Wednesday, 2 September 2020

நல்லது நடக்க வாழ்த்துகிறேன்!

 நாளை (3.9.2020) வியாழக்கிழமை,  பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தி,  காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமீட் படோருடன் ஒரு சந்திப்பை நடத்தவிருக்கிறார்.

இது ஒரு நீண்ட நாள் பிரச்சனை. இந்திரா காந்தியின் குழந்தை, அவருடைய முன்னாள் கணவரால் கடத்தப்பட்டு இப்போது பதினோரு ஆண்டுகளாகின்றன. பதினோரு வயதாகும் அந்தக் குழந்தையை இது நாள் வரை அந்தக் குழந்தை தாயிடம் சேர்க்கப்படவில்லை.  நீதிமன்றம் அந்தக் குழந்தை தாயிடம் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறியும் இதுவரை எதுவும் நடக்கவில்லை. காவல்துறையினர் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கைவிரித்து விட்டனர்!  அந்த முன்னாள் கணவர் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை அறிந்தவர் போலும்! 

எப்படியிருப்பினும் இந்த சந்திப்பு என்பது ஒரு நல்ல முன்னேற்றம். இது நாள் வரை என்னன்னவோ காரணங்கள் கூறியிருந்தாலும்  கடந்த சில மாதங்களாக ஐ.ஜி.பி. கொஞ்சம் மனிதாபிமானத்தோடு  இந்தப் பிரச்சனையைக் கையாண்டு வருகிறார் என்பது அவர் பேச்சிலிருந்து நமக்குத் தெரிகிறது.

'இல்லை! முடியாது!'  என்றெல்லாம் அவர் பேசவில்லை. 'முடியும்! பேச்சுவார்த்தை நடத்தலாம்! ஒரு மூத்த அரசியல்வாதியின் உதவியை நாடியிருக்கிறோம்!'  என்று அவர் பேசி வருவதைப் பார்க்கும் போது அவரிடம் நல்லதொரு திட்டம் இருக்கிறது என நம்பலாம்.

நல்லது நடக்க வேண்டும் என்பது தான் நமது பிரார்த்தனை.  தனது குழந்தையைப் பார்க்காமல் ஒரு தாய் பதினோரு ஆண்டுகளாக தவித்துக் கொண்டிருக்கிறார். அவரின் தவிப்பு, அவரின் வேதனை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இங்கு மனிதாபிமானம் தான் முக்கியமே தவிர மதம் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். தாயிடமிருந்து குழந்தை பிரிக்கப்படுவதை எந்த மதமும் ஏற்றுக் கொள்ளாது.

எப்படியோ நல்லது நடக்க வேண்டும். நல்லது நடக்கும் என நம்புகிறேன்.

நல்லது நடக்க பிரார்த்திக்கிறேன்!

தீவிரவாதம் பேசுபவர்களை ஒடுக்க வேண்டும்!

இப்போது பாஸ் கட்சியினருக்கு ஒரு சிறந்த தளம்  கிடைத்திருப்பதாகத் தோன்றுகிறது.

மதங்களைப் பற்றி பேசுவது என்பது அவர்களுக்குச் சாதாரணமாகி விட்டது. தங்களது மதத்தைப் பற்றி பேசுவதை விட பிற மதங்களைப் பற்றி பேசுவது இன்னும் சாதாரணமாகக் கருதுகிறார்கள்.

ஒரு விஷயம் நமக்குப் புரியவில்லை.  ஒரு மதத்தைப் பற்றி பேச வேண்டும் என்றால் அந்த மதத்தைப் பற்றி நமக்கு நல்ல அறிவாற்றல் வேண்டும். தக்க அறிஞர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும்.

ஒரு புனித நூலை ஏதோ ஓரிரு முறைப் படித்துவிட்டு அல்லது ஒரு சில வரிகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு அது பற்றி விமர்சனம் செய்வதோ அல்லது "அனைத்தும் நாம் அறிவோம்!" என்று சிவாஜி பாணியில் பேசுவதோ எதற்கும் உதவாது! 

ஒரு புனித நூலை அப்படியெல்லாம் படித்து விட முடியாது! அப்படியே படித்தாலும் புரிந்து கொள்ள முடியாது.  புரிந்து கொண்டாலும் அதனை முடிந்த முடிவாகக் கருதி விட முடியாது!

இப்போது நமது நாட்டிலேயே எடுத்துக் கொள்ளுவோம்.  இஸ்லாமிய சமயத்துறையில் எத்தனை இஸ்லாமிய அறிஞர்களை இந்நாடு பெற்றிருக்கிறது? சான்றுக்கு ஒரு பிரச்சனையைப் பார்ப்போம்.  பாலர்பள்ளி ஆசிரியை இந்திரா காந்தி குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக  இங்குள்ள 'அறிஞர்களுக்கு'  எந்த விதக் கருத்தும் சொல்ல இயலவில்லை! ஆனால் வெளிநாடுகளில் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் அதனைத் தவறு என்று சுட்டிக் காட்டியிருந்தார்கள்! இங்குள்ளவர்கள் அதனைப் பற்றி கருத்துச் சொல்ல முடியவில்லை என்றால் இவர்களுக்கு அந்த நிபுணத்துவம் இல்லை என்று தானே பொருள்?

