Thursday, 2 June 2022

உடனே! உடனே! உடனே!

 

அடுத்த 15-வது பொதுத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கின்ற வேளையில்  இப்போதே தேர்தலை நடத்த வேண்டும் என்று அம்னோவின் ஒரு தரப்பு பிரதமருக்கு நெருக்குதலை ஏற்படுத்துவது நமக்குச்  சரியென தோன்றவில்லை!

அதிலும்  குறிப்பாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இப்போதே, உடனடியாக தேர்தல் நடத்தினால் தான் அம்னோ வெற்றி பெற முடியும் எனக்  கணக்குப் போடுகிறார்! ஏன் இவ்வளவு அவசரத்தை அவர் காட்டுகிறார் என்பது மலேசியர்கள் அனைவருமே அறிவர். 

ஆனால்  தேர்தல் இப்போது நடைபெறுவதற்கு எந்த காரணமும் இல்லையே!  இன்னும் ஓராண்டு கால இடைவெளி இருக்கிறது  என்பதை ஏன்  அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை? நினைத்த நேரத்தில் தேர்தல் வைக்கலாம் என்பதாக அரசியல் சட்டம் சொல்லுகிறதா? காரணம் தேவை அல்லவா?

இவருக்காக சிறைக்கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மை தான். அதற்கு யார் காரணம்? அவர் தானே காரணம்! தன் சார்பு அரசாங்கம் அமைந்தால் வழக்கையே தவிர்த்து விடலாம்  என்பது அவர் போடும் கணக்கு! ஆனால் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே!

மேலும் இவர் ஒருவருக்காக - இவரின் ஒருவரின் வழக்குக்காக - பொதுத்தேர்தலை நடத்தச் சொல்லுவது என்ன நியாயம்? கோடி கோடியாக மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தவர் இவர். அவர் ஏற்படுத்திய நஷ்டத்திலிருந்து இன்னும் நாட்டை மீட்க முடியவில்லை. இப்போது தேர்தலை நடத்தி இன்னும் பல கோடிகளைச் செலவு செய்ய வேண்டுமா  என்கிற கேள்வியும் எழுகிறது.

இப்போது நாடு இருக்கும் நிலையில் தேர்தல் முக்கியம் அல்ல. உலகளவில் நாடுகள்  உணவு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன. நமது நாடும் விதிவிலக்கல்ல.  உணவு பொருள்களின் விலையும் அறுபது விழுக்காடு அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது. உணவு பொருள்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்ற நாடுகளில் நமது நாடும் ஒன்று. இதற்கெல்லாம் என்ன தீர்வு என்பது இன்னும் பொதுமக்களுக்குத்  தெளிவாக்கப்படவில்லை. அதற்கான ஆற்றல் நடப்பு அரசாங்கத்திற்கு உண்டா என்பதிலும் தெளிவில்லை!

இப்போது தேர்தலை நடத்தி, பல கோடிகளைச் செலவு செய்து, அப்படி என்ன சாதித்துவிட முடியும்? அடுத்த ஆட்சியை நீங்கள் அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறீர்கள். இப்போதுள்ள நிலவரங்களை உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் எப்படி சரி செய்வீர்கள் என்பதை பொதுமக்களுக்கு விளக்குங்கள்.

வெறுமனே எந்தவொரு திட்டமும் இல்லாமல் நீங்கள் ஆட்சி அமைக்க வேண்டும்.  அதற்காக 'உடனே! உடனே! உடனே!' தேர்தல் என்று நடப்பு அரசாங்கத்திற்கு  நெருக்குதல் கொடுக்க வேண்டும்!  என்ன இது காட்டுமிராண்டித்தனம்!

ஒன்று புரிகிறது! மக்களை நீங்கள் மக்களாகவே மதிக்கவில்லை என்பது புரிகிறது!

Wednesday, 1 June 2022

வெற்றியின் ஆரம்பம் தோல்வி!

 

தோல்வி தான் வெற்றியின் முதல்படி என்பதை நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம்; படித்திருக்கிறோம்.

ஆனால் அதைவிட  தோல்வி தான் நீங்கள் செய்த முதல் முயற்சியின் கைமேல் பலன்! அந்த தோல்வி உங்களை முடக்கிப் போட்டு விட்டால்  நீங்கள் தொடர் தோல்வியாளர் என்பதில் போய் முடியும். அடுத்த முயற்சியில் ஈடுபட்டால் உங்கள் பயணம் வெற்றியை நோக்கிய பயணம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

முயற்சிகள் தோல்வி அடையலாம். ஆனால் முயற்சிகள் முடங்கி விடக்கூடாது. தொடர் முயற்சிகள் தான் வெற்றியை நோக்கி நகரும் தன்மையுடையது.

முதல் முயற்சியில் வெற்றி பெறுபவர்கள் அரிதிலும் அரிது. பெரும்பாலான வெற்றியாளர்கள் பல முயற்சிகளுக்குப் பின்னர்  தான் வெற்றிக்கனியைத் தொட்டவர்கள். இன்று கோடி கோடியாக குவித்து வைத்திருப்பவர்கள் அனைவருமே தொடர் முயற்சியின் காரணமாக குவித்து வைத்தவர்கள் தாம்.

முதன் முயற்சியிலே வெற்றி என்பதைச் சுட்டிக்காட்ட யாரும் இல்லை. பல தோல்விகளுக்குப் பின்னர் தான் வெற்றி என்பதைச் சுட்டிக்காட்ட ஏகப்பட்ட பேர் இருக்கின்றனர்.

