Thursday 5 August 2021

சில மல்யுத்த நினவுகள்!

 அட! இந்த "சார்பட்டா பரம்பரை" திரைப்படம்  வந்த பிறகு பல பழைய சம்பவங்கள் நினவுக்கு வந்துவிட்டன!

ஒன்று மட்டும் நிச்சயம். வட சென்னையில் இனி குத்துச்சண்டை முன்பைவிட இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். வட சென்னை மட்டும் அல்ல தமிழர்கள் வாழும்  அனைத்து நாடுகளிலும் இந்தப் படம் இளைஞரிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தான் செய்யும்! அதனால் என்ன? அதனை ஒரு சிறந்த விளையாட்டாக எடுத்துக் கொள்வதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை.

அதுவும் நமது மலேசிய நாட்டில் குத்துச்சண்டை, தற்காப்புக்கலைகள்  அனைத்திலும் நமது  இளைஞர்களின் பங்களிப்பு பெருமைப்படத் தக்கதாகத் தான் இருக்கிறது.  இந்தத் திரைப்படத்திற்குப் பின்னர் இந்த ஆர்வம், குறிப்பாக குத்துச்சண்டையில்,  அதிகரிக்கும் என நம்பலாம். ஆனால் வன்முறை மட்டும் வேண்டாம் என ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அது முக்கியம்.

என் வயதை ஒத்த சிலருக்கு அந்தக் கால நினைவுகள் வரத்தான் செய்யும். 1960-களில் என்று எடுத்துக் கொள்ளுங்களேன். அப்போது மல்யுத்தம் என்பது மிகவும் பிரசித்தம்.

குறிப்பாக இந்தியா, பஞ்சாப் மாநிலத்திலிருந்து வந்த மல்யுத்த வீரர்களின் மல்யுத்த நிகழ்ச்சிகள் நிறையவே நடந்துள்ளன. வேறு பலரும் வந்திருக்கலாம். ஆனால் என்னால்  ஞாபகத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. மன்னிக்கவும். வந்தவர்கள் எல்லாம் "சிங்" என்பதால் பஞ்சாப் மாநிலம் என்று குறிப்பிடுகிறேன்.

அப்போது பல மல்யுத்த வீரர்களின் போட்டிகள் நடந்துள்ளன. அவர்களின் பெயர்கள் மறந்து போய் விட்டன! அப்போது மிகவும் பிரபலமான பெயர் என்றால் அது தாரா சிங் மட்டும் தான். அத்தோடு டைகர் ஜகித் சிங், கிங் கோங் போன்ற பெயர்கள் பிரபலம்.  அதில் ஒரு சிங் மாமிசமலை என்பார்களே அது போன்ற உருவம். அவரால் காரில் பயணம் செய்ய முடியாது! சிறிய லோரியைப் பயன்படுத்தவார்! என்பதாகச் சொல்லப்பட்டது!

ஆனால் நான் இங்கு சொல்ல வருவதெல்லாம் அந்த விளையாட்டு  தோட்டப்புறங்களிலே உள்ள இளைஞர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின என்பது தான். எங்குப் பார்த்தாலும் இளைஞர்களிடையே மல்யுத்தப் போட்டிகள் நடந்து கொண்டிருந்தன. பொது இடங்களில் அல்ல என்றாலும் ஆற்றோரங்களில் அல்லது மறைவான இடங்களில் தினசரி நடக்கும் நிகழ்ச்சியாக இருந்தன! மல்யுத்தம் என்றால் அதன் "பிடி" வகைகள் தான் முக்கியம். கிடுக்குப்பிடி என்பார்களே அது போல.வெற்றி பெற பிடிகள் தெரிந்திருக்க வேண்டும். அதில் பல யுக்திகள் உண்டு. அதை நுணுக்கமாகக் கவனித்தால் தான் புரியும்.

நான் வசித்த தோட்டத்திலும் அந்தக் காலக்கட்டத்தில் பல மல்யுத்த "வீரர்கள்" இருந்தனர்! இந்த வீர விளையாட்டு இந்திய மல்யுத்த வீரர்களின் போட்டிகள் நடபெறும்வரை நீடித்தன. அந்த நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்ததும் தோட்டங்களிலும் மல்யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது!

மல்யுத்தம் பற்றியான இன்றைய நிலை என்ன என்பது எனக்குத் தெரியவில்லை.  ஆனால் ஒலிம்பிக் போட்டியில் மலயுத்தமும் ஒரு போட்டியாக  இருப்பதால்  அது சிறப்பாகவே இருக்கும் என நம்புகிறேன்!

No comments:

Post a Comment