மேற்கத்திய நாடுகளுடன் நமக்குப் பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம் உடனே "அவர்களின் பொருட்களைப் புறக்கணியுங்கள்!" அல்லது "அழிக!", "ஒழிக!" என்கிற கோஷங்க்ள் எழுப்பப்படுவதை நாம் பார்க்கிறோம்.
ஆர்ப்பாட்டங்கள் என்கிற நிலை வரும் போது எதுவும் பேசலாம்! எதுவும் நடக்கலாம்!
இப்போது நடந்து கொண்டிருக்கும் தாக்குதல் பிரான்ஸ் நாட்டின் மீது என்பது நமக்குத் தெரியும்.
ஒரு வகையில் நான் வித்தியாசப்படுகிறேன். புறக்கணியுங்கள் என்று ஏன் மக்களைப் பார்த்துச் சொல்லுகிறீர்கள்? அதனை அரசாங்கமே செய்யலாமே! அரசாங்கம், குறிப்பிட்ட அந்த நாட்டின் பொருட்களைத் தடை செய்வதும் - அந்நாட்டின் பொருட்கள் இங்குக் கிடைக்காமல் இருக்கச் செய்வதும் - பெரிய பிரச்சனை ஒன்றுமில்லையே! அரசாங்கமே மிக எளிதாகச் செய்து விடலாமே!
பிரான்ஸ் நாட்டின் பொருட்களை இங்கு வாங்குபவர்கள் யார்? நாம் என்ன அங்கிருந்து வெங்காயம், பூண்டு, புண்ணாக்கா வாங்குகிறோம்? அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யாவிட்டால் இங்கு உள்ள ஏழை, எளியவர்கள் எல்லாம் செத்தா போய் விடுவார்கள்?
உண்மையில் அவர்களின் பொருட்களை வாங்குபவர்கள் யார்? கோஷம் போடுபவர்கள்! பணக்காரர்கள்! இங்கு இல்லை என்றால் அங்கு போய் வாங்குபவர்கள்! இவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகள்! அவர்கள் வீட்டுப் பொம்மனாட்டிகள்! அவர்கள் வீட்டு வாரிசுகள்! அப்படி அந்த நாட்டின் பொருட்களைத் தடை செய்தால் இவர்களின் உயிர்களுக்கு யார் உத்தரவாதம் தருவது? இன்றைய நிலையில் ஒரு தொழிலதிபரை விட அரசியல்வாதி தானே பெரும் பணக்காரனாக இருக்கிறான்!
ஏதோ ஒரு நோக்கதிற்காக ஆர்ப்பாட்டங்கள் செய்கிறோம். அவர்களின் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்பதெல்லாம் தேவையில்லாத பேச்சு! அது நடக்கப்போவதில்லை! எல்லாம் வெளி வேஷம் தான்! காலங்காலமாக இது நடந்து கொண்டிருக்கிறது! அரசியல்வாதிகள் இருக்கும் வரை எந்த நாட்டின் பொருட்களையும் புறக்கணிக்க முடியாது!
பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். சும்மா பொருட்களைப் புறக்கணியுங்கள் என்று அள்ளி விடாதீர்கள்!
இப்படிப் பேசினால் தான் நமக்குச் சாதகமாக இருக்கும் என்று அனைத்தையும் அரசியல் ஆக்காதீர்கள்!
No comments:
Post a Comment