Friday, 31 March 2023

DAP முதலாளிகள் ஒதுக்குகின்றனரா!

 


பொதுவாக அரசியல் தலைமைத்துவம் தனது கட்சியில் உள்ளவர்கள் கொஞ்சம் அதிகம் பேசினால் அவர்களுக்குப் பிடிப்பதில்லை.

ஆனாலும் தனது கட்சியில் உள்ள இந்தியர்கள் வழக்கறிஞர்களாக இருக்க வேண்டும்  என்பதில் அக்கறை காட்டுவது இயல்பாகவே இருக்கும். காரணம் நாடாளுமன்றம், சட்டமன்ற அவைகளில்  பேச வேண்டுமென்றால்  வழக்கறிஞர்கள் சிறப்பாகவே செயல்படுவார்கள்  என்பதில் கருத்து வேறுபாடில்லை.

பினாங்கு துணை முதல்வர்  இராமசாமி கொஞ்சம் மாறுபட்டவர். அவர் வழக்கறிஞர் அல்ல. அவர் பேராசிரியர். எல்லாகாலங்களிலும் மாணவர்களுக்குப் பாடம் எடுத்தவர்.  விரிவுரையாளராக இருந்தவர். தனது கருத்துகளை அன்றும் இன்றும் என்றும் பத்திரிக்கைகளில் எழுதி வருபவர். சுதந்திரமான போக்கு உடையவர்.  அவருடைய கருத்துக்களைச் சொல்ல  எந்த தயக்கமும் இல்லாதவர். அவரை ஒரு கட்சிக்குள் அடக்கிவிட முடியாது என்பது தான்  இங்கு முக்கியமாக  கவனிக்க வேண்டியது.

"நல்லதைச் செய்வேன்! முடிந்ததையும் செய்வேன்!" என்பது தான் அவரது கொள்கையாக இருக்க வேண்டும். அதுவும் தமிழர் சமுதாயத்திற்குத் தன்னாலான அனைத்தும் செய்பவர்.  ஒருவர் நல்லதைச் செய்யும்போது அவரை ஒதுக்குவது என்பது மலேசிய அரசியலில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. கெட்டவர்களைக் கேட்க ஆளில்லை. நல்லவர்களுக்குச் சோதனைகள் தொடர்ந்து வரும்.

நாம் ஏன் பேராசிரியர் இராமசாமி மீது அக்கறை காட்டுகிறோம் என்றால் பினாங்கு மாநிலத்தில் உள்ள தமிழர் சமுதாயத்திற்கு நல்ல பல சேவைகளை ஆற்றி வருகிறார் என்பதால் தான்.  வேலை வாய்ப்புகள், தமிழ்ப்பள்ளிகள், தமிழர் நலன் போன்றவற்றின் மீது அவர் அக்கறை செலுத்துகிறார். அது தான் நமக்கு வேண்டும். தமிழர்களுக்கான தேவைகள் என்னவென்று தேர்ந்தெடுத்து அதற்குத் தீர்வு காண முயல்கிறார். 

ஆனால் அங்குள்ள உள்ளூர் அரசியல் நமக்குத் தெரியாது.  அங்குள்ள ஒரு சில தமிழர்கள் ஏன் அவர் மீது வெறுப்புணர்ச்சியோடு  கல்லெறிகிறார்கள்  என்பது  நமக்குப் புரியவில்லை.  வெளி மாநிலங்களிலிருந்து  பார்க்கும் போது  நமக்கு இப்படி ஒரு பிரதிநிதி இல்லையே என்பது தான் நமக்கு ஏக்கமாக இருக்கிறது. ஆனால் அங்குள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியவில்லை.

எப்படியிருந்தாலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பேராசிரியர் இராமசாமி போட்டியிடுவார் என்பதாகத்தான் ஜ.செ.க. கூறுகிறது. அதுவும் நமக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!

Thursday, 30 March 2023

பேச்சு வார்த்தையே சிறந்தது!

 

வேலை நிறுத்தம் என்பது நமது நாட்டிற்குப் புதிதல்ல. புதிய வார்த்தையும் அல்ல!

எத்தனையோ வேலை நிறுந்துங்கள் நாட்டில் நடந்திருக்கின்றன. ஏன் நான் வேலை  செய்த காலத்திலுங்கூட  நானே வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். அது தவறு என்று சொல்லவில்லை.  

ஆனால் ஒரு சில துறைகளில்   வேலை நிறுத்தம் செய்ய முடியாது.  அது நாட்டு நலனுக்கு எதிரானது. பேச்சு வார்த்தை தான் சிறந்த தீர்வு. குறிப்பாக இராணுவம், காவல்துறை  - அவர்களால் வேலை நிறுத்தம் செய்ய இயலாது.  இங்கு மட்டும் அல்ல உலகில் எல்லாநாடுகளிலும் அதே நிலை தான். அதனால் தான் அவர்களுக்குச் சம்பள உயர்வு  அல்லது வேறு வகையான உயர்வாக இருந்தாலும் பேச்சு வார்த்தைகள் மூலமே முடித்துக் கொள்ளுகிறார்கள்.

இப்போது நமது நாட்டிலும்  அடிக்கடி வேலை நிறுத்தம் பற்றி ஒரு துறையினர் பேசுவதை நாம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் மருத்துவத் துறையினர். அவர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடியாது என்பது ஒருபுறமிருக்க  பயமுறுத்தல் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த மருத்துவர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்கள்.

