Sunday, 1 January 2023

செய்வன திருந்தச் செய்!

 

புத்தாண்டு பிறந்துவிட்டது!

ஒவ்வொரு புத்தாண்டிலும் தீர்மானங்கள் போட்டாகிவிட்டன.  எதுவும் நடைமுறையில் சாத்தியப்படவில்லை! ஓரிரு வாரங்களில் எல்லாம் காணாமல் போய்விட்டன! அதற்கு நமது பலவீனமே காரணம். 

இனி எந்தப் புதிய தீர்மானங்களும்  சாத்தியமில்லை என்று நான் சொல்ல மாட்டேன். செய்கின்ற வேலைகளை ஒழுங்காக, நூறு விழுக்காடு கவனம் செலுத்தி வந்தாலே போதும். அதுவே அனைத்து தீர்மானங்களுக்கும் சமம்.

இந்த ஆண்டு தீர்மானம் என்பது "செய்வன திருந்தச் செய்" என்பதாக இருக்கட்டும். நமது வேலைகளைத் திருந்தச் செய்தலே போதுமானது.

அரைகுறை வேலைகளைச் செய்துவிட்டு நிறைய சம்பளம் வாங்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நம்மிடமும் உண்டு. அதைக் குறைத்துக் கொள்வோம். அது நமது சமுதாயத்திற்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தும். நம்மையும் சோம்பறிகளோடு சேர்த்துவிடுவார்கள்!

இந்த ஆண்டு நமக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்!

Saturday, 31 December 2022

வலிகளும் வேதனைகளும்!


இன்றோடு  இந்த 2022-ம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. 

இந்த ஆண்டு பல வலிகளையும், வேதனைகளையும் சுமந்த ஆண்டு என்று சொல்லலாம். உலகளவில்  பார்க்கப்போனால் இயற்கையினால் ஏற்பட்ட பல சேதங்கள், உயிர்ச் சேதங்கள் நினைவுக்குள் வருகின்றன.

புயற் காற்றினால் சேதங்கள், வெள்ளத்தினால் சேதங்கள்  பல நாடுகளில், ஏன், நமது நாட்டிலும் கூட  சேதங்கள். இயற்கையின்  சீற்றத்திலிருந்து   எந்த ஒரு நாடும் தப்பித்ததாகத் தெரியவில்லை.

இன்னொரு பக்கம் கோரோனா தொற்று, குரங்கு அம்மை போன்ற நோய்களின்  தாக்கம்   ஒரு சில நாடுகளில் அதன் தாக்கம் குறைந்திருந்தாலும் இன்னும் ஒரு சில நாடுகளில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டதும் உண்மை.  கொரோனாவின் தாயகம் என்று நம்மால் குற்றஞ்சாட்டபட்ட  சீனா  இப்போது கொரோனாவின் அபரிதமான  தாக்குதலால் தடுமாறிக் கொண்டிருக்கிறது!   வருகிற புதிய ஆண்டுக்கும் இந்த பாதிப்பு  தொடரும் என்றே தோன்றுகிறது.

நமது நாட்டிலும் கொரோனா தொற்று  பரவுகிறது என்று பரவலாகப் பேசப்படுகிறது. ஆக,  கோரொனா தொற்று  அடுத்த ஆண்டுக்கும்  நம்மிடையே  குடிகொண்டிருக்கும் என நம்ப இடமிருக்கிறது!  அடுத்த ஆண்டும் தொடரும் சாத்தியமும் உண்டு.

மலேசியாவைப் பொறுத்தவரை  இந்த ஆண்டு நடைப்பெற்ற பொதுத் தேர்தல் மிக முக்கியமான நிகழ்வு. பொதுத்தேர்தலில் சென்ற தேர்தலைவிட  குறைவான இடங்களையே நம்பிக்கைக் கூட்டணி இந்த முறை பெற்றாலும் "ஒற்றுமை அரசாங்கம்" அமைத்து   அன்வார் இப்ராகிம்  அரியாசனத்தில்  அமர்ந்திருக்கிறார். அரியாசனம் அவருடைய நீண்ட நாள் கனவு  மட்டும் அல்ல  மக்களின் கனவாகவும் அது இருந்தது. அதுவும் குறிப்பாக  இந்தியர்களின்   கனவாகவும் அது தான் இருந்தது.

ஆனாலும் இந்தியர்களிடையே ஒரு சில தவிர்க்க முடியாத வலிகளும் உண்டு. ஆமாம், இந்தியர்களுக்கென்று ஒரு தனி பிரிவு அமைத்து அதனை பிரதமர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் என  நாம் நினைத்தோம். அப்படித்தான் தனது தேர்தல் பரப்புரைகளில் அவர் கூறி வந்தார். ஆனால் அது ஏனோ அதாவது 'இந்தியர் பிரிவு'  மீண்டும் தேசிய முன்னணி கையில் போய்விட்டதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தியர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தவர்களின் கைகளுக்கே மீண்டுமா? என்கின்ற ஆதங்கம்  எழத்தான்  செய்கிறது.

