Friday, 6 August 2021

நான் விலகுவதாக இல்லை!

 "நான் விலகுவதாக இல்லை! எனக்குப் போதுமான ஆதரவு இருக்கிறது! செப்டம்பர் மாதம் நாடாளுமன்றம் கூடும் போது அதனை நான் நிருபிப்பேன்!" என்று மீண்டும் தனது நிலையை உறுதிபடுத்தியிருக்கிறார் பிரதமர் முகைதீன்!

முகைதீன் என்று பிரதமர் பதவியைக் கைப்பற்றினாரோ அன்றிலிருந்தே அவர் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டு வருகிற ஒரே மந்திர வார்த்தை  இது தான். "எனக்கு ஆதரவு உண்டு!" என்கிற ஒரே வார்த்தையையே மீண்டும் மீண்டும் சொல்லியே,  அதை நிருபிக்க முடியாமல்,  பதவியில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்! அது தான் அவரது சாமர்த்தியம்!

பதவியில் நீடிக்க,  மக்களின் வரிப்பணத்தில் பல "தியாகங்களை!"  தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்! தகுதியற்றவர்களை எல்லாம் பல பதவிகளில் அவர் அமர்த்தியிருக்கிறார். ஆகக் கடைசியாக ஒருவரை தனக்கு ஆலோசகராக நியமித்திருக்கிறார்! எனன ஆலோசகர்? புரியவில்லை! அதோடு மட்டும் அல்லாமல் அவர் ஓர் அமைச்சர் அந்தஸ்த்தைப் பெற்ற ஆலோசகராக இருப்பார்! அமைச்சர் பதவியைக் கொடுக்க முடியாததற்கு  இப்படிப்பட்ட ஆலோசகர் பதவி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்! இவர் பதவியில் நீடிப்பதற்கு இன்னும் எத்தனை அமைச்சர் பதவியை உருவாக்குவாரோ, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! பிரதமர் பதவிக்காக அவர் செய்கின்ற தியாகங்கள் நம்மைக்  கண் கலங்க வைக்கின்றன!

நாடாளுமன்றத்தை இந்த மாதம், ஆகஸ்ட் 9-ம் தேதியன்று கூட்ட வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. ஆனால் பிரதமரோ அடுத்த மாதம் (செப்டம்பர்) நாடாளுமன்றம் கூடும் என்கிறார்! ஆக, அவர் சொல்லுவது தான் நடக்கும் என நம்பலாம்!

இதுவரை எதிர்க்கட்சிகள் சொன்ன ஏதாவது ஒன்று நடந்திருக்கிறதா? ஒன்றுமேயில்லை! இவர்கள் கத்தோ கத்து என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள்! அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்! என்னன்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள்! ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்! எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்! ஊகூம்! எதுவுமே நடக்கவில்லை! ஒன்றும் அசையவில்லை!

முகைதீன் கையில் நல்லதொரு ஆயுதத்தை வைத்திருக்கிறார்.  அவர் பதவி ஏற்ற காலத்திலிருந்தே அவருக்கு அது கை கொடுக்கிறது. அது தான் கோவிட்-19. இன்றளவும் அந்தத் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வராததற்குக் காரணம் அது திட்டமிட்டே பரப்பப்பட்டது தான்! இன்றளவும் அந்தத் தொற்று அவருக்குக் கை கொடுத்துக் கொண்டு வருகிறது என்பதில் எந்த ஐயமுமில்லை!

அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூட்ட  முடியாததற்குக் காரணமும் கோவிட்-19  தான்!  அதைத்தான் அவர் மீண்டும் மீண்டும் சொல்லுவார்! அவர் சொல்லுகின்ற வார்த்தை தான் இறுதியானது!

நான் விலகுவதாக இல்லை! அதற்கு அவசியம் இல்லை! எனக்கு ஆதரவு உண்டு!

நான் தவறு செய்து விட்டேன்!