நமக்கு அவர்களின் பிரச்சனை என்பது ஏதோ மேலோட்டமாக ஒன்று இரண்டு தெரியுமே தவிர  முழுமையாக இல்லை. அதைத் தெரிந்து  என்ன ஆகப்போகிறது என்கிற அலட்சியம் நமக்கு அதிகம். அவர்கள் என்னவோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதாகத்தான் நாம் நினைக்கிறோம். 

அது அப்படி அல்ல.  வேலை நிறுத்தம் செய்தால் தான் அது நமக்குப் புரிய வரும்! அதுவும் நாம் மருத்துவமனைகளைப் பயன்படுத்துபவர்களாக இருந்தால்  நமது நிலை நாறிவிடும்! பல சிக்கல்கள் உருவாகிவிடும்.  ஆபத்து அவசரம் என்று மருத்துவமனைகளை நாடும் போது  வேலை நிறுத்தம் என்றால் ஒரு  நோயாளி என்ன செய்ய முடியும்? சிகிச்சை பெறுவது எப்படி? நோயாளியின் நிலை தான் என்ன?  ஒரு சிலர் ஆபத்தான, அவசரமான சிகிச்சை பெற வேண்டிய சூழலில் இருப்பார்காள். இவர்களை யார் காப்பாற்றுவது?

இது ஒரு சிக்கலான பிரச்சனை. நம்மால் அதன் கடுமையை உணர முடியாது. அதனால் தான் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்று அனைவரும் சொல்லுகிறார்கள். அரசாங்கமும் அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இழுத்துக் கொண்டே போவதில் புண்ணியமில்லை.

கட்டம் கட்டமாக பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும். என்பதாக பிரதமர் உறுதி அளித்திருக்கிறார். மருத்துவர்கள் அதனையும் காதில் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்பது தான் பொதுமக்களின் கோரிக்கையும் கூட.

எது எப்படி இருப்பினும் பேச்சு வார்த்தையே சிறந்த வழி!

Wednesday, 29 March 2023

தீர்வு கிடைக்கும் என நம்புவோம்!

 

சுங்கை புலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சுக்கு  விடுத்த கோரிக்கையை நாமும் அதற்கான ஆதரவு கரம் நீட்டுகிறோம்.

இந்தப் பிரச்சனை என்பது புதிது என்று சொல்வதற்கில்லை. பழைய பிரச்சனை  தான். ஆனால் முந்தைய அரசாங்கம் அதற்கு ஆதரவு காட்டவில்லை. காரணம் இந்தப் பிரச்சனையில் முக்கியமாக இந்தியர்களே அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதால்  அவர்கள்  அக்கறை காட்டவில்லை  என்பதிலே ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.  ம.இ.கா.வும் அவர்களோடு சேர்ந்து கொண்டதே தவிர குரல் எழுப்பி தீர்வு காண முயற்சி செய்யவில்லை.

இது யாருக்கும் தெரியாத ஒரு பிரச்சனை அல்ல. அனைவருக்கும் தெரியும்  ஆனால் நம்மால் ஒன்று செய்ய இயலவில்லை. நீல அடையாளக்கார்டு, குடியுரிமை பிரச்சனை தான். அந்தப் பிரச்சனையைத் தான் டத்தோ ரமணன் நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார். இதற்கு முன்னரும் நாடாளுமன்றத்தில் ம.இ.கா. வினரால் எழுப்பப்பட்டிருக்கிறது.  ஒன்றும் ஆகவில்லை.

இந்த முறை ஆளுங்கட்சி உறுப்பினரால் இந்தப் பிரச்சனை எழுப்பப்பட்டிருக்கிறது. அப்படி என்ன  பெரிய வித்தியாசத்தைக் காணப்போகிறோம்? ஒன்றும் தெரியவில்லை! ஆயினும்  'நடக்கும்' என கொஞ்சம் நேர்மறையாகவே சிந்திப்போமே! என்ன கெட்டுவிடப் போகிறது!  ஏனெனில் இப்போது புதிய அரசாங்கம்  தானே. சொல்ல முடியாது. நல்லது நடக்கலாம்! 

குடியுரிமை பிரச்சனை என்பது இந்தியர்களின் நீண்ட நாளைய பிரச்சனை. அதற்கான முடிவு தான் எட்ட முடியவில்லை. ஒரு சில தவறுகளினால் வாழ்நாள் பூராவும் நாட்டில் குடியுரிமை கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். வேலை கிடைக்கவில்லை. தங்களது குடும்பங்களைக் கவனிக்க முடியவில்லை. மேலும் அவர்களின் குழந்தைகளும் அதே பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர். இது தொடர்கதையாகவே போய்க் கொண்டிருக்கிறது. அதற்கான முடிவை இப்போது எட்டாவிட்டால்  பின்னர் எட்ட வாய்ப்பில்லாமலே போய்விடும்.

அதனால் தான் இந்தப் பிரச்சனையை இப்போது டத்தோ ரமணன் நாடாளுமன்றத்தில பேசியதை முக்கியமாகக் கருதுகிறோம். இப்போது நடக்கும் ஆட்சியில் தான் அதற்கான தீர்வு காணமுடியும் என்பது தான் நமது எண்ணமாக இருக்கிறது. இந்த நேரத்தை விட்டால் பின்னர் என்ன ஆகும் என்று சொல்ல முடியாது.  நம்மிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் இப்போது இந்த ஒற்றுமை அரசாங்கத்தைத்தான் நாம் நம்பியிருக்கிறோம்.

நடப்பு அரசாங்கம் இதற்கு ஒரு முடிவு காணும் என நம்புகிறோம்!