Saturday, 3 December 2022

புரிந்து கொள்வது நல்லது!

 

பிரதமர் அன்வார் இப்ராகிம் அமைச்சரவையை அமைத்த பின்னர்  ஏகப்பட்ட  குற்றச்சாட்டுகள்,  குறிப்பாக இந்திய சமுதாயத்திடமிருந்து.

இந்த அமைச்சரவை இந்தியர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்பது உண்மை தான். 

சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் இதற்கு முன்னர் இரண்டு, மூன்று, நான்கு அமைச்சர்கள் இருந்த இடத்தில் இப்போது ஒரே ஒரு அமைச்சரா? என்று அதிருப்தியும், ஆவேசமும் ஒரு சிலரிடமிருந்து கிண்டலும், கேலியும்  தொடரந்தாற் போல வந்து கொண்டிருக்கின்றன. அது அப்படித்தான் இருக்கும். தவறில்லை.

இந்த நேரத்தில் ஒரு கேள்வி.  "கடந்த அறுபது வருடங்களாக ம.இ.கா. என்ன செய்தது?"  என்று யார் கேள்வி கேட்டது? நாம் தானே கேள்வி கேட்டோம்! ஆக, அதிக அமைச்சர்களை நாம் கொண்டிருந்தாலும் பலன் என்னவோ சுழியம் தான் என்பதை நாம் ஒப்புக்கொண்டதை மறக்க வேண்டாம்.

இப்போது அதிக அமைச்சர்களா அல்லது ஒரே ஓர் அமைச்சரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. தேவையற்ற கேள்வி. ஒரு வேளை ஒரு அமைச்சர் மூலம் இந்தியர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்றால் அதனை யாரும் எந்தக் கேள்வியும் கேட்கப்போவதில்லை. நம்முடைய தேவையெல்லாம்  நமது பிரச்சனைகள் தீர என்ன வழி என்பது தான்.  பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால் கேள்விகள் இல்லை.

ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 15வது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி முழுமையான வெற்றி பெற்றிருந்தால் நீங்கள் கேட்கும் கேள்வி சரி என்று சொல்லலாம். அதனை நாம் எதிர்க்கலாம். என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் இந்த ஒற்றுமை கூட்டணியில்  அன்வார்,  தான் விரும்பியபடி செயல்பட முடியவில்லை என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஒத்துழைப்பு தேவையென்றால்  அன்வார் விரும்பியபடி செயல்பட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது இந்த அரசாங்கம் செயல்பட தேசிய முன்னணியின் ஒத்துழைப்பும் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த ஜி.பி.எஸ். கட்சியின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்பதை நடப்பு அரசியலை புரிந்து கொண்டவர்களுக்குத்  தெரியும். அந்தக் கட்சிகளின் விருப்புரிமைக்குத் தான் முதலிடம். ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு எத்தனை அமைச்சர் பதவி வேண்டும், யாருக்குப் பதவிகள் தரப்பட  வேண்டும் என்று அவர்கள்  கட்டளையிடும் போது  அன்வார் பின்னுக்குத் தள்ளப்படுகிறார் என்பது தான் உண்மை. அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது போக மிச்சம் மீதி தான் மற்ற கட்சிகளுக்கு. இது தான் ஒற்றுமை அரசாங்கம்!

இன்னொரு  உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும்.  அம்னோ தலைவர், அமிட் ஸாஹிட் ஹமிடி,  47 நீதிமன்ற வழக்குகளைச் சுமந்து கொண்டிருப்பவர்! முன்னாள் நிதியமைச்சர் துங்கு ஜாஃப்ருல்  அஸிஸ் போன்றவர்கள் அன்வாருக்கு வேண்டப்படாதவர்கள். ஆனால் அம்னோவுக்கு வேண்டப்பட்டவர்கள்.  தனக்கு வேண்டாதவர்களோடு சேர்ந்து தான் அன்வார் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பயணம்  செய்ய வேண்டும்!

எது எப்படியிருப்பினும் பிரதமர் அன்வார் இந்தியர்களை கைவிடமாட்டார் என்பதை நம்பலாம். புதிய வழிகள் பிறக்காமலா போகும்? பார்ப்போம்!

Friday, 2 December 2022

ஏன் ஆட்சி மாற்றம்?


