Wednesday 6 September 2023

உணவுகளின் விலையேற்றம்!

 

பொதுவாகவே இந்திய உணவகங்களில் உணவுகளில் விலையேற்றம் நம்மைத் திணற அடிக்கிறது! 

இந்திய உணவகங்கள், மாமாக் உணவகங்கள், , தெருக்கடை உணவகங்கள் உட்பட விலையேற்றம் என்பது கன்னாபின்னா என்று ஏறிக் கொண்டிருப்பது  கண்ணுக்குத் தெரிகிறது.  விழிகளும்  பிதுங்குகின்றன!

யாரைத்தான் குறை சொல்வது?  கோழிகளின் விலையேற்றம் தான் நமக்கு முதல் எதிரி. அரிசி விலையேறுகிறது என்று தான் செய்திகள் வந்தன. அதற்குள் உணவகங்கள் அரிசி விலையேற்றமும் ஒரு காரணம் என்கின்றனர்! அதற்குள் அரிசி விலை  ஏறிவிட்டதா? புரியவில்லை. அவர்கள் சொல்லுவதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான்  வேண்டும். உணவகத் துறையில் நாம் இல்லையே! என்ன செய்ய?

இன்றைய நிலையில் நாம் யாரைக்  குறிப்பிட்டு  குறை சொல்லுவது?  தெரு ஓர  உணவகங்களிலிருந்து உலக அளவில் பிரசித்திப்பெற்ற  உணவகங்கள்  வரை  எல்லாவற்றிலும் தாறுமாறான விலையேற்றம் கண்டு விட்டன!

சாதாரண உணவகங்களின் விலையேற்றம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் சுவையைப் பற்றி  நாம் பேசுவதில்லை.  அதன் விலையைத் தான் பேசுகிறோம். வாய்க்கு வக்கனையாக இல்லையென்றால் சிறிய உணவகங்களைப் பற்றி நம் வாய்க்கு வந்த மாதிரி பேசுகிறோம். பொதுவெளியில் அவர்களைக் கண்ட மாதிரி விமர்சனம் செய்கிறோம். அவர்களின் கடைகளுக்கே போகக் கூடாது என்று பொதுசேவையும் செய்கிறோம்! 

பாவம்! எது நடந்தாலும் சிறிய உணவகங்களைத் தான் குறி வைக்கிறோம்.  உலகப்புகழ் பெற்ற உணவகங்களுக்குப் போய் 'ஒன்னுமே நல்லாயில்லெ!' என்று சொல்லுவதோடு சரி!  வேறு எந்த குறைபாட்டையும் நாம் வைப்பதில்லை!  மீண்டும் மீண்டும் அங்கு தான் போகிறோம்! மீண்டும் அதே குறைபாடுகளைத்தான் சொல்லுகிறோம். ஆனால் அவர்களுக்குத்தான் ஆதரவைத் தருகிறோம். ஒரே காரணம் தான். அங்குப் போவதில் ஒரு கௌரவம் கிடைக்கிறது.  மற்றவர்களிடம் சொல்லிச் சொல்லி பெருமைப்படுகிறோம். குழந்தைகளும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்று சொல்லுகிறோம்.  குழந்தைகளின் பிறந்த நாள்களைக் கொண்டாடுகிறோம்.  விருந்துகளுக்கு ஏற்பாடுகள் செய்கிறோம். விலைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.

ஆனாலும் விலையேறிவிட்டதாக ஒவ்வொரு நாளும் புலம்புகிறோம்!  விலையேற்றத்திற்குச் சிறிய,  நடுத்தர உணவகங்களே காரணம் என்பது போல  பேசுகிறோம்! பெரிய உணவகங்கள் எந்த விலையில் விற்றாலும்  அதனை ஏற்றுக் கொள்கிறோம்!

ஒன்று மட்டும் நிச்சயம். உணவகங்களில் இனி விலை குறையும் என்று எதிர்பார்க்க முடியாது. சாப்பிடத்தான் வேண்டும் என்றால் சாப்பிடத்தான் வேண்டும். அது சிறியதோ, பெரியதோ உங்கள் கையில் உள்ள பணத்தை பொறுத்தது! விலைகள் குறைவதற்கான வாய்ப்பில்லை!

No comments:

Post a Comment