Friday 6 August 2021

நான் தவறு செய்து விட்டேன்!

 சமீபத்தில் டாட்டாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின், பிரதமர் முகைதீன் அரசாங்க எதிர்ப்புக் கூட்டத்தில் தான் கலந்து கொண்டது மிகப்பெரிய தவறு என்பதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் கூறியிருக்கிறார்.

"கோவிட்-19 பெரிய அளவில் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் இது போன்ற கூட்டங்கள் எந்த சமூக இடைவெளியையும்  கடைப்பிடிக்காமல் நடப்பது மிகவும் ஆபத்தாக முடியும்.  இது போன்ற கூட்டங்கள் நடைபெறக் கூடாது. தொற்று மேலும் பரவக் கூடாது என்பதில் நம் அனைவருக்கும் பொறுப்பு உண்டு." என்கிறார் டாக்டர் மகாதிர்.

சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது என்பது மிகவும் அத்தியாவசியம். அதுவும் புதிய வரவான டெல்டா வைரஸ் இன்னும் ஆபத்தானது. காற்றில் கூட தொற்றும் தன்மை கொண்டது. ஒரு வேளை நாம் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டாலும் இனி மேல் ஆபத்து இல்லை என்று நினைப்பதும் தவறு. தொடர்ந்து நாம் முகக்கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்றித் தான் ஆக வேண்டும். 

டாக்டர் மகாதிர், கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர்,  அவர் தன்னைப் பரிசோதித்துக் கொண்டு, தனக்கு ஆபத்தில்லை என்பதையும் உறுதி செய்து கொண்டார். நம்மால் எத்தனை பேருக்கு அது முடியும்? நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் தவறாமல் கட்டளைகளைக் கடைப்பிடிப்பது தான். பணி செய்கின்ற இடங்களிலும் நாம் அதனைப் பின்பற்றத்தான் வேண்டும். கொஞ்சம் அசௌகரியம் தான். வேறு வழியில்லை! சில சமயங்களில் சில அசௌகரியங்களைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இப்போது நாட்டில் நாளொன்றுக்கு 20,000 பேருக்கு மேல் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை. இந்த நிலையில் மருத்துவமனைகளுக்குப் போனால் என்ன ஆகும்? முடிந்தவரை சீக்கிரம் "முடி"க்கத்தான் பார்ப்பார்கள்! நமது குடும்ப உறுப்பினர்களை நினைத்தாவது நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை என்கிற பேச்சு அடிக்கடி எழுகிறது. அதனால் தடுப்பூசி என்பது நமது முதல் கடமை. 

தடுப்பூசி போட்ட பின்னரும் கோவிட்-19 வந்தவர்கள் உண்டு. ஆனால் மரணம் என்கிற அளவுக்குப் போகாது. தடுப்பூசி போட்ட பின்னரும் மூன்று முறை கோவிட்-19 வந்தவர்கள் உண்டு. ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை. அதனால் தடுப்பூசி நமது முதல் கடமை.

இப்போது நாளொன்றுக்கு ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் போடப்படுகின்றனவாம். அதனை எட்டு இலட்சமாக அதிகரிக்க வேண்டும் என்கிறார் டாக்டர் மகாதிர்.  இதுவும் நடக்கும்.

டாக்டர் மகாதிர் "நான் தவறு செய்து விட்டேன்!" என்பதை ஒப்புக் கொண்டார். நீங்களும் நானும் அந்தத் தவற்றை செய்ய வேண்டாம்! அதுவே நாம் நாட்டுக்குச் செய்யும் சேவை!

No comments:

Post a Comment