 ஏன் நமது நாட்டிற்கு ஆட்சி மாற்றம் தேவை? ஒரே கட்சி நீண்ட நாள் ஆட்சி செய்தால் அதனால் வருகின்ற தீமைகள் ஏராளம்! ஏராளம்! அதனை நாம் கண்கூடாக பார்த்துவிட்டோம். அது போதும். வேறு சாட்சியங்கள் தேவை இல்லை.

ஒரு காலத்தில் பெருமைமிகு  நாடாக பார்க்கப்பட்ட  மலேசிய இன்று எந்த ஒரு மரியாதையும் இல்லாத அளவுக்குக் கீழ் நோக்கிக் கொண்டு போய்விட்டார்கள் ஆண்ட அரசியல்வாதிகள்!  இந்தோனேசியா, தாய்லாந்து,  வியட்னாம் போன்ற நாடுகளைவிட நமது நிலை தாழ்ந்துவிட்டது! அவர்கள் கூட நம்மை மதிக்கவில்லை!

"எங்களுக்கு மக்களின் ஆதரவு அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது" என்கிற எண்ணம்  அரசியல்வாதிகளுக்கு வேறுவிதமாக அவர்களின் போக்கை மாற்றி அமைத்துவிட்டது. திருடுவது, கொள்ளையடிப்பது, இலஞ்சம், ஊழல், கொலை  அனைத்தும்  கணக்கிலடங்கா அளவுக்கு மிஞ்சிப்போனதால் நாட்டை அதளபாதாளத்துக்குக் கொண்டு சென்றுவிட்டது.

நமது நிலையோ இன்னும் கீழ்நோக்கிப் போனதே தவிர மேல்நோக்கிப் போவதற்கான அறிகுறியே தென்படவில்லை. நம்மைப் பிரதிநிதித்த அரசியல் கட்சியான மலேசிய இந்தியர் காங்கிரஸ் நம்மை உயர்த்தவில்லை என்றாலும் பரவாயில்லை. நம்மை இன்னும் பாதாளத்திற்குத் தான் இழுத்துச் சென்றார்கள்!

இந்தியர்கள் எல்லா வகையிலும்  தங்களது உரிமைகளை இழந்தார்கள். குறிப்பாகச்  சொன்னால் வேலை வாய்ப்புகள் அத்தோடு நம் பொருளாதாரம் சிறிதளவு கூட மேன்மையடையவில்லை.

கொரோனா தொற்றுக்குப் பின்னர் இந்தியர்களின் நிலை இன்னும் கீழே கொண்டு சென்றுவிட்டது. பசி, பட்டினி மட்டும் அல்ல. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை, பெற்றவர்களுக்கு  வேலை இல்லாத நிலை - இப்படிப் பல துன்பங்களை அனுபவித்தவர்கள் இந்தியர்கள் தான்.

சீனர்களின் பொருளாதார நிலை வலுவாக இருந்ததால் அவர்கள் அதிகமான பாதிப்பைச் சந்திக்கவில்லை.

இந்தியர்களோ வேலை செய்து பிழைக்கும் ஒரு சமுதாயம். மிகவும் அதிக பாதிப்பை நமது மக்கள் சந்தித்தார்கள். மலாய்க்காரர்களுக்கு அரசாங்கம் அவர்களைக் கவனித்துக் கொண்டதால் அதிக பாதிப்படையவில்லை. மேலும் அவர்கள் அதிகமானோர் அரசாங்க ஊழியர்கள். அதிக பாதிப்பை அவர்கள் எதிர்நோக்கவில்லை.

இந்தியர்களைப் பொறுத்தவரை அரசாங்கம் நம்மைக் கவனிக்கவில்லை என்கிற ஆதங்கம்.  ம.இ.கா. வைப் பொறுத்தவரை "நாங்கள் என்ன செய்வது?" என்கிற கேள்வியோடு தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டார்கள். பொது மக்கள்,  பல தனியார் நிறுவனங்கள் உதவிகளினால் தான் நமது மக்கள்  ஏதோ தங்களின் பசியைப் போக்கிக் கொண்டார்கள். மிகவும் அவலமான நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் இந்தியர்கள் தான்.

