Sunday 3 March 2024

இதற்கெல்லாம் காரணம் யார்?

 

வங்காளதேசத்தவரை வேலைக்காக வரவழைத்து  கடைசியில் அவர்களை அம்போ என்று நடுத்தெருவில் தவிக்கவிட்டு ஓடிப்போன அந்த  'மர்ம' நபர்கள் யார்?

எத்தனை பேர் தான் தேவை என்று ஒரு நிறுவனத்துக்குத் தெரியாதா? தேவைக்கு அதிகமாக வெளிநாட்டவர்களை  நாட்டிற்குள் அனுமதித்து கடைசியில் அவர்களுக்கு வேலை இல்லை என்று சொன்னால்?  அவர்கள் சும்மா வரவில்லை. ஒவ்வொரும் இருபதினாயிரம், முப்பதினாயிரம் என்று பணம் செலவழித்து இங்கு வந்திருக்கின்றனர்.

ஒரு தொழிற்சாலை கணக்கு வழக்கில்லாமல் ஆள்களை நாட்டிற்குள் கொண்டு வந்தால்  அதற்கு அனுமதி கொடுத்தது யார்? அதற்குப் பொறுப்பு மனிதவள அமைச்சு தானே?

இப்போது அவர்களை, வங்காளதேசிகளை,  என்ன செய்யலாம்?  அவர்கள் எவ்வளவு செலவழித்து நாட்டிற்குள் வந்தார்களோ அந்தப் பணத்தை அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிட  வேண்டும்.  பாவம்! ஏழை இளைஞர்கள் அவர்களால் என்ன செய்ய முடியும்?

தொழிற்சாலைகளைக் குற்றம் சொல்லுவதில் பயனில்லை. நிச்சயமாக இடையே தரகர் ஒருவர் இருக்க வேண்டும். கோடிக்கணக்கில் இவர்களை வைத்துப் பணம் சம்பாதித்தவர் அவர்.  யாராக இருக்க முடியும்? அரசியல் பெரும் புள்ளியாகத்தான் இருக்க முடியும்!  அவர்களால் தான் இது போன்ற குறுக்கு வழிகளில் பணத்தைப் பார்க்க முடியும்!

நம்மைப் பொறுத்தவரை அவர்கள் ஏமாற்றப்பட்டவர்கள். பல இலட்சங்களை இழந்தவர்கள். அவர்களின் பணத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் தயவு தாட்சண்யம் பார்க்கவே கூடாது. எத்தனையோ ஆண்டுகள் இந்த அப்பாவிகளை வைத்து  பணம் சம்பாதித்தவர்கள்.  அவர்களுக்குப் போதுமான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.  இது போன்ற செயல்கள் நிறுத்தப்பட வேண்டுமானால்  தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

இந்தப் பெரும் புள்ளிகள் மாட்டினால் வருங்காலங்களில் புதிய வரவுகளைக் குறைக்கலாம்.   தேவை இல்லையென்றால் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். இதெல்லாம் அரசாங்கத்திற்குச் சுமை தானே?

என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து  தான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment