Saturday, 31 October 2020

கட்சி தாவும் சட்டம் தேவையான ஒன்றூ!

 கட்சி தாவுவதை தடுப்பதற்கான சட்டத்தை இயற்றுங்கள் என்பதாக வழக்கறிஞர் மன்றம் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறது!

என்ன தான் கூப்பாடு போட்டாலும் இவர்களுக்கு அது மண்டையில் ஏறுவதில்லை! யாருக்கு? சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு?

என்ன காரணம்? ஐந்து வருடங்கள் இவர்கள் கொள்ளையடிக்கும் பணத்தை,  இப்படித் தாவுவதன் மூலம்,  ஐந்தே மாதங்களில் அதை விடக் கூடுதலாக சம்பாதித்து விடலாம்!

இப்படிக் கொள்ளையடிப்பதற்கு இவர்கள் படித்த படிப்பு என்ன? அடேயப்பா! ஒருவன் வழக்கறிஞன் என்கிறான்! ஒருவன் டாக்டர் என்கிறான்! ஒருவன் கணக்காளர் என்கிறான்!  ஆனால் கொள்ளையடிப்பதற்கு எல்லாருமே குருகுலக் கல்வி கற்றிருக்கிறார்கள்!

ஏன் இந்த சட்டம் தேவை? இதற்கு நாம் எங்கெங்கோ தேடி ஓட வேண்டியதில்லை! நமது மலேசிய சரித்திரத்திலேயே இப்போதுதான் முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தைக் கொண்டு வந்து நடூவீதியில் நிறுத்தி விட்டார்கள் படித்த நமது மாண்புமிகுகள்!  அதற்குக் காரணம் கட்சித் தாவுதல்!

இப்போது ஒரு சிலர் சேர்ந்து கொல்லைப்புற வழியாக அரசாங்கத்தை அமைத்துக் கொண்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! இப்படி ஒரு சூழலை நமது நாடு சந்தித்ததில்லை!  அதனால் இப்போது ஒரு நிலையான அரசாங்கம் இல்லை! இப்போது யார் பிரதமர் என்கிற சந்தேகம் கூட ஏற்பட்டுவிட்டது! யார் கையில் வாக்கு அதிகமாக இருக்கிறதோ அவன் தான் பின்னணியில் இருந்து கொண்டு பிரதமராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்!  அதற்குக் காரணம் கட்சித் தாவுதல்!

 ஒரு நிலையான அரசாங்கம் நமக்குத் தேவை.  இதற்கு முன்னர் பாரிசான்  கட்சி தான்  ஆட்சியிலிருந்தது.  சாமிவேலு இருந்தார்! நஜீப் இருந்தார்! ரோஸ்மா இருந்தார்! நமக்குத் தேவை இல்லாதது எல்லாமே இருந்தாலும்  ஒரு நிலையான அரசாங்கம் இருந்தது!

ஆனால் இன்று அப்படியா? தடி எடுத்தவன் எல்லாம் தண்டலாகி விட்டான்! எந்த நேரத்திலும் அரசாங்கம் கவிழும் அபாயத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது!

அதற்குத் தான் நாம் சொல்லுவது கட்சி தாவுதலைத் தடுக்கும் சட்டம் தேவை! தேவை!  இல்லாவிட்டால் நாட்டை துக்ளக் ஆட்சியாக மாற்றி விடுவார்கள் நமது மாண்புமிகுகள்!

இது அவசியம்! இது உடனடித் தேவை!

Friday, 30 October 2020

பொருட்களைப் புறக்கணியுங்கள்!

 மேற்கத்திய நாடுகளுடன் நமக்குப் பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம் உடனே "அவர்களின் பொருட்களைப் புறக்கணியுங்கள்!"  அல்லது "அழிக!", "ஒழிக!" என்கிற கோஷங்க்ள் எழுப்பப்படுவதை நாம் பார்க்கிறோம்.  

ஆர்ப்பாட்டங்கள் என்கிற நிலை வரும் போது எதுவும் பேசலாம்! எதுவும் நடக்கலாம்! 

இப்போது நடந்து கொண்டிருக்கும் தாக்குதல் பிரான்ஸ் நாட்டின் மீது என்பது நமக்குத் தெரியும். 

ஒரு வகையில் நான் வித்தியாசப்படுகிறேன்.  புறக்கணியுங்கள் என்று ஏன் மக்களைப் பார்த்துச் சொல்லுகிறீர்கள்?  அதனை அரசாங்கமே செய்யலாமே! அரசாங்கம்,   குறிப்பிட்ட அந்த நாட்டின் பொருட்களைத் தடை செய்வதும் - அந்நாட்டின் பொருட்கள் இங்குக் கிடைக்காமல் இருக்கச் செய்வதும் - பெரிய பிரச்சனை ஒன்றுமில்லையே!   அரசாங்கமே மிக எளிதாகச் செய்து விடலாமே!