இந்தியர்கள் ம.இ.கா.வுக்கு,  நடந்த முடிந்த தேர்தலில், ஆதரவு அளிக்கவில்லை என்பதை ஏதோ குற்றவாளிகளைப் போல பார்ப்பதில் பயனில்லை. அரசாங்க ஆதரவு இல்லை, ம.இ.கா.வின் ஆதரவு இல்லை என்கிற நிலையில் இனி ஆளுங்கட்சிகளை நம்பி பயனில்லை என்பது தான் இந்தியர்களின் நிலை.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நல்லது நடக்கும் என்று நம்புகிறோம்.

Thursday, 1 December 2022

எப்படி நடந்தது?

 

வங்காளதேசத்து நபர் ஒருவர் மலேசிய தேசியக்கொடியைத் தலைகீழாக தொங்கவிட்டு பறக்கவிட்டிருக்கிறார்.

இப்படி ஒரு நிகழ்ச்சி வெளி நாட்டில் நடக்கவில்லை! நமது நாட்டில் தான் நடந்திருக்கிறது! அதுவே ஆச்சரியம்!

இது போன்ற, வெளி நாட்டிலிருந்து மலேசிய நாட்டிற்குப் பிழைக்க வந்த ஒரு வங்காள தேசத்தைச் சார்ந்த ஒருவனால் எப்படி இந்த அளவுக்குத் தைரியமாகச் செயல்பட முடிந்தது என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. 

ஒரு நாட்டின் தேசியக்கொடி என்றால் அதற்கான கௌரவம், மரியாதை  - இது பற்றியெல்லாம் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. எல்லா நாட்டிலும், எல்லாப் பள்ளிகளிலும் சிறு வயதிலேயே  தேசியக் கொடியை எப்படி மதிக்க வேண்டும், கௌரவப்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதற்குக் காரணம் தேசியக்கொடி என்பது ஒரு நாட்டின் கௌவரம்.

ஆனால் இந்த வங்காள தேசத்தவனுக்கு ஒன்றும் தெரியாதவன் என்று சொல்ல முடியாது. அவன் தெரிந்தே அதனைச் செய்திருப்பதாகத் தெரிகிறது. அக்கம் பக்கத்தார் அந்தத் தவற்றைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அவன் அதைப்  பொருட்படுத்தவில்லை என்பது தான் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.  பின்னர் காவல்துறையினருக்கு அது பற்றி மக்கள் புகார் செய்திருக்கின்றனர்.

நமக்கு என்ன புரியவில்லை என்றால் அது எப்படி ஒரு வங்காள தேசிக்கு இந்த அளவுக்குத் துணிச்சல் எப்படி வந்தது என்பது தான். உள்ளூர்க்காரர்களே செய்யத் துணியாத ஒரு செயலை எப்படி ஒரு வெளிநாட்டவரால் செய்ய முடிந்தது என்பது தான்.

சரி, இப்படிச் செய்த அந்த வங்காளதேசிக்கு என்ன தண்டனைக் கொடுக்கப்பட்டது  என்பது நமக்குத் தெரியவில்லை. ஒரு வேளை வெறும் மன்னிப்போடு  விடப்பட்டிருக்கலாம்! தேசியக்கொடியை அவமதித்தவர்களுக்கு என்ன தண்டனைக் கொடுக்கப்படுகிறது அல்லது அபராதம் மட்டுமா போன்ற விடயங்கள் நமக்குத் தெரியவில்லை.

அபராதம் மட்டுமே என்றால் தேசியக்கொடியை யார் வேண்டுமானாலும் அவமதிக்கலாம். அதுவும் வெளிநாட்டுக்காரர்கள்  சும்மா காசை வீசிவிட்டுப் போய்விடுவார்கள்! வங்காளதேசிகளைச் சொல்லவே வேண்டாம். பணம் அவர்களுக்கு ஒரு பிரச்சனையே அல்ல. அவர்கள் நமது நாட்டைப் பற்றி சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரியும்.

எப்படி இருந்தாலும் இப்படி ஒரு நிகழ்வு நடந்தே இருக்கக் கூடாது. இது போன்ற குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்.  ஆறு மாதமாவது சிறையில் போட வேண்டும். இது போன்ற வெளிநாட்டவர்களை அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்புவதே இவர்களுக்கான சரியான தண்டனை.

எப்படி நடந்தது? என்றால் நமது நாட்டின் நிலைமை மிகவும் கீழான நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. சரியான அரசாங்கமில்லையென்றால் இப்படித்தான் நடக்கும். இனிமேலும் இது போன்ற செயல்களுக்குக் கடுமையான தண்டனை தான் தீர்வு. வேறு வழி?