இப்போது பாஸ் கட்சியினருக்கு ஒரு சிறந்த தளம் கிடைத்திருப்பதாகத் தோன்றுகிறது.
மதங்களைப் பற்றி பேசுவது என்பது அவர்களுக்குச் சாதாரணமாகி விட்டது. தங்களது மதத்தைப் பற்றி பேசுவதை விட பிற மதங்களைப் பற்றி பேசுவது இன்னும் சாதாரணமாகக் கருதுகிறார்கள்.
ஒரு விஷயம் நமக்குப் புரியவில்லை. ஒரு மதத்தைப் பற்றி பேச வேண்டும் என்றால் அந்த மதத்தைப் பற்றி நமக்கு நல்ல அறிவாற்றல் வேண்டும். தக்க அறிஞர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும்.
ஒரு புனித நூலை ஏதோ ஓரிரு முறைப் படித்துவிட்டு அல்லது ஒரு சில வரிகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு அது பற்றி விமர்சனம் செய்வதோ அல்லது "அனைத்தும் நாம் அறிவோம்!" என்று சிவாஜி பாணியில் பேசுவதோ எதற்கும் உதவாது!
ஒரு புனித நூலை அப்படியெல்லாம் படித்து விட முடியாது! அப்படியே படித்தாலும் புரிந்து கொள்ள முடியாது. புரிந்து கொண்டாலும் அதனை முடிந்த முடிவாகக் கருதி விட முடியாது!
இப்போது நமது நாட்டிலேயே எடுத்துக் கொள்ளுவோம். இஸ்லாமிய சமயத்துறையில் எத்தனை இஸ்லாமிய அறிஞர்களை இந்நாடு பெற்றிருக்கிறது? சான்றுக்கு ஒரு பிரச்சனையைப் பார்ப்போம். பாலர்பள்ளி ஆசிரியை இந்திரா காந்தி குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக இங்குள்ள 'அறிஞர்களுக்கு' எந்த விதக் கருத்தும் சொல்ல இயலவில்லை! ஆனால் வெளிநாடுகளில் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் அதனைத் தவறு என்று சுட்டிக் காட்டியிருந்தார்கள்! இங்குள்ளவர்கள் அதனைப் பற்றி கருத்துச் சொல்ல முடியவில்லை என்றால் இவர்களுக்கு அந்த நிபுணத்துவம் இல்லை என்று தானே பொருள்?
எல்லாவற்றையும் விட ஒரு கருத்தை ஆழமாகப் பதிவு செய்கிறேன். அரசியல்வாதிகள், தாங்கள் முஸ்லிம்கள் என்கிற ஒரே காரணத்தை வைத்துக் கொண்டு, பிற மதங்களை நையாண்டி செய்வதோ, கேலி செய்வதோ தொடர்ந்தால் இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகளுக்கு மதம் என்பது ஒரு பொழுது போக்கு! பொதுவாகவே அரசியல்வாதிகளுக்கு அறிவு என்பது கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். இதில் வேறு பிற மதத்தினரை இவர்கள் கிண்டல் செய்கிறார்கள். ஏற்கனவே இவர்கள் அரைகுறைகள்!
பிற மதங்களைப் பற்றி பேசும் அரசியல்வாதிகளுக்கு அது பற்றி பேச உரிமை இல்லை. அவர்களுக்குத் தண்டனைப் பெற்றுத் தர வேண்டும். இது முக்கியம்.
பாஸ் கட்சியினர் நடுவண் அரசாங்கத்தில் இப்போது பங்கு பெற்றிருப்பதால் இவர்களின் பிற மதத் தாக்குதல்கள் தொடரும் என நம்பலாம். அவர்கள் ஒடுக்கப்பட வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகளில் இனி சட்டம் இயற்றுவோர் இறங்க வேண்டும்! அதுவே நமது வேண்டுகோள்!
No comments:
Post a Comment