Thursday 30 March 2023

பேச்சு வார்த்தையே சிறந்தது!

 

வேலை நிறுத்தம் என்பது நமது நாட்டிற்குப் புதிதல்ல. புதிய வார்த்தையும் அல்ல!

எத்தனையோ வேலை நிறுந்துங்கள் நாட்டில் நடந்திருக்கின்றன. ஏன் நான் வேலை  செய்த காலத்திலுங்கூட  நானே வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். அது தவறு என்று சொல்லவில்லை.  

ஆனால் ஒரு சில துறைகளில்   வேலை நிறுத்தம் செய்ய முடியாது.  அது நாட்டு நலனுக்கு எதிரானது. பேச்சு வார்த்தை தான் சிறந்த தீர்வு. குறிப்பாக இராணுவம், காவல்துறை  - அவர்களால் வேலை நிறுத்தம் செய்ய இயலாது.  இங்கு மட்டும் அல்ல உலகில் எல்லாநாடுகளிலும் அதே நிலை தான். அதனால் தான் அவர்களுக்குச் சம்பள உயர்வு  அல்லது வேறு வகையான உயர்வாக இருந்தாலும் பேச்சு வார்த்தைகள் மூலமே முடித்துக் கொள்ளுகிறார்கள்.

இப்போது நமது நாட்டிலும்  அடிக்கடி வேலை நிறுத்தம் பற்றி ஒரு துறையினர் பேசுவதை நாம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் மருத்துவத் துறையினர். அவர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடியாது என்பது ஒருபுறமிருக்க  பயமுறுத்தல் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த மருத்துவர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்கள்.

நமக்கு அவர்களின் பிரச்சனை என்பது ஏதோ மேலோட்டமாக ஒன்று இரண்டு தெரியுமே தவிர  முழுமையாக இல்லை. அதைத் தெரிந்து  என்ன ஆகப்போகிறது என்கிற அலட்சியம் நமக்கு அதிகம். அவர்கள் என்னவோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதாகத்தான் நாம் நினைக்கிறோம். 

அது அப்படி அல்ல.  வேலை நிறுத்தம் செய்தால் தான் அது நமக்குப் புரிய வரும்! அதுவும் நாம் மருத்துவமனைகளைப் பயன்படுத்துபவர்களாக இருந்தால்  நமது நிலை நாறிவிடும்! பல சிக்கல்கள் உருவாகிவிடும்.  ஆபத்து அவசரம் என்று மருத்துவமனைகளை நாடும் போது  வேலை நிறுத்தம் என்றால் ஒரு  நோயாளி என்ன செய்ய முடியும்? சிகிச்சை பெறுவது எப்படி? நோயாளியின் நிலை தான் என்ன?  ஒரு சிலர் ஆபத்தான, அவசரமான சிகிச்சை பெற வேண்டிய சூழலில் இருப்பார்காள். இவர்களை யார் காப்பாற்றுவது?

இது ஒரு சிக்கலான பிரச்சனை. நம்மால் அதன் கடுமையை உணர முடியாது. அதனால் தான் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்று அனைவரும் சொல்லுகிறார்கள். அரசாங்கமும் அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இழுத்துக் கொண்டே போவதில் புண்ணியமில்லை.

கட்டம் கட்டமாக பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும். என்பதாக பிரதமர் உறுதி அளித்திருக்கிறார். மருத்துவர்கள் அதனையும் காதில் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்பது தான் பொதுமக்களின் கோரிக்கையும் கூட.

எது எப்படி இருப்பினும் பேச்சு வார்த்தையே சிறந்த வழி!

No comments:

Post a Comment