Sunday, 3 March 2024

இதற்கெல்லாம் காரணம் யார்?

 

வங்காளதேசத்தவரை வேலைக்காக வரவழைத்து  கடைசியில் அவர்களை அம்போ என்று நடுத்தெருவில் தவிக்கவிட்டு ஓடிப்போன அந்த  'மர்ம' நபர்கள் யார்?

எத்தனை பேர் தான் தேவை என்று ஒரு நிறுவனத்துக்குத் தெரியாதா? தேவைக்கு அதிகமாக வெளிநாட்டவர்களை  நாட்டிற்குள் அனுமதித்து கடைசியில் அவர்களுக்கு வேலை இல்லை என்று சொன்னால்?  அவர்கள் சும்மா வரவில்லை. ஒவ்வொரும் இருபதினாயிரம், முப்பதினாயிரம் என்று பணம் செலவழித்து இங்கு வந்திருக்கின்றனர்.

ஒரு தொழிற்சாலை கணக்கு வழக்கில்லாமல் ஆள்களை நாட்டிற்குள் கொண்டு வந்தால்  அதற்கு அனுமதி கொடுத்தது யார்? அதற்குப் பொறுப்பு மனிதவள அமைச்சு தானே?

இப்போது அவர்களை, வங்காளதேசிகளை,  என்ன செய்யலாம்?  அவர்கள் எவ்வளவு செலவழித்து நாட்டிற்குள் வந்தார்களோ அந்தப் பணத்தை அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிட  வேண்டும்.  பாவம்! ஏழை இளைஞர்கள் அவர்களால் என்ன செய்ய முடியும்?

தொழிற்சாலைகளைக் குற்றம் சொல்லுவதில் பயனில்லை. நிச்சயமாக இடையே தரகர் ஒருவர் இருக்க வேண்டும். கோடிக்கணக்கில் இவர்களை வைத்துப் பணம் சம்பாதித்தவர் அவர்.  யாராக இருக்க முடியும்? அரசியல் பெரும் புள்ளியாகத்தான் இருக்க முடியும்!  அவர்களால் தான் இது போன்ற குறுக்கு வழிகளில் பணத்தைப் பார்க்க முடியும்!

நம்மைப் பொறுத்தவரை அவர்கள் ஏமாற்றப்பட்டவர்கள். பல இலட்சங்களை இழந்தவர்கள். அவர்களின் பணத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் தயவு தாட்சண்யம் பார்க்கவே கூடாது. எத்தனையோ ஆண்டுகள் இந்த அப்பாவிகளை வைத்து  பணம் சம்பாதித்தவர்கள்.  அவர்களுக்குப் போதுமான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.  இது போன்ற செயல்கள் நிறுத்தப்பட வேண்டுமானால்  தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

இந்தப் பெரும் புள்ளிகள் மாட்டினால் வருங்காலங்களில் புதிய வரவுகளைக் குறைக்கலாம்.   தேவை இல்லையென்றால் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். இதெல்லாம் அரசாங்கத்திற்குச் சுமை தானே?

என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து  தான் பார்க்க வேண்டும்.

Saturday, 2 March 2024

நிறுத்துங்கள் அரசியல் ஆட்டத்தை!

 

"நிறுத்துங்கள் உங்கள் அரசியல் ஆட்டத்தை!"  என்று பலர் சொல்லிவிட்டார்கள்.

அதில் பலருக்கு சுயுநல நோக்கம் இருக்கலாம்.  அதனால்  "நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது!"  என்று  எதிர்கட்சி அரசியல்வாதிகள் நினைக்கத்தான் செய்வார்கள்.  அப்படி நினைப்பதில் தவறு ஒன்றுமில்லை.

பொது மக்களும் அதைத்தான் சொல்லுகிறார்கள்.  காரணம் நாம் தானே அரசியல்வாதிகளுக்கு எஜமானர்கள்!  ஆனால் அந்த எஜமானர்கள் என்பது   தேர்தல் காலம் வரை தான்! அதற்குப் பின்னர் அவர்கள் எஜமானர்கள் நாம் எச்சில் பொறுக்கிகள்!  நிலைமை அப்படித்தானே!  நாம் தானே அவர்கள் காலில் விழுகிறோம்?

சரி நம்மை விடுவோம். நமது மாமன்னரே அந்தக் கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார். "உங்கள் அரசியல் ஆட்டத்தை நிறுத்திவிட்டு  ஒன்று சேர்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுங்கள்" என்பதாக அவர் அனைத்து  நாடாளுமன்றத்திற்கும்  நினைவுருத்தியிருக்கிறார்.  இது  போதுமே! நாட்டின் தலைவர் அவர் வேறு யார் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?

விலைவாசிகள் குறைய வேண்டும்.  வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும்.  வெளி நாட்டு முதலீடுகள் உள்ளே வரவேண்டும்,  தண்ணீர் பற்றாக்குறை -  இப்படி பல பிரச்சனைகளை நாடு எதிர்நோக்குகின்ற இந்த நேரத்தில்  எதிர்கட்சியினரின் உலகமே வேறு என்பது போல பேசுகின்றனர்.   இவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதது போல நடந்து கொள்கின்றனர்,.   ஆமாம் இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முதலாம் தேதி  சம்பளம் கிடைத்துவிடுகிறது அல்லவா!