எது எப்படி இருந்தாலும் வருகிற 2023 ஆண்டு நமக்கும்,  நமது சமுதாயத்திற்கும், உலக மக்கள் அனைவருக்கும் வெற்றிகரமான ஆண்டாக அமைய  இறைவனை வேண்டுவோம்!

Friday, 30 December 2022

பழிவாங்கும் நடவடிக்கையே!

 

நமது நாட்டு துணைப்பிரதமர், ஸாஹிட் ஹாமிடி அவர்களால் இந்தியர் விவகாரங்களுக்காக,  அவருக்கு வேண்டிய யாரோ ஒருவரை நியமித்து அதன் மூலம் இந்தியர்களின் வாழ்க்கையைப் பிரகாசிக்க நினைத்ததற்கு  நன்றி! நன்றி!

ஆனால் இந்திய சமுதாயம், துணைப்பிரதமர் தனது அமைச்சின் கீழ் இந்தியர் விவகாரம் ஒன்றினை அமைத்து  அதன் மூலம் இந்திய சமுதாயத்தை முன்னேற்றலாம் என்பதே தவறான கொள்கை என்பதை அவர் உணர வேண்டும்.

ஸாஹிட் ஹமிடி அவர்கள் இன்றைய அம்னோவின் தலைவர். அது மட்டும் அல்ல. தேசிய முன்னணியின் தலைவர்..அவரது கட்சியின் ஆட்சியில் தான் இந்தியர்களின் முன்னேற்றம் என்பது கடைசிகாலத்தில்  மிகவும் பின்நோக்கிப் போனது! அதன் பயனாகத்தான் தேசிய முன்னணியும் ம.இ.கா.வும்  கடந்த இரண்டு போதுத்தேர்தல்களிலும் பலத்த அடிவாங்கின என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இவ்வளவு தெரிந்தும் இந்தியர்களின்  விவகாரங்களை மீண்டும் தேசிய முன்னணியிடம் ஒப்படைப்பது  என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது! தேசிய முன்னணியும் ம.இ.காவும் அழிவு சக்திகள்!  தேசிய முன்னணியில்  உள்ள அம்னோ மலாய்க்காரர்களின் பெயரைச்சொல்லி தலைவர்கள் தான் வயிறு வளர்த்தார்கள்! அதே போல ம.இ.கா. தலைவர்களும் தங்களைத்தான் கவனித்துக் கொண்டார்களே தவிர மனசாட்சியில்லாமல் இந்தியர்களைப் புறக்கணித்தார்கள்! ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று தான்  இன்னும்  கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!

இந்த நேரத்தில் நாம் சுட்டிக்காட்டுவதெல்லாம்  தொடர்ந்தாற் போல இந்தியர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த ஒரு கட்சியை நாம் எப்படி அவர்கள் இனிமேல் உதவுவார்கள்  என்று ஏற்றுக்கொள்வது?  அறுபது ஆண்டுகால துரோகத்தை  அப்படியே தலைகீழ் மாற்றி அமைத்து விடுவார்களா?

இல்லை! அவர்கள் இந்தியர்களை மன்னிக்கமாட்டார்கள்! ஏன்?  நம்பிக்கைக் கூட்டணிக்கு இந்தியர்களின் வாக்கு எண்ணிக்கை எண்பத்தைந்து  விழுக்காடு என்று சொல்லப்படுகிறது. இது சாதாரண விஷயம் அல்ல!   இது ஒன்றே போதும்.  தேசிய முன்னணிக்கு இந்தியர்களின்  மேல் எந்த நல்லெண்ணமும்  வர வாய்ப்பில்லை!  இந்தியர்களை இன்னும் கீழ் நோக்கிப் போவதற்கான வேலைகளைத்தான் செயவார்கள்!

நம்மைப் பொறுத்தவரை தேசிய முன்னணி,  துணைப்பிரதமர்  அமைச்சின்  கீழ் இந்தியர் விவகாரங்கள் அமையுமானால்  நிச்சயமாக அது இந்தியர்களுக்கு நன்மை பயக்காது. இருப்பதும் கைவிட்டுப் போகும்!

அம்னோ நிச்சயமாக இந்தியர்களைப் பழி வாங்கத்தான் நினைக்கும்! அது சந்தேகமில்லை! ம.இ.கா. எப்போதும் போல கண்டு கொள்ளாது!

இது இந்தியர்களைப் பழி வாங்கும் நடவடிக்கையே!