 சமீபத்தில் டாட்டாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின், பிரதமர் முகைதீன் அரசாங்க எதிர்ப்புக் கூட்டத்தில் தான் கலந்து கொண்டது மிகப்பெரிய தவறு என்பதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் கூறியிருக்கிறார்.

"கோவிட்-19 பெரிய அளவில் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் இது போன்ற கூட்டங்கள் எந்த சமூக இடைவெளியையும்  கடைப்பிடிக்காமல் நடப்பது மிகவும் ஆபத்தாக முடியும்.  இது போன்ற கூட்டங்கள் நடைபெறக் கூடாது. தொற்று மேலும் பரவக் கூடாது என்பதில் நம் அனைவருக்கும் பொறுப்பு உண்டு." என்கிறார் டாக்டர் மகாதிர்.

சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது என்பது மிகவும் அத்தியாவசியம். அதுவும் புதிய வரவான டெல்டா வைரஸ் இன்னும் ஆபத்தானது. காற்றில் கூட தொற்றும் தன்மை கொண்டது. ஒரு வேளை நாம் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டாலும் இனி மேல் ஆபத்து இல்லை என்று நினைப்பதும் தவறு. தொடர்ந்து நாம் முகக்கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்றித் தான் ஆக வேண்டும். 

டாக்டர் மகாதிர், கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர்,  அவர் தன்னைப் பரிசோதித்துக் கொண்டு, தனக்கு ஆபத்தில்லை என்பதையும் உறுதி செய்து கொண்டார். நம்மால் எத்தனை பேருக்கு அது முடியும்? நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் தவறாமல் கட்டளைகளைக் கடைப்பிடிப்பது தான். பணி செய்கின்ற இடங்களிலும் நாம் அதனைப் பின்பற்றத்தான் வேண்டும். கொஞ்சம் அசௌகரியம் தான். வேறு வழியில்லை! சில சமயங்களில் சில அசௌகரியங்களைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இப்போது நாட்டில் நாளொன்றுக்கு 20,000 பேருக்கு மேல் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை. இந்த நிலையில் மருத்துவமனைகளுக்குப் போனால் என்ன ஆகும்? முடிந்தவரை சீக்கிரம் "முடி"க்கத்தான் பார்ப்பார்கள்! நமது குடும்ப உறுப்பினர்களை நினைத்தாவது நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை என்கிற பேச்சு அடிக்கடி எழுகிறது. அதனால் தடுப்பூசி என்பது நமது முதல் கடமை. 

தடுப்பூசி போட்ட பின்னரும் கோவிட்-19 வந்தவர்கள் உண்டு. ஆனால் மரணம் என்கிற அளவுக்குப் போகாது. தடுப்பூசி போட்ட பின்னரும் மூன்று முறை கோவிட்-19 வந்தவர்கள் உண்டு. ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை. அதனால் தடுப்பூசி நமது முதல் கடமை.

இப்போது நாளொன்றுக்கு ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் போடப்படுகின்றனவாம். அதனை எட்டு இலட்சமாக அதிகரிக்க வேண்டும் என்கிறார் டாக்டர் மகாதிர்.  இதுவும் நடக்கும்.

டாக்டர் மகாதிர் "நான் தவறு செய்து விட்டேன்!" என்பதை ஒப்புக் கொண்டார். நீங்களும் நானும் அந்தத் தவற்றை செய்ய வேண்டாம்! அதுவே நாம் நாட்டுக்குச் செய்யும் சேவை!

Thursday, 5 August 2021

சில மல்யுத்த நினவுகள்!

 அட! இந்த "சார்பட்டா பரம்பரை" திரைப்படம்  வந்த பிறகு பல பழைய சம்பவங்கள் நினவுக்கு வந்துவிட்டன!

ஒன்று மட்டும் நிச்சயம். வட சென்னையில் இனி குத்துச்சண்டை முன்பைவிட இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். வட சென்னை மட்டும் அல்ல தமிழர்கள் வாழும்  அனைத்து நாடுகளிலும் இந்தப் படம் இளைஞரிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தான் செய்யும்! அதனால் என்ன? அதனை ஒரு சிறந்த விளையாட்டாக எடுத்துக் கொள்வதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை.

