Thursday, 9 May 2024

இடைத் தேர்தலுக்கு முன்!

 

iகோலகுபுபாரு இடைத்தேர்தலுக்கு முன் நடந்த சரித்திரபூர்வமான  சம்பவங்கள்!

எல்லாத் தலைவர்களும் ஒன்று கூடினார்கள்.  ஒன்று சேர்ந்து கும்மியடித்தார்கள்!

"தேர்தலை புறக்கணியுங்கள்!"  என்றது ஒரு கூட்டம்.  குறிப்பாக பெரிகாத்தான்  நேஷனல். அப்படிப் புறக்கணித்திருந்தால் புதிய வருகையான முன்னாள் ம.இ.கா.வினருக்கு  நல்ல பெயர் கிடைத்திருக்கும்!

"தேர்தலை புறக்கணிக்க வேண்டாம். வாக்களியுங்கள்.  ஆனால் பக்காத்தான் ஹரப்பானுக்கு வாக்களிக்காதீர்கள்!"  பின்னர் தொனியை மாற்றிக் கொண்டு இப்படி ஒரு பிரச்சாரம்!

"பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவா?  கெடா மாநிலத்தைப் பார்த்தீர்களா?  அத்தனை உரிமைகளும்  பறிபோகும்!"  இப்படி ஒரு தீர்க்கதரிசனம்!

"எதிர்கட்சிக்கு மட்டும் வாக்களித்து விடாதீர்கள்! உங்களை அம்போ என்று விட்டுவிடுவார்கள்! எங்களை நம்புங்கள். எங்களால் மட்டுமே உங்களைக் காப்பாற்ற முடியும்!"   என்று எல்லா தலைகளும் புருடா விட்டன!


இப்படி எல்லாம் பேசினால் யாருக்குத் தான் வாக்களிப்பது?  குறிப்பிட்ட அந்தத் தொகுதியில் என்ன தான் பிரச்சனை என்று யாரும் கேட்கவில்லை. இது நாள் வரை என்ன  தான் குறை என்று அறிந்து தெரிந்து  அதனைச் சரி செய்ய யாருக்கும் துணிவில்லை.  வெட்கமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய? ஏற்கனவே சொல்லப்பட்ட, உறுதி கூறப்பட்டவைகள் எதனையும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரால் செய்ய முடியவில்லை.  அந்தக் கட்சியினர்  வியாதியால் துன்பப்பட்ட ஒருவரை அங்கே நிறுத்தியிருந்தனர். அதனால் எந்த வேலையும் ஓடவில்லை என்பது தான் உண்மை.

எப்படி இருந்தாலும்  அந்தத்  தொகுதி மக்கள் தான் அவர்கள் பிரச்சனையை கையில் எடுத்தனர்.  சும்மா இருந்தால் சோத்துக்கு ஆகாது என்று தெரிந்து கொண்டு கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் தான் அத்தனை தலைகளும் பேச ஆரம்பித்தன!  மீண்டும் மீண்டும் உறுதி மொழிகள்  கொடுக்கப்பட்டன. பேசப்பட்டன. விவாதிக்கப்பட்டன.

அதன் பின்னர் தான் மக்கள் பஞாயத்தை ஏற்றுக் கொண்டனர். இது தான் தேர்தலுக்கு முன் உள்ள நிலைமை.


Wednesday, 8 May 2024

இடைத் தேர்தலுக்கு ரெடியா?

 

நாடு எதிர்பார்க்கும் மிகப்பிரமாண்டமான இடைத்தேர்தல் என்றால் அது கோலகுபுபாரு இடைத்தேர்தல் தான்!

எப்போதும் அலட்சியமாக பார்க்கும் நமது அரசியல்வாதிகள்  இப்போது நமக்கும் ஒரு காலம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.   யானைக்கு  ஒரு காலம் என்றால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்பார்கள்!  இப்போது  அது வந்திருக்கிறது!  ஒவ்வொரு அரசியல்வாதியும் குனிந்து குனிந்து வாக்கு அளிக்குமாறு  கூனிக்குறுகுகிறான்!

இதில் நமது ம.இ.கா.வினரை நினைக்கும் போது தான்  நமக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.  பேசுபவர்கள் அனைவருமே "அறுபது ஆண்டுகளாக செய்யாதவர்கள் இப்போது செய்வார்களா?"  என்கிற கேள்வி வரும் போதெல்லாம் அது அவர்களைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்பது தெரியாமலா போகும்!  என்ன செய்ய? அது தான் அரசியல் என்று மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்!  நாம் ஏன் ம.இ.கா.வின் மேல் இத்தனை அக்கறை காட்டுகிறோம்? காரணம் நம்மில் பெரும்பாலோர் முன்னாள் ம.இ.கா.வினர் தான்.  மற்றவர்கள் எப்படியோ நான் கட்சியின் கிளையோன்றில் செயலாளராக இருந்தவன்! எப்படியோ இருக்க வேண்டிய கட்சி......இப்படி ஆனதே என்பதில்  வருத்தம் தான்! 

