Tuesday 5 September 2023

இதுவும் பிரச்சனையா!

 

இது ஒரு பிரச்சனையே அல்ல!  இதனை ஏன் ம.இ.கா.தகவல் பிரிவுத் தலைவர், தியாளன் ஒரு பிரச்சனையாகக் கருதுகிறார்  என்பது நமக்குப் புரியவில்லை! 

நமக்குப் புரிவதெல்லாம்  "நாங்கள் இன்னும் உயிரோடு தான் இருக்கிறோம்!" என்பதைக் காட்டிக்கொள்ள  இவரும் ஒரு விளம்பரத்தைத் தேடுகிறார்  என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.    

வெளிநாட்டுத் தொழிலாளர் பிரச்சனை என்பது ஒரு நீண்ட நாள் பிரச்சனை. அது சாமிவேலு காலத்துப் பிரச்சனை! ம.இ.கா.வால் அதனைச் செய்ய முடியவில்லை என்பதை நீங்களே ஒப்புக் கொண்டீர்கள்.

ம.இ.கா. காலத்துப் பிரச்சனை இப்போது பி.கே.ஆர். காலத்தில் வெற்றிகரமாக நடந்தேறியிருக்கிறது. அந்தப் பெருமையில் பி.கே.ஆரும்  பங்குப்  பெறத்தானே செய்யும்.  அந்தப் பிரச்சனையை அப்போதே சாமிவேலு காலத்திலேயே நீங்கள்  தலைமுழுகி விட்டீர்கள்.  ஆனால் இப்போது, சமீப காலம்வரை,   அந்தப் பிரச்சனையை பி.கே.ஆரும், ஜ.செ.க. வும் தானே  அதனை உயிர்ப்புடன் வைத்திருந்தன?  அவர்களும் இது பற்றி தொடர்ந்து வலியுறுத்தித் தானே வந்திருக்கிறார்கள்.

டத்தோ சரவணன் அவர்களைப் பாராட்டுகிறேன், தனக்கு வாய்ப்பு கிடைத்த போது  அந்தப் பிரச்சனையை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். இதனைச்  சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. பொதுவாக அரசியல்வாதிகள் பதவியில் இருக்கும் போது  வாய் திறக்கத்  தயங்குவார்கள். அப்போது பதவிக்குத் தான் முதலிடம். பதவியில் இல்லாத போது  துணிந்து கேட்பார்கள்!  தைரியம் தானாக வந்துவிடும். இழப்பதற்கு ஒன்றுமில்லை. அதைத்தான் டத்தோ சரவணன்  செய்திருக்கிறார்!   'காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தது போல' என்பார்கள். 

இருந்தாலும் டத்தோ  சரவணன் அவர்களை நான் பாராட்டுகிறேன். அது அவரது பணி தான். ஆமாம் இந்தியர்களுக்கு உதவுவதும் அவரது பணி தான். நல்லதைச் செய்திருக்கிறார். பாராட்டுகிறோம்.  ஆனால் இதற்கெல்லாம் பொதுவெளியில் சண்டை போடுவது  சிறுபிள்ளத்தனம். அவர் இதனை ஊக்குவிக்கக் கூடாது.  செய்யுங்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. இந்தியர்களுக்குப் பிரச்சனையா இல்லை. அறுபது ஆண்டு கால குப்பைகள் இன்னும் நிறையவே  இருக்கின்றன.

பொது மக்களான எங்களுக்கும் பல பிரச்சனைகள் புரிகின்றன. எந்தவொரு பிரச்சனையிலும் இந்திய தலைவர்கள் வாய் திறப்பதில்லை. ஏன் வம்பு என்று அமைதி காக்கிறார்கள். பேசுவார்கள் ஆனால் இந்தியர் பிரச்சனைகளைப் பேச மாட்டார்கள். இப்போதைக்கு பேசாமலிருப்பது தான் பாதுகாப்பு என்று நினைக்கிறார்கள்! பேராசிரிய இராமசாமிக்கே ஆப்பு வைத்தவர்கள், இவர்கள் எம்மாத்திரம்?

எல்லாருக்கும் பேச சுதந்திரம் உண்டு. ஆனால் தமிழன் பேச அக்கம் பக்கம் எல்லாப்பக்கமும் பார்த்துத் தான் பேச வேண்டியிருக்கிறது! அப்புறம் எங்கே இவர்களால் பேச முடியும். டத்தோ சரவணன் பேசினார். அதற்கான பலன் கிடைத்தது. நன்றி டத்தோ!

No comments:

Post a Comment