பிரதமர் அன்வார் இப்ராகிம் அமைச்சரவையை அமைத்த பின்னர் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள், குறிப்பாக இந்திய சமுதாயத்திடமிருந்து.
இந்த அமைச்சரவை இந்தியர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்பது உண்மை தான்.
சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் இதற்கு முன்னர் இரண்டு, மூன்று, நான்கு அமைச்சர்கள் இருந்த இடத்தில் இப்போது ஒரே ஒரு அமைச்சரா? என்று அதிருப்தியும், ஆவேசமும் ஒரு சிலரிடமிருந்து கிண்டலும், கேலியும் தொடரந்தாற் போல வந்து கொண்டிருக்கின்றன. அது அப்படித்தான் இருக்கும். தவறில்லை.
இந்த நேரத்தில் ஒரு கேள்வி. "கடந்த அறுபது வருடங்களாக ம.இ.கா. என்ன செய்தது?" என்று யார் கேள்வி கேட்டது? நாம் தானே கேள்வி கேட்டோம்! ஆக, அதிக அமைச்சர்களை நாம் கொண்டிருந்தாலும் பலன் என்னவோ சுழியம் தான் என்பதை நாம் ஒப்புக்கொண்டதை மறக்க வேண்டாம்.
இப்போது அதிக அமைச்சர்களா அல்லது ஒரே ஓர் அமைச்சரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. தேவையற்ற கேள்வி. ஒரு வேளை ஒரு அமைச்சர் மூலம் இந்தியர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்றால் அதனை யாரும் எந்தக் கேள்வியும் கேட்கப்போவதில்லை. நம்முடைய தேவையெல்லாம் நமது பிரச்சனைகள் தீர என்ன வழி என்பது தான். பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால் கேள்விகள் இல்லை.
ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 15வது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி முழுமையான வெற்றி பெற்றிருந்தால் நீங்கள் கேட்கும் கேள்வி சரி என்று சொல்லலாம். அதனை நாம் எதிர்க்கலாம். என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் இந்த ஒற்றுமை கூட்டணியில் அன்வார், தான் விரும்பியபடி செயல்பட முடியவில்லை என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஒத்துழைப்பு தேவையென்றால் அன்வார் விரும்பியபடி செயல்பட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது இந்த அரசாங்கம் செயல்பட தேசிய முன்னணியின் ஒத்துழைப்பும் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த ஜி.பி.எஸ். கட்சியின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்பதை நடப்பு அரசியலை புரிந்து கொண்டவர்களுக்குத் தெரியும். அந்தக் கட்சிகளின் விருப்புரிமைக்குத் தான் முதலிடம். ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு எத்தனை அமைச்சர் பதவி வேண்டும், யாருக்குப் பதவிகள் தரப்பட வேண்டும் என்று அவர்கள் கட்டளையிடும் போது அன்வார் பின்னுக்குத் தள்ளப்படுகிறார் என்பது தான் உண்மை. அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது போக மிச்சம் மீதி தான் மற்ற கட்சிகளுக்கு. இது தான் ஒற்றுமை அரசாங்கம்!
இன்னொரு உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். அம்னோ தலைவர், அமிட் ஸாஹிட் ஹமிடி, 47 நீதிமன்ற வழக்குகளைச் சுமந்து கொண்டிருப்பவர்! முன்னாள் நிதியமைச்சர் துங்கு ஜாஃப்ருல் அஸிஸ் போன்றவர்கள் அன்வாருக்கு வேண்டப்படாதவர்கள். ஆனால் அம்னோவுக்கு வேண்டப்பட்டவர்கள். தனக்கு வேண்டாதவர்களோடு சேர்ந்து தான் அன்வார் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பயணம் செய்ய வேண்டும்!
எது எப்படியிருப்பினும் பிரதமர் அன்வார் இந்தியர்களை கைவிடமாட்டார் என்பதை நம்பலாம். புதிய வழிகள் பிறக்காமலா போகும்? பார்ப்போம்!
No comments:
Post a Comment