Thursday 2 June 2022

உடனே! உடனே! உடனே!

 

அடுத்த 15-வது பொதுத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கின்ற வேளையில்  இப்போதே தேர்தலை நடத்த வேண்டும் என்று அம்னோவின் ஒரு தரப்பு பிரதமருக்கு நெருக்குதலை ஏற்படுத்துவது நமக்குச்  சரியென தோன்றவில்லை!

அதிலும்  குறிப்பாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இப்போதே, உடனடியாக தேர்தல் நடத்தினால் தான் அம்னோ வெற்றி பெற முடியும் எனக்  கணக்குப் போடுகிறார்! ஏன் இவ்வளவு அவசரத்தை அவர் காட்டுகிறார் என்பது மலேசியர்கள் அனைவருமே அறிவர். 

ஆனால்  தேர்தல் இப்போது நடைபெறுவதற்கு எந்த காரணமும் இல்லையே!  இன்னும் ஓராண்டு கால இடைவெளி இருக்கிறது  என்பதை ஏன்  அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை? நினைத்த நேரத்தில் தேர்தல் வைக்கலாம் என்பதாக அரசியல் சட்டம் சொல்லுகிறதா? காரணம் தேவை அல்லவா?

இவருக்காக சிறைக்கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மை தான். அதற்கு யார் காரணம்? அவர் தானே காரணம்! தன் சார்பு அரசாங்கம் அமைந்தால் வழக்கையே தவிர்த்து விடலாம்  என்பது அவர் போடும் கணக்கு! ஆனால் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே!

மேலும் இவர் ஒருவருக்காக - இவரின் ஒருவரின் வழக்குக்காக - பொதுத்தேர்தலை நடத்தச் சொல்லுவது என்ன நியாயம்? கோடி கோடியாக மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தவர் இவர். அவர் ஏற்படுத்திய நஷ்டத்திலிருந்து இன்னும் நாட்டை மீட்க முடியவில்லை. இப்போது தேர்தலை நடத்தி இன்னும் பல கோடிகளைச் செலவு செய்ய வேண்டுமா  என்கிற கேள்வியும் எழுகிறது.

இப்போது நாடு இருக்கும் நிலையில் தேர்தல் முக்கியம் அல்ல. உலகளவில் நாடுகள்  உணவு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன. நமது நாடும் விதிவிலக்கல்ல.  உணவு பொருள்களின் விலையும் அறுபது விழுக்காடு அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது. உணவு பொருள்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்ற நாடுகளில் நமது நாடும் ஒன்று. இதற்கெல்லாம் என்ன தீர்வு என்பது இன்னும் பொதுமக்களுக்குத்  தெளிவாக்கப்படவில்லை. அதற்கான ஆற்றல் நடப்பு அரசாங்கத்திற்கு உண்டா என்பதிலும் தெளிவில்லை!

இப்போது தேர்தலை நடத்தி, பல கோடிகளைச் செலவு செய்து, அப்படி என்ன சாதித்துவிட முடியும்? அடுத்த ஆட்சியை நீங்கள் அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறீர்கள். இப்போதுள்ள நிலவரங்களை உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் எப்படி சரி செய்வீர்கள் என்பதை பொதுமக்களுக்கு விளக்குங்கள்.

வெறுமனே எந்தவொரு திட்டமும் இல்லாமல் நீங்கள் ஆட்சி அமைக்க வேண்டும்.  அதற்காக 'உடனே! உடனே! உடனே!' தேர்தல் என்று நடப்பு அரசாங்கத்திற்கு  நெருக்குதல் கொடுக்க வேண்டும்!  என்ன இது காட்டுமிராண்டித்தனம்!

ஒன்று புரிகிறது! மக்களை நீங்கள் மக்களாகவே மதிக்கவில்லை என்பது புரிகிறது!

No comments:

Post a Comment