இன்றோடு இந்த 2022-ம் ஆண்டு முடிவுக்கு வருகிறது.
இந்த ஆண்டு பல வலிகளையும், வேதனைகளையும் சுமந்த ஆண்டு என்று சொல்லலாம். உலகளவில் பார்க்கப்போனால் இயற்கையினால் ஏற்பட்ட பல சேதங்கள், உயிர்ச் சேதங்கள் நினைவுக்குள் வருகின்றன.
புயற் காற்றினால் சேதங்கள், வெள்ளத்தினால் சேதங்கள் பல நாடுகளில், ஏன், நமது நாட்டிலும் கூட சேதங்கள். இயற்கையின் சீற்றத்திலிருந்து எந்த ஒரு நாடும் தப்பித்ததாகத் தெரியவில்லை.
இன்னொரு பக்கம் கோரோனா தொற்று, குரங்கு அம்மை போன்ற நோய்களின் தாக்கம் ஒரு சில நாடுகளில் அதன் தாக்கம் குறைந்திருந்தாலும் இன்னும் ஒரு சில நாடுகளில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டதும் உண்மை. கொரோனாவின் தாயகம் என்று நம்மால் குற்றஞ்சாட்டபட்ட சீனா இப்போது கொரோனாவின் அபரிதமான தாக்குதலால் தடுமாறிக் கொண்டிருக்கிறது! வருகிற புதிய ஆண்டுக்கும் இந்த பாதிப்பு தொடரும் என்றே தோன்றுகிறது.
நமது நாட்டிலும் கொரோனா தொற்று பரவுகிறது என்று பரவலாகப் பேசப்படுகிறது. ஆக, கோரொனா தொற்று அடுத்த ஆண்டுக்கும் நம்மிடையே குடிகொண்டிருக்கும் என நம்ப இடமிருக்கிறது! அடுத்த ஆண்டும் தொடரும் சாத்தியமும் உண்டு.
மலேசியாவைப் பொறுத்தவரை இந்த ஆண்டு நடைப்பெற்ற பொதுத் தேர்தல் மிக முக்கியமான நிகழ்வு. பொதுத்தேர்தலில் சென்ற தேர்தலைவிட குறைவான இடங்களையே நம்பிக்கைக் கூட்டணி இந்த முறை பெற்றாலும் "ஒற்றுமை அரசாங்கம்" அமைத்து அன்வார் இப்ராகிம் அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அரியாசனம் அவருடைய நீண்ட நாள் கனவு மட்டும் அல்ல மக்களின் கனவாகவும் அது இருந்தது. அதுவும் குறிப்பாக இந்தியர்களின் கனவாகவும் அது தான் இருந்தது.
ஆனாலும் இந்தியர்களிடையே ஒரு சில தவிர்க்க முடியாத வலிகளும் உண்டு. ஆமாம், இந்தியர்களுக்கென்று ஒரு தனி பிரிவு அமைத்து அதனை பிரதமர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் என நாம் நினைத்தோம். அப்படித்தான் தனது தேர்தல் பரப்புரைகளில் அவர் கூறி வந்தார். ஆனால் அது ஏனோ அதாவது 'இந்தியர் பிரிவு' மீண்டும் தேசிய முன்னணி கையில் போய்விட்டதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தியர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தவர்களின் கைகளுக்கே மீண்டுமா? என்கின்ற ஆதங்கம் எழத்தான் செய்கிறது.
எது எப்படி இருந்தாலும் வருகிற 2023 ஆண்டு நமக்கும், நமது சமுதாயத்திற்கும், உலக மக்கள் அனைவருக்கும் வெற்றிகரமான ஆண்டாக அமைய இறைவனை வேண்டுவோம்!
No comments:
Post a Comment