நாளை (3.9.2020) வியாழக்கிழமை, பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தி, காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமீட் படோருடன் ஒரு சந்திப்பை நடத்தவிருக்கிறார்.
இது ஒரு நீண்ட நாள் பிரச்சனை. இந்திரா காந்தியின் குழந்தை, அவருடைய முன்னாள் கணவரால் கடத்தப்பட்டு இப்போது பதினோரு ஆண்டுகளாகின்றன. பதினோரு வயதாகும் அந்தக் குழந்தையை இது நாள் வரை அந்தக் குழந்தை தாயிடம் சேர்க்கப்படவில்லை. நீதிமன்றம் அந்தக் குழந்தை தாயிடம் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறியும் இதுவரை எதுவும் நடக்கவில்லை. காவல்துறையினர் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கைவிரித்து விட்டனர்! அந்த முன்னாள் கணவர் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை அறிந்தவர் போலும்!
எப்படியிருப்பினும் இந்த சந்திப்பு என்பது ஒரு நல்ல முன்னேற்றம். இது நாள் வரை என்னன்னவோ காரணங்கள் கூறியிருந்தாலும் கடந்த சில மாதங்களாக ஐ.ஜி.பி. கொஞ்சம் மனிதாபிமானத்தோடு இந்தப் பிரச்சனையைக் கையாண்டு வருகிறார் என்பது அவர் பேச்சிலிருந்து நமக்குத் தெரிகிறது.
'இல்லை! முடியாது!' என்றெல்லாம் அவர் பேசவில்லை. 'முடியும்! பேச்சுவார்த்தை நடத்தலாம்! ஒரு மூத்த அரசியல்வாதியின் உதவியை நாடியிருக்கிறோம்!' என்று அவர் பேசி வருவதைப் பார்க்கும் போது அவரிடம் நல்லதொரு திட்டம் இருக்கிறது என நம்பலாம்.
நல்லது நடக்க வேண்டும் என்பது தான் நமது பிரார்த்தனை. தனது குழந்தையைப் பார்க்காமல் ஒரு தாய் பதினோரு ஆண்டுகளாக தவித்துக் கொண்டிருக்கிறார். அவரின் தவிப்பு, அவரின் வேதனை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
இங்கு மனிதாபிமானம் தான் முக்கியமே தவிர மதம் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். தாயிடமிருந்து குழந்தை பிரிக்கப்படுவதை எந்த மதமும் ஏற்றுக் கொள்ளாது.
எப்படியோ நல்லது நடக்க வேண்டும். நல்லது நடக்கும் என நம்புகிறேன்.
நல்லது நடக்க பிரார்த்திக்கிறேன்!
No comments:
Post a Comment