இதனையும் பிரதமர் தனது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஓர் ஆண்டுக்கு இவர்களது சம்பளத்தை நிறுத்தி வைத்தால் என்ன? செத்தா போய்விடுவார்கள்? அவர்களுக்கு எதுவும் ஆகாது! எந்நேரமும் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது பற்றி பேசுவதைத் தவிர  வேறு எதுவும் இவர்களது  நிரலில் இல்லை.  மக்களின் பிரச்சனைகளென்ன, எப்படி தவிர்ப்பது, என்ன செய்ய முடியும்  போன்ற விஷயங்களுக்கெல்லாம் எந்த ஒரு பதிலும்  இல்லாமல் சும்மா கவிழ்ப்போம்! கவிழ்ப்போம்! என்றால் நிச்சயமாக மக்களுக்குக் கோபம் வரத்தான் செய்யும்.

கடவுள் ஏன்  இப்படி ஒரு  ஜென்மங்களைப் படைத்தார் என்று நினைக்கும் போது  கஷ்டமாகத்தான் இருக்கிறது! என்ன செய்ய!

Friday, 1 March 2024

இது எனது நாடு!

 

"இது எனது நாடு" என்று யாரால் தைரியத்தோடு சொல்ல முடியும்?

நிச்சயமாக எந்த ஓர் ஆளும் அரசியல்வாதியால் சொல்ல முடியாது.  ஆளும் அரசியல்வாதி என்றால் முன்னாள் தேசிய முண்ணனியே தான்.   இன்றும் நாட்டை அவர்கள் கட்டுப்பாட்டில் தானே வைத்திருக்கிறார்கள்.  அது மட்டும் அன்றி இன்றைய எதிர்கட்சியினரும் அவர்கள் தான்.  அதனால் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.  இங்கு நாம் சொல்ல வருவது முன்னாள் தேசிய முண்ணனியினர் தான்.

என்று டாக்டர் மகாதிர் போன்ற துரோகிகள் நாட்டை ஆள வந்தார்களோ அன்றே நாட்டுக்குப் பிடித்தது ஏழரை சனியன். அவர்களிடம் நாட்டுப்பற்றோ, இனப்பற்றோ, நாட்டின் மீது விசுவாசாமோ எதுவுமே இல்லாத  ஒரு கொள்ளைக்கூட்டம்! அவரது சொத்து மதிப்பு, பிள்ளைகளின் சொத்து மதிப்பு இதற்கெல்லாம் எல்லையே இல்லை!  ஓர் அரசியல்வாதியால் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா?  அவரது மகன்களால் - எனன தான் தொழிலசெபவர்களாக இருந்தாலும்  - இந்த அளவு கோடிக்கணக்கில் பணம், சொத்துகள் வைத்திருக்க முடியுமா?

அவருக்குப் பின்னால் வந்தார்களே முகைதீன், சப்ரி போன்ற பிரதமர்கள் - இவர்களுக்கு மட்டும் நாட்டுப்பற்று ஊற்றுத்தண்ணீராய் ஓடுகிறதோ? இவர்களும் கொள்ளையர்கள் பட்டியலில் தானே வருகிறார்கள்! கொள்ளையடிப்பதற்கு ஓர் எல்லையே இல்லையா?   இவர்களுடைய சொந்தங்கள், அமைச்சர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்  பதவிகளில் உள்ள அதிகாரிகள் - இப்படி யாரை எடுத்தாலும்  யாரையாவது கைநீட்டி இவர் 'புனிதன்' என்று சொல்லுகிற அளவுக்கு யாரேனும் இருக்கிறார்களா?  அப்படி சொல்லத்தான் முடியுமா?  

அரசியல்வாதி என்றாலே  புறங்கையால் தேனை நக்கத்தான் செய்வான். இது  ஒன்றும் அதிசயமல்ல!  ஆனால் தேன் கூடே எனக்குத்தான் என்று செயல்பட்டால்   அதுவே அவனுக்கு எமனாகிவிடும்!  அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இலஞ்ச ஊழல் ஆணையம் சும்மாவா இருக்கும்?  அதன் வேலையை அது செய்யத்தான் செய்யும்.  எல்லாகாலமும் தனக்குச் சாதகமாக  இருக்கும் என்று  அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள்.  அது தப்பு என்று இப்போது நிருபணமாகி வருகிறது.

கொள்ளையடிக்கும் கூட்டம் எல்லாம் 'நாட்டிற்கு விசுவாசம்,  இனப்பற்று, மொழிப்பற்று, சமயப்பற்று'  என்று பேசாமல் இருந்தால் போதும்.  உங்களைப் பற்றி மக்களுக்கே தெரியும்

'இது எனது நாடு' என்று வாய் திறக்கும் முன்னர் கொஞ்ச மேலே சொன்னவைகளை நினைத்துப் பாருங்கள்!