எல்லாவற்றையும் விட  ஒரு கருத்தை ஆழமாகப் பதிவு செய்கிறேன்.  அரசியல்வாதிகள், தாங்கள் முஸ்லிம்கள் என்கிற ஒரே காரணத்தை வைத்துக் கொண்டு, பிற மதங்களை நையாண்டி செய்வதோ, கேலி செய்வதோ தொடர்ந்தால் இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகளுக்கு மதம் என்பது ஒரு பொழுது போக்கு! பொதுவாகவே அரசியல்வாதிகளுக்கு அறிவு என்பது கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். இதில் வேறு பிற மதத்தினரை இவர்கள் கிண்டல் செய்கிறார்கள். ஏற்கனவே இவர்கள் அரைகுறைகள்! 

பிற மதங்களைப் பற்றி பேசும் அரசியல்வாதிகளுக்கு அது பற்றி பேச உரிமை இல்லை. அவர்களுக்குத் தண்டனைப் பெற்றுத் தர வேண்டும். இது முக்கியம்.

பாஸ் கட்சியினர் நடுவண் அரசாங்கத்தில் இப்போது பங்கு பெற்றிருப்பதால் இவர்களின் பிற மதத் தாக்குதல்கள் தொடரும் என நம்பலாம். அவர்கள் ஒடுக்கப்பட வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளில் இனி  சட்டம் இயற்றுவோர் இறங்க வேண்டும்! அதுவே நமது வேண்டுகோள்!

Tuesday, 1 September 2020

பெயர் மாற்றம் தேவையே!

 தமிழ்ப்பள்ளிகளைப் பொறுத்தவரை இன்னும் பல பள்ளிகள் தோட்டப்புற பெயர்களைக் கொண்டே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

ஒரு காலத்தில் அது சரி. இப்போது அது சரியா? ஏற்கனவே கூட இது பற்றி நான் எழுதியிருக்கிறேன்.

சமீபத்தில் மீண்டும் அந்தப் பிரச்சனை எழுந்த போது அது பற்றி எழுத வேண்டிய அவசியம் வந்து விட்டது.

சிரம்பான் ஜாவா லேன் தமிழ்ப்பள்ளியின் பெயர் மாற்றம் குறித்து பேசியிருக்கிறார்கள்.  இப்போது அது லோரோங் ஜாவா என்று மாற்றப்பட்டிருக்கிறது.

நான் படித்த பள்ளி அருகிலேயே ஜாவா லேன் பள்ளி இருந்ததால் அந்தப் பள்ளியை நான் அறிந்திருக்கிறேன்.  அந்தப் பள்ளிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது  என்பது இது வரைக்கும் எனக்குத் தெரியாது.  அந்தப் பள்ளியில் எனது நண்பர் ஒருவர் தலைமையாசிரியராக இருந்திருக்கிறார் அவரிடம் கூட நான் அது பற்றிப் பேசியதில்லை! 

பாரிசான் கட்சி ஆட்சியில் இருந்த போது தமிழ்ப்பள்ளிகளின் பெயர்களை மாற்ற அவர்கள் அனுமதி தந்ததில்லை.  தமிழ்ப்பள்ளிகளைக் கேவலப்படுத்த வேண்டும் என்பதில் அவர்கள் தீவிரமாக இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள்! அதனால் தான் மலாக்காவில் தமிழ்ப்பள்ளிகளின் அதிகாரியாக தமிழரல்லாதவரை போட்டிருக்கிறார்கள்!  ம.இ.கா.வினர் தட்டிக்கேட்க மாட்டார்கள் என்பது அமைச்சுக்குத் தெரியும்!

என்னிடம் ஒரு கேள்வி உண்டு. ஜாவா லேன் தமிழ்ப்பள்ளி எப்படி லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியாயிற்று? பெயர் மாற்ற முடியாது என்றால் இங்கு எப்படி சாத்தியமாயிற்று?  அதனால் பெயர் மாற்றம் முடியும் என்றாகிறது.

பரவாயில்லை! அதை விடுவோம்.  இப்போது நெகிரி செம்பிலான் மாநிலம் பாரிசான் கட்சியின் ஆட்சியில் இல்லை. இப்போது அது எதிர்கட்சி ஆட்சியில் உள்ளது. நாம் ஏன் இதனைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை?  நெகிரி ஆட்சிக் குழுவில் இரு இந்தியர்கள் இருக்கின்றனர். அதோடு துணை சபாநாயகர் டத்தோ ரவி உள்ளார்.

இந்த நிலையில் பெயர் மாற்றம் இயலாததா?  நாம் அதில் அக்கறை காட்டவில்லை! அது தான் பிரச்சனை!

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் இதனை செய்யலாம். செய்ய வேண்டும். ஒரு வேளை அவர்கள் ம.இ.கா. ஆதரவாளர்களாக இருக்கலாம். அதனால் நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பாளர்களாகவே இருப்போம் என்று நினைத்தால் அவர்கள் துரோகிகள்.

நமது மொழி, நமது பள்ளிக்கூடம் என்று வரும் போது கட்சி என்று ஒன்று வரக் கூடாது! அதனைத் தூக்கி எறிந்து விட்டு எது நமக்கு நல்லதோ அது தான் நமக்கு வேண்டும். 

சீக்கிரம் இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் என நம்புகிறோம்!