அதுவும் நமது மலேசிய நாட்டில் குத்துச்சண்டை, தற்காப்புக்கலைகள்  அனைத்திலும் நமது  இளைஞர்களின் பங்களிப்பு பெருமைப்படத் தக்கதாகத் தான் இருக்கிறது.  இந்தத் திரைப்படத்திற்குப் பின்னர் இந்த ஆர்வம், குறிப்பாக குத்துச்சண்டையில்,  அதிகரிக்கும் என நம்பலாம். ஆனால் வன்முறை மட்டும் வேண்டாம் என ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அது முக்கியம்.

என் வயதை ஒத்த சிலருக்கு அந்தக் கால நினைவுகள் வரத்தான் செய்யும். 1960-களில் என்று எடுத்துக் கொள்ளுங்களேன். அப்போது மல்யுத்தம் என்பது மிகவும் பிரசித்தம்.

குறிப்பாக இந்தியா, பஞ்சாப் மாநிலத்திலிருந்து வந்த மல்யுத்த வீரர்களின் மல்யுத்த நிகழ்ச்சிகள் நிறையவே நடந்துள்ளன. வேறு பலரும் வந்திருக்கலாம். ஆனால் என்னால்  ஞாபகத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. மன்னிக்கவும். வந்தவர்கள் எல்லாம் "சிங்" என்பதால் பஞ்சாப் மாநிலம் என்று குறிப்பிடுகிறேன்.

அப்போது பல மல்யுத்த வீரர்களின் போட்டிகள் நடந்துள்ளன. அவர்களின் பெயர்கள் மறந்து போய் விட்டன! அப்போது மிகவும் பிரபலமான பெயர் என்றால் அது தாரா சிங் மட்டும் தான். அத்தோடு டைகர் ஜகித் சிங், கிங் கோங் போன்ற பெயர்கள் பிரபலம்.  அதில் ஒரு சிங் மாமிசமலை என்பார்களே அது போன்ற உருவம். அவரால் காரில் பயணம் செய்ய முடியாது! சிறிய லோரியைப் பயன்படுத்தவார்! என்பதாகச் சொல்லப்பட்டது!

ஆனால் நான் இங்கு சொல்ல வருவதெல்லாம் அந்த விளையாட்டு  தோட்டப்புறங்களிலே உள்ள இளைஞர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின என்பது தான். எங்குப் பார்த்தாலும் இளைஞர்களிடையே மல்யுத்தப் போட்டிகள் நடந்து கொண்டிருந்தன. பொது இடங்களில் அல்ல என்றாலும் ஆற்றோரங்களில் அல்லது மறைவான இடங்களில் தினசரி நடக்கும் நிகழ்ச்சியாக இருந்தன! மல்யுத்தம் என்றால் அதன் "பிடி" வகைகள் தான் முக்கியம். கிடுக்குப்பிடி என்பார்களே அது போல.வெற்றி பெற பிடிகள் தெரிந்திருக்க வேண்டும். அதில் பல யுக்திகள் உண்டு. அதை நுணுக்கமாகக் கவனித்தால் தான் புரியும்.

நான் வசித்த தோட்டத்திலும் அந்தக் காலக்கட்டத்தில் பல மல்யுத்த "வீரர்கள்" இருந்தனர்! இந்த வீர விளையாட்டு இந்திய மல்யுத்த வீரர்களின் போட்டிகள் நடபெறும்வரை நீடித்தன. அந்த நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்ததும் தோட்டங்களிலும் மல்யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது!

மல்யுத்தம் பற்றியான இன்றைய நிலை என்ன என்பது எனக்குத் தெரியவில்லை.  ஆனால் ஒலிம்பிக் போட்டியில் மலயுத்தமும் ஒரு போட்டியாக  இருப்பதால்  அது சிறப்பாகவே இருக்கும் என நம்புகிறேன்!