தமிழ்ப்பள்ளிகளைப் பொறுத்தவரை இன்னும் பல பள்ளிகள் தோட்டப்புற பெயர்களைக் கொண்டே இயங்கிக் கொண்டிருக்கின்றன.
ஒரு காலத்தில் அது சரி. இப்போது அது சரியா? ஏற்கனவே கூட இது பற்றி நான் எழுதியிருக்கிறேன்.
சமீபத்தில் மீண்டும் அந்தப் பிரச்சனை எழுந்த போது அது பற்றி எழுத வேண்டிய அவசியம் வந்து விட்டது.
சிரம்பான் ஜாவா லேன் தமிழ்ப்பள்ளியின் பெயர் மாற்றம் குறித்து பேசியிருக்கிறார்கள். இப்போது அது லோரோங் ஜாவா என்று மாற்றப்பட்டிருக்கிறது.
நான் படித்த பள்ளி அருகிலேயே ஜாவா லேன் பள்ளி இருந்ததால் அந்தப் பள்ளியை நான் அறிந்திருக்கிறேன். அந்தப் பள்ளிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்பது இது வரைக்கும் எனக்குத் தெரியாது. அந்தப் பள்ளியில் எனது நண்பர் ஒருவர் தலைமையாசிரியராக இருந்திருக்கிறார் அவரிடம் கூட நான் அது பற்றிப் பேசியதில்லை!
பாரிசான் கட்சி ஆட்சியில் இருந்த போது தமிழ்ப்பள்ளிகளின் பெயர்களை மாற்ற அவர்கள் அனுமதி தந்ததில்லை. தமிழ்ப்பள்ளிகளைக் கேவலப்படுத்த வேண்டும் என்பதில் அவர்கள் தீவிரமாக இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள்! அதனால் தான் மலாக்காவில் தமிழ்ப்பள்ளிகளின் அதிகாரியாக தமிழரல்லாதவரை போட்டிருக்கிறார்கள்! ம.இ.கா.வினர் தட்டிக்கேட்க மாட்டார்கள் என்பது அமைச்சுக்குத் தெரியும்!
என்னிடம் ஒரு கேள்வி உண்டு. ஜாவா லேன் தமிழ்ப்பள்ளி எப்படி லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியாயிற்று? பெயர் மாற்ற முடியாது என்றால் இங்கு எப்படி சாத்தியமாயிற்று? அதனால் பெயர் மாற்றம் முடியும் என்றாகிறது.
பரவாயில்லை! அதை விடுவோம். இப்போது நெகிரி செம்பிலான் மாநிலம் பாரிசான் கட்சியின் ஆட்சியில் இல்லை. இப்போது அது எதிர்கட்சி ஆட்சியில் உள்ளது. நாம் ஏன் இதனைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை? நெகிரி ஆட்சிக் குழுவில் இரு இந்தியர்கள் இருக்கின்றனர். அதோடு துணை சபாநாயகர் டத்தோ ரவி உள்ளார்.
இந்த நிலையில் பெயர் மாற்றம் இயலாததா? நாம் அதில் அக்கறை காட்டவில்லை! அது தான் பிரச்சனை!
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் இதனை செய்யலாம். செய்ய வேண்டும். ஒரு வேளை அவர்கள் ம.இ.கா. ஆதரவாளர்களாக இருக்கலாம். அதனால் நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பாளர்களாகவே இருப்போம் என்று நினைத்தால் அவர்கள் துரோகிகள்.
நமது மொழி, நமது பள்ளிக்கூடம் என்று வரும் போது கட்சி என்று ஒன்று வரக் கூடாது! அதனைத் தூக்கி எறிந்து விட்டு எது நமக்கு நல்லதோ அது தான் நமக்கு வேண்டும்.
சீக்கிரம் இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் என நம்புகிறோம்!
No comments:
Post a Comment