பிரான்ஸ் நாட்டின் பொருட்களை இங்கு வாங்குபவர்கள் யார்?  நாம் என்ன அங்கிருந்து  வெங்காயம், பூண்டு, புண்ணாக்கா வாங்குகிறோம்? அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யாவிட்டால் இங்கு உள்ள ஏழை, எளியவர்கள் எல்லாம் செத்தா  போய் விடுவார்கள்? 

உண்மையில் அவர்களின் பொருட்களை வாங்குபவர்கள் யார்?   கோஷம் போடுபவர்கள்!  பணக்காரர்கள்! இங்கு இல்லை என்றால் அங்கு போய் வாங்குபவர்கள்!  இவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகள்! அவர்கள் வீட்டுப் பொம்மனாட்டிகள்! அவர்கள் வீட்டு வாரிசுகள்!  அப்படி அந்த நாட்டின் பொருட்களைத் தடை செய்தால் இவர்களின் உயிர்களுக்கு யார் உத்தரவாதம் தருவது? இன்றைய நிலையில் ஒரு தொழிலதிபரை விட அரசியல்வாதி தானே பெரும் பணக்காரனாக இருக்கிறான்!

ஏதோ ஒரு நோக்கதிற்காக ஆர்ப்பாட்டங்கள் செய்கிறோம்.  அவர்களின் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்பதெல்லாம் தேவையில்லாத பேச்சு! அது நடக்கப்போவதில்லை!  எல்லாம் வெளி வேஷம் தான்!  காலங்காலமாக இது நடந்து கொண்டிருக்கிறது!  அரசியல்வாதிகள் இருக்கும் வரை எந்த நாட்டின் பொருட்களையும் புறக்கணிக்க முடியாது!

பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்.  சும்மா பொருட்களைப்  புறக்கணியுங்கள் என்று  அள்ளி விடாதீர்கள்!

இப்படிப் பேசினால் தான் நமக்குச் சாதகமாக இருக்கும் என்று அனைத்தையும் அரசியல் ஆக்காதீர்கள்!

Thursday, 29 October 2020

பிரதமர் முகைதீன் தப்பித்தார்!

 வருகிற நவம்பர் 6 - நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்நோக்கியிருந்த பிரதமர் முகைதீன் இப்போது கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுவார் என எதிர்பார்க்கலாம்!

நமது பேரரசர்  பிரதமருக்குக் கைக் கொடுத்திருக்கிறார்!

நாட்டி நலனைக் கருத்தில்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்.  வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2021 வரவுசெலவுத் திட்டம் மிக மிக முக்கியம்.  குறிப்பாக கொரோனா தொற்று நோய் மேலும் மேலும் பரவாமலிருக்க அதனைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவது அவசியம். அதற்கான செலவுகளும் அதிகம்.

இது நாட்டு நலன் சார்ந்தது.  இந்த நேரத்தில் பதவிப் போராட்டம்,  நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்ப்பது போன்றவை நாட்டுக்கு எந்த நல்லதையும் கொண்டு வரப்போவதில்லை>   மக்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்தும்.

அது மட்டும் அல்லாமல் இது போன்ற நடவடிக்கைகள் நமக்குப் புதிது.  இன்றைய சூழலுக்குக் காரணமானவர்களில் நமது பிரதமரும் ஒருவர்!  என்ன செய்வது? பிரதமர் பதவி என்பது அதிகாரம் மிக்க ஒரு பதவி.  யாருக்குத்தான்  அந்தப் பதவி மீது ஆசை இல்லாமல் இருக்கும். இப்போதும் அந்த அதிகாரத்தை வைத்துத் தானே பதவியிலிருக்கிறார்!

ஆனாலும் நாட்டில் அமைதி முக்கியம். மக்களின் அன்றாட வாழ்க்கை முக்கியம்.  அதுவும் இப்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்று நோயை முற்றிலுமாக ஒழிப்பது முக்கியம்.  வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு போகிறது.  அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும். 

அதனால் தான் நாட்டு நலனை முன் நிறுத்துங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார் மாமன்னர். மன்றத்தில் உள்ளவர்கள் அனைவருமே படித்தவர்கள்.  மூளையைப் பயன்படுத்துவார்கள்  என நம்பலாம்.

ஆனால் அம்னோ போன்ற பெரிய கட்சிகள் இன்னும் அரசாங்கத்திற்கு நெருக்குதல்கள் கொடுப்பதாகவே தெரிகிறது. நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னரே அவர்களுக்குக் காரியம் ஆக வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் நினைத்தது எதுவும் நடக்காமல் போகலாம்! இது தான் அரசியல்! யார் யாரையும் நம்பும்படியாக இல்லை!

இவர்களின் நடவடிக்கைகளைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பேரரசரின் சொல் அம்பலம் ஏறுமா என்பதைப் பார்ப்போம்!