Friday 2 December 2022

ஏன் ஆட்சி மாற்றம்?


 ஏன் நமது நாட்டிற்கு ஆட்சி மாற்றம் தேவை? ஒரே கட்சி நீண்ட நாள் ஆட்சி செய்தால் அதனால் வருகின்ற தீமைகள் ஏராளம்! ஏராளம்! அதனை நாம் கண்கூடாக பார்த்துவிட்டோம். அது போதும். வேறு சாட்சியங்கள் தேவை இல்லை.

ஒரு காலத்தில் பெருமைமிகு  நாடாக பார்க்கப்பட்ட  மலேசிய இன்று எந்த ஒரு மரியாதையும் இல்லாத அளவுக்குக் கீழ் நோக்கிக் கொண்டு போய்விட்டார்கள் ஆண்ட அரசியல்வாதிகள்!  இந்தோனேசியா, தாய்லாந்து,  வியட்னாம் போன்ற நாடுகளைவிட நமது நிலை தாழ்ந்துவிட்டது! அவர்கள் கூட நம்மை மதிக்கவில்லை!

"எங்களுக்கு மக்களின் ஆதரவு அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது" என்கிற எண்ணம்  அரசியல்வாதிகளுக்கு வேறுவிதமாக அவர்களின் போக்கை மாற்றி அமைத்துவிட்டது. திருடுவது, கொள்ளையடிப்பது, இலஞ்சம், ஊழல், கொலை  அனைத்தும்  கணக்கிலடங்கா அளவுக்கு மிஞ்சிப்போனதால் நாட்டை அதளபாதாளத்துக்குக் கொண்டு சென்றுவிட்டது.

நமது நிலையோ இன்னும் கீழ்நோக்கிப் போனதே தவிர மேல்நோக்கிப் போவதற்கான அறிகுறியே தென்படவில்லை. நம்மைப் பிரதிநிதித்த அரசியல் கட்சியான மலேசிய இந்தியர் காங்கிரஸ் நம்மை உயர்த்தவில்லை என்றாலும் பரவாயில்லை. நம்மை இன்னும் பாதாளத்திற்குத் தான் இழுத்துச் சென்றார்கள்!

இந்தியர்கள் எல்லா வகையிலும்  தங்களது உரிமைகளை இழந்தார்கள். குறிப்பாகச்  சொன்னால் வேலை வாய்ப்புகள் அத்தோடு நம் பொருளாதாரம் சிறிதளவு கூட மேன்மையடையவில்லை.

கொரோனா தொற்றுக்குப் பின்னர் இந்தியர்களின் நிலை இன்னும் கீழே கொண்டு சென்றுவிட்டது. பசி, பட்டினி மட்டும் அல்ல. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை, பெற்றவர்களுக்கு  வேலை இல்லாத நிலை - இப்படிப் பல துன்பங்களை அனுபவித்தவர்கள் இந்தியர்கள் தான்.

சீனர்களின் பொருளாதார நிலை வலுவாக இருந்ததால் அவர்கள் அதிகமான பாதிப்பைச் சந்திக்கவில்லை.

இந்தியர்களோ வேலை செய்து பிழைக்கும் ஒரு சமுதாயம். மிகவும் அதிக பாதிப்பை நமது மக்கள் சந்தித்தார்கள். மலாய்க்காரர்களுக்கு அரசாங்கம் அவர்களைக் கவனித்துக் கொண்டதால் அதிக பாதிப்படையவில்லை. மேலும் அவர்கள் அதிகமானோர் அரசாங்க ஊழியர்கள். அதிக பாதிப்பை அவர்கள் எதிர்நோக்கவில்லை.

இந்தியர்களைப் பொறுத்தவரை அரசாங்கம் நம்மைக் கவனிக்கவில்லை என்கிற ஆதங்கம்.  ம.இ.கா. வைப் பொறுத்தவரை "நாங்கள் என்ன செய்வது?" என்கிற கேள்வியோடு தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டார்கள். பொது மக்கள்,  பல தனியார் நிறுவனங்கள் உதவிகளினால் தான் நமது மக்கள்  ஏதோ தங்களின் பசியைப் போக்கிக் கொண்டார்கள். மிகவும் அவலமான நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் இந்தியர்கள் தான்.

இந்தியர்கள் ம.இ.கா.வுக்கு,  நடந்த முடிந்த தேர்தலில், ஆதரவு அளிக்கவில்லை என்பதை ஏதோ குற்றவாளிகளைப் போல பார்ப்பதில் பயனில்லை. அரசாங்க ஆதரவு இல்லை, ம.இ.கா.வின் ஆதரவு இல்லை என்கிற நிலையில் இனி ஆளுங்கட்சிகளை நம்பி பயனில்லை என்பது தான் இந்தியர்களின் நிலை.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நல்லது நடக்கும் என்று நம்புகிறோம்.

No comments:

Post a Comment