாமிக்கே ஆப்பு வைத்தவர்கள், இவர்கள் எம்மாத்திரம்?

எல்லாருக்கும் பேச சுதந்திரம் உண்டு. ஆனால் தமிழன் பேச அக்கம் பக்கம் எல்லாப்பக்கமும் பார்த்துத் தான் பேச வேண்டியிருக்கிறது! அப்புறம் எங்கே இவர்களால் பேச முடியும். டத்தோ சரவணன் பேசினார். அதற்கான பலன் கிடைத்தது. நன்றி டத்தோ!

Monday, 4 September 2023

கலவரத்தில் இன்பம் காண்பவர்!

 

நம் நாட்டில் இனவாதத்தை  தோற்றுவித்தவர் என்றால் அது டாக்டர் மகாதிர் தான்.!

அரசியலுக்கு வரும்போதே இனவாதத்தைப்  பேசித்தான் அவர் அரசியலுக்கு வந்தார்.  அது கலவரத்தில் முடிந்தது. அதுவே அவருக்கு வெற்றியாக முடிந்தது.

நாட்டை அவர் தான் 22 ஆண்டு காலம் வழி நடத்தியவர். அதன் பின்னர் 22 மாதங்கள் அவர் தான் பதவியில் இருந்தவர்.  இப்போது என்னவோ பதவியே வகிக்காதவர் என்கிற தொனியில் பேசிக் கொண்டிருக்கிறார்.

அவர் ஆட்சியில்  இருந்த காலத்தில் தாய் மொழிப்பள்ளிகள் இருக்கத்தான் செய்தன. அந்த காலகட்டத்தில் எந்த ஒரு இன பிரச்சனையோ அல்லது மத பிரச்சனையோ இருந்ததாக எந்தத் தடையமும் இல்லை.

எதையாவது காரணங்கள் சொல்லி  இனங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவதே இவர் பாணி அரசியல் என்பதை நாம் அறிவோம். இப்போதும் அதைத்தான் செய்கிறார்.  அவரின் வயதின் காரணமாக அவர்மீது  யாரும் கைவைக்க முடியாது என்பதை அவர் அறிவார். அதனால் தான் அவர் "நீ முன்னால போனாலும் பின்னால போனாலும் உதைத்துக்  கொண்டே தான் இருப்பேன்!"  என்று ஆணவத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்! அதுவும் பிரதமர் அன்வார் பெரியவர்களை மதிப்பவர். அதனால் அவரது பேச்சுக்களைப் பிரதமர்  பொருட்படுத்துவதில்லை. ஆனால் டாக்டர் மகாதிர் பதவியில் இருந்து இப்படி ஒருவர் செயல்பட்டால் அத்தோடு அவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும்! அவருக்கு வயதெல்லாம் ஒரு பொருட்டல்ல!

டாக்டர் மகாதிரை எப்படித் தான் புரிந்து கொள்வது?கலங்கிய குட்டையில் மீன் பிடித்து அப்படியே கைகளில் அவைகளை நெரித்துக் கொல்லுபவர்! பாவ புண்ணியம் என்று எதுவும் இல்லாத ஒரு பாவப்பட்ட ஜென்மம். பழிவாங்கும் சுபாவம் அப்போதும் உண்டு. இப்போதும் உண்டு. தன்னைத்தவிர வேறு யாரும் முன்னேறி விடக்கூடாது  என்கிற எண்ணம் எப்போதும் உண்டு.

அதனால் தான் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அவரைப் பார்த்து                    "தாத்தா! போதும்!  ஓய்வெடுங்கள்!"  என்று கிண்டலடித்திருக்கிறார்!  அது நஜிப்  அவர்களின் கருத்தாக இருந்தாலும், உண்மையில், அது ஒட்டுமொத்த மலேசியர்களின் கருத்து என்பதாகத்தான்  எடுத்தக் கொள்ள வேண்டும்! ஏன் நாமும் அப்படித்தானே நினைக்கிறோம்! "இந்தக் கிழவனுக்கு என்ன வேலை!" என்று அவர் சம்பந்தமான செய்திகளைக் கூட படிப்பதில்லையே!. வர வர அவர் மேல் இருக்கும் மதிப்பும்,  மரியாதையும்  இல்லாமல் போய்விட்டதே! நம் வீடுகளில் இருக்கும் "தொண! தொண!" தாத்தா பாட்டிகளை நாம் என்ன பாடுபடுத்துகிறோம்!  அப்படி ஒரு நிலைக்குத் தான் அவர் வந்துவிட்டார்!

சரி! நாமும் "தாத்தா! போதும் ஓய்வெடுங்கள்! நீங்கள் ஊருக்கே தாத்தா" வேறு நாங்கள் என்ன தான் சொல்ல முடியும்!