பொதுவாக அரசியல் தலைமைத்துவம் தனது கட்சியில் உள்ளவர்கள் கொஞ்சம் அதிகம் பேசினால் அவர்களுக்குப் பிடிப்பதில்லை.
ஆனாலும் தனது கட்சியில் உள்ள இந்தியர்கள் வழக்கறிஞர்களாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டுவது இயல்பாகவே இருக்கும். காரணம் நாடாளுமன்றம், சட்டமன்ற அவைகளில் பேச வேண்டுமென்றால் வழக்கறிஞர்கள் சிறப்பாகவே செயல்படுவார்கள் என்பதில் கருத்து வேறுபாடில்லை.
பினாங்கு துணை முதல்வர் இராமசாமி கொஞ்சம் மாறுபட்டவர். அவர் வழக்கறிஞர் அல்ல. அவர் பேராசிரியர். எல்லாகாலங்களிலும் மாணவர்களுக்குப் பாடம் எடுத்தவர். விரிவுரையாளராக இருந்தவர். தனது கருத்துகளை அன்றும் இன்றும் என்றும் பத்திரிக்கைகளில் எழுதி வருபவர். சுதந்திரமான போக்கு உடையவர். அவருடைய கருத்துக்களைச் சொல்ல எந்த தயக்கமும் இல்லாதவர். அவரை ஒரு கட்சிக்குள் அடக்கிவிட முடியாது என்பது தான் இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது.
"நல்லதைச் செய்வேன்! முடிந்ததையும் செய்வேன்!" என்பது தான் அவரது கொள்கையாக இருக்க வேண்டும். அதுவும் தமிழர் சமுதாயத்திற்குத் தன்னாலான அனைத்தும் செய்பவர். ஒருவர் நல்லதைச் செய்யும்போது அவரை ஒதுக்குவது என்பது மலேசிய அரசியலில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. கெட்டவர்களைக் கேட்க ஆளில்லை. நல்லவர்களுக்குச் சோதனைகள் தொடர்ந்து வரும்.
நாம் ஏன் பேராசிரியர் இராமசாமி மீது அக்கறை காட்டுகிறோம் என்றால் பினாங்கு மாநிலத்தில் உள்ள தமிழர் சமுதாயத்திற்கு நல்ல பல சேவைகளை ஆற்றி வருகிறார் என்பதால் தான். வேலை வாய்ப்புகள், தமிழ்ப்பள்ளிகள், தமிழர் நலன் போன்றவற்றின் மீது அவர் அக்கறை செலுத்துகிறார். அது தான் நமக்கு வேண்டும். தமிழர்களுக்கான தேவைகள் என்னவென்று தேர்ந்தெடுத்து அதற்குத் தீர்வு காண முயல்கிறார்.
ஆனால் அங்குள்ள உள்ளூர் அரசியல் நமக்குத் தெரியாது. அங்குள்ள ஒரு சில தமிழர்கள் ஏன் அவர் மீது வெறுப்புணர்ச்சியோடு கல்லெறிகிறார்கள் என்பது நமக்குப் புரியவில்லை. வெளி மாநிலங்களிலிருந்து பார்க்கும் போது நமக்கு இப்படி ஒரு பிரதிநிதி இல்லையே என்பது தான் நமக்கு ஏக்கமாக இருக்கிறது. ஆனால் அங்குள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியவில்லை.
எப்படியிருந்தாலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பேராசிரியர் இராமசாமி போட்டியிடுவார் என்பதாகத்தான் ஜ.செ.க. கூறுகிறது. அதுவும் நமக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!
No comments:
Post a Comment