"நிறுத்துங்கள் உங்கள் அரசியல் ஆட்டத்தை!" என்று பலர் சொல்லிவிட்டார்கள்.
அதில் பலருக்கு சுயுநல நோக்கம் இருக்கலாம். அதனால் "நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது!" என்று எதிர்கட்சி அரசியல்வாதிகள் நினைக்கத்தான் செய்வார்கள். அப்படி நினைப்பதில் தவறு ஒன்றுமில்லை.
பொது மக்களும் அதைத்தான் சொல்லுகிறார்கள். காரணம் நாம் தானே அரசியல்வாதிகளுக்கு எஜமானர்கள்! ஆனால் அந்த எஜமானர்கள் என்பது தேர்தல் காலம் வரை தான்! அதற்குப் பின்னர் அவர்கள் எஜமானர்கள் நாம் எச்சில் பொறுக்கிகள்! நிலைமை அப்படித்தானே! நாம் தானே அவர்கள் காலில் விழுகிறோம்?
சரி நம்மை விடுவோம். நமது மாமன்னரே அந்தக் கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார். "உங்கள் அரசியல் ஆட்டத்தை நிறுத்திவிட்டு ஒன்று சேர்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுங்கள்" என்பதாக அவர் அனைத்து நாடாளுமன்றத்திற்கும் நினைவுருத்தியிருக்கிறார். இது போதுமே! நாட்டின் தலைவர் அவர் வேறு யார் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?
விலைவாசிகள் குறைய வேண்டும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும். வெளி நாட்டு முதலீடுகள் உள்ளே வரவேண்டும், தண்ணீர் பற்றாக்குறை - இப்படி பல பிரச்சனைகளை நாடு எதிர்நோக்குகின்ற இந்த நேரத்தில் எதிர்கட்சியினரின் உலகமே வேறு என்பது போல பேசுகின்றனர். இவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதது போல நடந்து கொள்கின்றனர்,. ஆமாம் இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முதலாம் தேதி சம்பளம் கிடைத்துவிடுகிறது அல்லவா!
இதனையும் பிரதமர் தனது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஓர் ஆண்டுக்கு இவர்களது சம்பளத்தை நிறுத்தி வைத்தால் என்ன? செத்தா போய்விடுவார்கள்? அவர்களுக்கு எதுவும் ஆகாது! எந்நேரமும் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது பற்றி பேசுவதைத் தவிர வேறு எதுவும் இவர்களது நிரலில் இல்லை. மக்களின் பிரச்சனைகளென்ன, எப்படி தவிர்ப்பது, என்ன செய்ய முடியும் போன்ற விஷயங்களுக்கெல்லாம் எந்த ஒரு பதிலும் இல்லாமல் சும்மா கவிழ்ப்போம்! கவிழ்ப்போம்! என்றால் நிச்சயமாக மக்களுக்குக் கோபம் வரத்தான் செய்யும்.
கடவுள் ஏன் இப்படி ஒரு ஜென்மங்களைப் படைத்தார் என்று நினைக்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கிறது! என்ன செய்ய!
No comments:
Post a Comment