பிரதமர் அன்வார் சொன்ன ஒரு கருத்து வேடிக்கை என்று நினைத்தாலும் அது விஷமத்தனமான கருத்து என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.
மலாய்க்காரர்களைப் பார்த்து இந்தியர்கள் பொறாமைப் படுகிறார்கள் என்று அவர் சொன்னது வேறு எப்படி எடுத்துக் கொள்வது? உண்மையைச் சொன்னால் நமது மேல் தான் மற்றவர்களின் கொள்ளிக்கண் பட்டு விட்டதோ என்று நினைக்க வேண்டியுள்ளது!
ஒரு காலகட்டத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் சொன்னார்: மலேசிய மருத்துவமனைகளில் டாக்டர்கள் அனைவரும் இந்தியர்களாகவே இருக்கிறார்கள் என்று. அதன் பின்னர் தான் இந்திய மாணவர்களுக்கு மருத்துவம் பயில மலேசியப் பல்கலைக்கழகங்களில் இடம் மறுக்கப்பட்டது. அது இன்னும் தொடர்கதையாகவே போய்க் கொண்டிருக்கிறது. இப்போது அவர்கள் மருத்துவம் பயில பெற்றோர்கள் தங்களது சொத்துகளை விற்று வெளிநாடுகளில் படிக்க வைக்க வேண்டியுள்ளது. இப்போது சொல்லுங்கள். யார், யார் மீது பொறாமைப் பட்டது?
இன்னொரு சம்பவமும் நமது ஞாபத்திற்கு வருகிறது. மைக்கா ஹொல்டிங்ஸ் ஆரம்பித்த காலகட்டம். அதே பிரதமர் தான். அப்போது இந்திய மக்களிடமிருந்து பத்து கோடி வெள்ளி வசூலிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் அது மிகப்பெரிய தொகை. டாக்டர் மகாதிரே அசந்து போனார் என்பதாக துன் சாமிவேலுவே அதனை வெளியிட்டார். இந்தியர்களிடமிருந்து இந்த அளவு பணம் கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று டாக்டர் மகாதிர் சொன்னதாக செய்திகள் வெளியாயின.
இது பாராட்டாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அது பொறாமையின் வெளிப்பாடு என்பது பின்னர் தான் நமக்குத் தெரியவந்தது. மைக்கா ஹொல்டிங்ஸ் என்ன நிலைக்குத் தள்ளப்பட்டது என்று பிற்கால வரலாறு நமக்குத் தெரியும். இந்தியர்கள் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்கிற எண்ணமே எழாதபடி அது நமக்கு மறைமுகப் பாடமாக அமைந்துவிட்டது!
பொறாமை என்கிற எண்ணம் யார் மீதும் நமக்கு எழுந்ததில்லை. ஆனால் நம்மீது மற்றவர்களுக்குப் பொறாமை எப்போதும் உண்டு! பல வழிகளில்! அதனால் தான் எங்கும் எதிலும் தடைகள். ஒவ்வொன்றையும் போராடித்தான் பெற வேண்டியுள்ளது. நமது உரிமைகளுக்குக் கூட நாம் போராட வேண்டியுள்ளது. என்ன காரணம்? ஆட்சியில் உள்ளவர்கள் நம்மீது உள்ள பொறாமை தான்!
No comments:
Post a Comment