Thursday 29 October 2020

பிரதமர் முகைதீன் தப்பித்தார்!

 வருகிற நவம்பர் 6 - நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்நோக்கியிருந்த பிரதமர் முகைதீன் இப்போது கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுவார் என எதிர்பார்க்கலாம்!

நமது பேரரசர்  பிரதமருக்குக் கைக் கொடுத்திருக்கிறார்!

நாட்டி நலனைக் கருத்தில்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்.  வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2021 வரவுசெலவுத் திட்டம் மிக மிக முக்கியம்.  குறிப்பாக கொரோனா தொற்று நோய் மேலும் மேலும் பரவாமலிருக்க அதனைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவது அவசியம். அதற்கான செலவுகளும் அதிகம்.

இது நாட்டு நலன் சார்ந்தது.  இந்த நேரத்தில் பதவிப் போராட்டம்,  நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்ப்பது போன்றவை நாட்டுக்கு எந்த நல்லதையும் கொண்டு வரப்போவதில்லை>   மக்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்தும்.

அது மட்டும் அல்லாமல் இது போன்ற நடவடிக்கைகள் நமக்குப் புதிது.  இன்றைய சூழலுக்குக் காரணமானவர்களில் நமது பிரதமரும் ஒருவர்!  என்ன செய்வது? பிரதமர் பதவி என்பது அதிகாரம் மிக்க ஒரு பதவி.  யாருக்குத்தான்  அந்தப் பதவி மீது ஆசை இல்லாமல் இருக்கும். இப்போதும் அந்த அதிகாரத்தை வைத்துத் தானே பதவியிலிருக்கிறார்!

ஆனாலும் நாட்டில் அமைதி முக்கியம். மக்களின் அன்றாட வாழ்க்கை முக்கியம்.  அதுவும் இப்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்று நோயை முற்றிலுமாக ஒழிப்பது முக்கியம்.  வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு போகிறது.  அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும். 

அதனால் தான் நாட்டு நலனை முன் நிறுத்துங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார் மாமன்னர். மன்றத்தில் உள்ளவர்கள் அனைவருமே படித்தவர்கள்.  மூளையைப் பயன்படுத்துவார்கள்  என நம்பலாம்.

ஆனால் அம்னோ போன்ற பெரிய கட்சிகள் இன்னும் அரசாங்கத்திற்கு நெருக்குதல்கள் கொடுப்பதாகவே தெரிகிறது. நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னரே அவர்களுக்குக் காரியம் ஆக வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் நினைத்தது எதுவும் நடக்காமல் போகலாம்! இது தான் அரசியல்! யார் யாரையும் நம்பும்படியாக இல்லை!

இவர்களின் நடவடிக்கைகளைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பேரரசரின் சொல் அம்பலம் ஏறுமா என்பதைப் பார்ப்போம்!

No comments:

Post a Comment