நமது நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஆதி குமுணன் பற்றி அறியாதவர்கள் என்றால் மிகச் சிலரே இருப்பர்.  ஆதி அவர்கள் பத்திரிக்கைத் துறையில் ஒரு நிருபராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். பின்னர் நன்பர்களோடு சேர்ந்து வானம்பாடி என்னும் வார இதழை ஆரம்பித்தார்.  கடைசியாக நாளிதழ் ஒன்றை சொந்தமாக வெளியிட்டு பெரும் வெற்றி பெற்றார். அவர் இன்று இருந்திருந்தால் மலேசிய தமிழ் நாளிதழ்கள் அனைத்துக்கும் சொந்தக்காரராக  மாறியிருப்பார்! மலேசிய எழுத்துலகின்  ஜாம்பவான் அவர்.

அவர் வெறும் எழுத்தாளர் மட்டும் அல்ல  ஒரு பத்திரிக்கைக்கும் சொந்தக்காரராக - பத்திரிக்கை அதிபராகவும் இருந்தவர். பத்திரிக்கை நடத்தும் கலையை மிகச் சரியாகப் புரிந்து வைத்திருந்தவர். 

மலேசிய பத்திரிக்கை உலகில் - எழுத்துலகில் -  எத்தனையோ பிரபலங்கள் இருந்திருக்கிறார்கள்.  ஆனால் அவரால் மட்டுமே சொந்த நாளிதழை நடத்த முடிந்தது. அங்கு, அந்த உச்சத்திற்குச் செல்ல எத்தனையோ இன்னல்கள், இடர்கள், தடைகள், அதிகார வர்க்கத்தின் தலையீடு என்று அனைத்தையும் கடந்து வந்துதான் அவரால் அந்த உச்சத்தை தொட முடிந்தது.

தோல்விகளோடு அவர் நின்றுவிடவில்லை. மீண்டும் அடுத்து.......மீண்டும் அடுத்து..... என்று தொடர் போராட்டம், தொடர் முயற்சி  தான் அவர் வெற்றிக்குக் காரணம்.

தோல்வி என்பதாக ஒன்றுமில்லை! அது தான் வெற்றியின் ஆரம்பம்!

Tuesday, 31 May 2022

இழி பிறவிகள்!

 

                                     Zuraida Kamaruddin - Housing and Local Govt.Ministe

பொதுவாக அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் சரி நாட்டுக்கு  நல்லதைச் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு  தான் வருகிறார்கள். ஏதோ ஒரு சிலர் மட்டும் பணம் மட்டுமே நோக்கமாகக் கொண்டு வருகின்றனர். இப்போது, இந்த காலக் கட்டத்தில், பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வருபவர்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றனர் என்பது வருத்ததிற்கு உரிய செய்தி என்பதில் ஐயமில்லை.

ஆனால் சுரைடா கமாரூடின் மிகவும் வித்தியாசமான பெண்மணி. அமைதியாக நடந்து கொண்டிருந்த அரசாங்கத்தை  தடாலடியாக கவிழ்த்துவிட்டு வேறு கட்சிக்குத் தாவியவர். அதே பாணியை இப்போதும் பின்பற்றுகிறார்!  மீண்டும் கீழறுப்பு வேலையை ஆரம்பித்திருக்கிறார்! 

இந்த நடப்பு அரசாங்கத்திற்கு இருக்கும் காலம் என்னவோ இன்னும் ஓராண்டுகள் தான்!  இந்த அரசாங்கமும் எதிர்கட்சிகளிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி இன்னும் கவிழாமல் பேர் போட்டுக் கொண்டிருக்கிறது! அதுவே பெரிய சாதனை!

இன்னும் ஓராண்டுகள் பொறுக்க முடியாமல் இந்த அரசாங்கத்தையும் கவிழ்க்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்  அம்மணி! 

வேறு கட்சி தாவுவதற்கு அவர் சொல்லுகின்ற  காரணங்கள் சரியாக இருக்கலாம்.  கட்சி தாவுபவர்கள் எல்லாருமே சரியான காரணங்களைத் தான் வைத்திருக்கின்றனர்!  கட்சி சரியான கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்!

ஆனால் மக்கள், கட்சி தாவுபவர்களைப் பற்றி, என்ன கருத்து வைத்திருக்கிறார்களோ அதைப் பற்றி மட்டும் அவர்கள் வாய் திறப்பதில்லை.  அரசியல்வாதிகள் கட்சி தாவும்போது அத்தோடு அவர்களோடு சேர்ந்து பல கோடிகளும் தாவுகின்றன என்பதை மட்டும் யாரும் பேசுவதில்லை!

ஆமாம்,   எந்த இலாபமும் இல்லாமல் ஏன் ஒருவர், அரசாங்கத்தையே கவிழ்த்துவிட்டு, வேறு ஒரு கட்சிக்கு மாற வேண்டும்? இது மக்களிடம் உள்ள கேள்வி. நியாயம் தானே? சும்மா விளையாட்டாக யாரும் இதனைச் செய்வார்களா?

சுரைடா போன்றவர்கள் இனி அரசியலில் சம்பாதிக்க வழியில்லை என்கிற கடைசி கட்டத்தில் இருக்கிறார்கள். அவர் தொகுதி மக்கள் எந்த அளவுக்கு அவர் மேல் மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியவில்லை. இன்றைய நிலையில், கிடைத்தது போதும்,  என்கிற மன   நிலையில் தான் அவர் இருக்கிறார்! இரண்டு கட்சிகள் மாறி இருக்கிறார். இருபது கோடியாவது  பார்த்திருப்பார் என்பது தான் நமது கணக்கு!

வாழ்க வளமுடன்!