Thursday 1 December 2022

எப்படி நடந்தது?

 

வங்காளதேசத்து நபர் ஒருவர் மலேசிய தேசியக்கொடியைத் தலைகீழாக தொங்கவிட்டு பறக்கவிட்டிருக்கிறார்.

இப்படி ஒரு நிகழ்ச்சி வெளி நாட்டில் நடக்கவில்லை! நமது நாட்டில் தான் நடந்திருக்கிறது! அதுவே ஆச்சரியம்!

இது போன்ற, வெளி நாட்டிலிருந்து மலேசிய நாட்டிற்குப் பிழைக்க வந்த ஒரு வங்காள தேசத்தைச் சார்ந்த ஒருவனால் எப்படி இந்த அளவுக்குத் தைரியமாகச் செயல்பட முடிந்தது என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. 

ஒரு நாட்டின் தேசியக்கொடி என்றால் அதற்கான கௌரவம், மரியாதை  - இது பற்றியெல்லாம் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. எல்லா நாட்டிலும், எல்லாப் பள்ளிகளிலும் சிறு வயதிலேயே  தேசியக் கொடியை எப்படி மதிக்க வேண்டும், கௌரவப்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதற்குக் காரணம் தேசியக்கொடி என்பது ஒரு நாட்டின் கௌவரம்.

ஆனால் இந்த வங்காள தேசத்தவனுக்கு ஒன்றும் தெரியாதவன் என்று சொல்ல முடியாது. அவன் தெரிந்தே அதனைச் செய்திருப்பதாகத் தெரிகிறது. அக்கம் பக்கத்தார் அந்தத் தவற்றைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அவன் அதைப்  பொருட்படுத்தவில்லை என்பது தான் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.  பின்னர் காவல்துறையினருக்கு அது பற்றி மக்கள் புகார் செய்திருக்கின்றனர்.

நமக்கு என்ன புரியவில்லை என்றால் அது எப்படி ஒரு வங்காள தேசிக்கு இந்த அளவுக்குத் துணிச்சல் எப்படி வந்தது என்பது தான். உள்ளூர்க்காரர்களே செய்யத் துணியாத ஒரு செயலை எப்படி ஒரு வெளிநாட்டவரால் செய்ய முடிந்தது என்பது தான்.

சரி, இப்படிச் செய்த அந்த வங்காளதேசிக்கு என்ன தண்டனைக் கொடுக்கப்பட்டது  என்பது நமக்குத் தெரியவில்லை. ஒரு வேளை வெறும் மன்னிப்போடு  விடப்பட்டிருக்கலாம்! தேசியக்கொடியை அவமதித்தவர்களுக்கு என்ன தண்டனைக் கொடுக்கப்படுகிறது அல்லது அபராதம் மட்டுமா போன்ற விடயங்கள் நமக்குத் தெரியவில்லை.

அபராதம் மட்டுமே என்றால் தேசியக்கொடியை யார் வேண்டுமானாலும் அவமதிக்கலாம். அதுவும் வெளிநாட்டுக்காரர்கள்  சும்மா காசை வீசிவிட்டுப் போய்விடுவார்கள்! வங்காளதேசிகளைச் சொல்லவே வேண்டாம். பணம் அவர்களுக்கு ஒரு பிரச்சனையே அல்ல. அவர்கள் நமது நாட்டைப் பற்றி சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரியும்.

எப்படி இருந்தாலும் இப்படி ஒரு நிகழ்வு நடந்தே இருக்கக் கூடாது. இது போன்ற குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்.  ஆறு மாதமாவது சிறையில் போட வேண்டும். இது போன்ற வெளிநாட்டவர்களை அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்புவதே இவர்களுக்கான சரியான தண்டனை.

எப்படி நடந்தது? என்றால் நமது நாட்டின் நிலைமை மிகவும் கீழான நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. சரியான அரசாங்கமில்லையென்றால் இப்படித்தான் நடக்கும். இனிமேலும் இது போன்ற செயல்களுக்குக் கடுமையான தண்டனை தான் தீர்வு. வேறு வழி?

No comments:

Post a Comment