நாடு எதிர்பார்க்கும் மிகப்பிரமாண்டமான இடைத்தேர்தல் என்றால் அது கோலகுபுபாரு இடைத்தேர்தல் தான்!
எப்போதும் அலட்சியமாக பார்க்கும் நமது அரசியல்வாதிகள் இப்போது நமக்கும் ஒரு காலம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. யானைக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்பார்கள்! இப்போது அது வந்திருக்கிறது! ஒவ்வொரு அரசியல்வாதியும் குனிந்து குனிந்து வாக்கு அளிக்குமாறு கூனிக்குறுகுகிறான்!
இதில் நமது ம.இ.கா.வினரை நினைக்கும் போது தான் நமக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. பேசுபவர்கள் அனைவருமே "அறுபது ஆண்டுகளாக செய்யாதவர்கள் இப்போது செய்வார்களா?" என்கிற கேள்வி வரும் போதெல்லாம் அது அவர்களைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்பது தெரியாமலா போகும்! என்ன செய்ய? அது தான் அரசியல் என்று மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்! நாம் ஏன் ம.இ.கா.வின் மேல் இத்தனை அக்கறை காட்டுகிறோம்? காரணம் நம்மில் பெரும்பாலோர் முன்னாள் ம.இ.கா.வினர் தான். மற்றவர்கள் எப்படியோ நான் கட்சியின் கிளையோன்றில் செயலாளராக இருந்தவன்! எப்படியோ இருக்க வேண்டிய கட்சி......இப்படி ஆனதே என்பதில் வருத்தம் தான்!
அரசியல்வாதிகளுக்கு நாம் நினைவுறுத்துவது ஒன்று தான். அரசியலை வைத்துப் பணம் சம்பாதிக்க நினைத்தால் அது கடைசியில் சாபத்தைத் தான் கொண்டுவரும். இது தடித்த 'தோலர்' களுக்குப் பொருந்தாது! இப்போது பாருங்கள் வரிசையாக வழக்குகள். டாக்டர் மகாதிர், டைம் ஜைனுடின், முகைதீன்யாஸின் இப்படிப் பல பிரபலங்கள் இன்று அவமானப்பட்டு நிற்கிறார்கள்!
இன்றைய நிலையில் எந்த ஒரு கட்சியும் வீரவசனம் பேசும் நிலையில் இல்லை. இந்தியர்களைப் பொறுத்தவரை அனைத்துக் கட்சிகளும் ஏமாற்று வேலையைத்தான் செய்கிறார்கள்! நம்மை ஏமாற்றுவது எளிது என்று நினைக்கிறார்கள். நம்முடைய உரிமைகளைப் பெற்றுத்தர யாரும் தயாராக இல்லை!
இந்த இடைத்தேர்தலில் அந்தத் தொகுதி மக்களே சிந்தித்து வாக்களிக்கட்டும். யார் சரியாக நடந்து கொண்டார்கள் என்பது அங்குள்ள மக்களுக்குத் தான் தெரியும். ஒரு வீடமைப்புத் திட்டத்தை நிறைவேற்ற ஏன் இத்தனை ஆண்டுகள் பிடித்தன? என்கிற கேள்விக்கு ஜ.செ.க. தான் பதில் சொல்ல வேண்டும்.
மக்களே! வாக்கு யாருக்கு என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!
No comments:
Post a Comment