அரசியல்வாதிகளுக்கு நாம் நினைவுறுத்துவது ஒன்று தான்.  அரசியலை வைத்துப் பணம்  சம்பாதிக்க நினைத்தால் அது கடைசியில்  சாபத்தைத்  தான் கொண்டுவரும்.  இது தடித்த 'தோலர்' களுக்குப் பொருந்தாது!  இப்போது பாருங்கள் வரிசையாக வழக்குகள். டாக்டர் மகாதிர், டைம் ஜைனுடின்,  முகைதீன்யாஸின் இப்படிப் பல பிரபலங்கள் இன்று  அவமானப்பட்டு நிற்கிறார்கள்! 

இன்றைய நிலையில் எந்த ஒரு கட்சியும் வீரவசனம் பேசும் நிலையில் இல்லை. இந்தியர்களைப் பொறுத்தவரை அனைத்துக் கட்சிகளும் ஏமாற்று வேலையைத்தான் செய்கிறார்கள்! நம்மை ஏமாற்றுவது எளிது என்று நினைக்கிறார்கள்.  நம்முடைய உரிமைகளைப் பெற்றுத்தர யாரும் தயாராக இல்லை!

இந்த இடைத்தேர்தலில் அந்தத் தொகுதி மக்களே சிந்தித்து வாக்களிக்கட்டும்.  யார் சரியாக நடந்து கொண்டார்கள் என்பது அங்குள்ள மக்களுக்குத் தான் தெரியும்.  ஒரு வீடமைப்புத் திட்டத்தை நிறைவேற்ற ஏன் இத்தனை ஆண்டுகள் பிடித்தன? என்கிற கேள்விக்கு  ஜ.செ.க.   தான் பதில் சொல்ல வேண்டும்.

மக்களே!  வாக்கு யாருக்கு என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!

Tuesday, 7 May 2024

ஹி! ஹி! பொறாமையா!

 

பிரதமர் அன்வார் சொன்ன ஒரு கருத்து வேடிக்கை என்று நினைத்தாலும் அது விஷமத்தனமான  கருத்து என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.

மலாய்க்காரர்களைப் பார்த்து இந்தியர்கள் பொறாமைப் படுகிறார்கள்  என்று அவர் சொன்னது  வேறு எப்படி எடுத்துக் கொள்வது?  உண்மையைச் சொன்னால் நமது மேல் தான் மற்றவர்களின் கொள்ளிக்கண் பட்டு விட்டதோ  என்று நினைக்க  வேண்டியுள்ளது!

ஒரு காலகட்டத்தில் முன்னாள் பிரதமர்  டாக்டர் மகாதிர் சொன்னார்: மலேசிய மருத்துவமனைகளில் டாக்டர்கள் அனைவரும் இந்தியர்களாகவே இருக்கிறார்கள் என்று.  அதன் பின்னர் தான்  இந்திய மாணவர்களுக்கு மருத்துவம் பயில  மலேசியப் பல்கலைக்கழகங்களில்  இடம் மறுக்கப்பட்டது.  அது இன்னும் தொடர்கதையாகவே போய்க் கொண்டிருக்கிறது. இப்போது அவர்கள் மருத்துவம் பயில பெற்றோர்கள் தங்களது சொத்துகளை விற்று வெளிநாடுகளில்  படிக்க வைக்க  வேண்டியுள்ளது.  இப்போது சொல்லுங்கள்.  யார், யார் மீது பொறாமைப்  பட்டது?

இன்னொரு சம்பவமும் நமது ஞாபத்திற்கு வருகிறது.  மைக்கா ஹொல்டிங்ஸ் ஆரம்பித்த காலகட்டம்.  அதே பிரதமர் தான். அப்போது இந்திய மக்களிடமிருந்து பத்து கோடி வெள்ளி வசூலிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில்  அது மிகப்பெரிய தொகை.  டாக்டர் மகாதிரே அசந்து போனார் என்பதாக  துன் சாமிவேலுவே அதனை வெளியிட்டார்.  இந்தியர்களிடமிருந்து இந்த அளவு  பணம் கிடைக்கும் என்று தான்  எதிர்பார்க்கவில்லை என்று டாக்டர் மகாதிர் சொன்னதாக செய்திகள் வெளியாயின.

இது பாராட்டாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அது பொறாமையின் வெளிப்பாடு என்பது பின்னர் தான்  நமக்குத் தெரியவந்தது.  மைக்கா ஹொல்டிங்ஸ்  என்ன நிலைக்குத் தள்ளப்பட்டது  என்று பிற்கால வரலாறு நமக்குத் தெரியும்.  இந்தியர்கள் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும்  என்கிற எண்ணமே எழாதபடி  அது நமக்கு மறைமுகப் பாடமாக அமைந்துவிட்டது!

பொறாமை என்கிற எண்ணம் யார் மீதும் நமக்கு எழுந்ததில்லை.  ஆனால்  நம்மீது மற்றவர்களுக்குப் பொறாமை எப்போதும் உண்டு!  பல வழிகளில்! அதனால் தான் எங்கும் எதிலும் தடைகள்.  ஒவ்வொன்றையும் போராடித்தான் பெற வேண்டியுள்ளது.  நமது உரிமைகளுக்குக் கூட நாம் போராட வேண்டியுள்ளது. என்ன காரணம்?  ஆட்சியில் உள்ளவர்கள் நம்மீது உள்ள பொறாமை தான்!