Wednesday 29 March 2023

தீர்வு கிடைக்கும் என நம்புவோம்!

 

சுங்கை புலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சுக்கு  விடுத்த கோரிக்கையை நாமும் அதற்கான ஆதரவு கரம் நீட்டுகிறோம்.

இந்தப் பிரச்சனை என்பது புதிது என்று சொல்வதற்கில்லை. பழைய பிரச்சனை  தான். ஆனால் முந்தைய அரசாங்கம் அதற்கு ஆதரவு காட்டவில்லை. காரணம் இந்தப் பிரச்சனையில் முக்கியமாக இந்தியர்களே அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதால்  அவர்கள்  அக்கறை காட்டவில்லை  என்பதிலே ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.  ம.இ.கா.வும் அவர்களோடு சேர்ந்து கொண்டதே தவிர குரல் எழுப்பி தீர்வு காண முயற்சி செய்யவில்லை.

இது யாருக்கும் தெரியாத ஒரு பிரச்சனை அல்ல. அனைவருக்கும் தெரியும்  ஆனால் நம்மால் ஒன்று செய்ய இயலவில்லை. நீல அடையாளக்கார்டு, குடியுரிமை பிரச்சனை தான். அந்தப் பிரச்சனையைத் தான் டத்தோ ரமணன் நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார். இதற்கு முன்னரும் நாடாளுமன்றத்தில் ம.இ.கா. வினரால் எழுப்பப்பட்டிருக்கிறது.  ஒன்றும் ஆகவில்லை.

இந்த முறை ஆளுங்கட்சி உறுப்பினரால் இந்தப் பிரச்சனை எழுப்பப்பட்டிருக்கிறது. அப்படி என்ன  பெரிய வித்தியாசத்தைக் காணப்போகிறோம்? ஒன்றும் தெரியவில்லை! ஆயினும்  'நடக்கும்' என கொஞ்சம் நேர்மறையாகவே சிந்திப்போமே! என்ன கெட்டுவிடப் போகிறது!  ஏனெனில் இப்போது புதிய அரசாங்கம்  தானே. சொல்ல முடியாது. நல்லது நடக்கலாம்! 

குடியுரிமை பிரச்சனை என்பது இந்தியர்களின் நீண்ட நாளைய பிரச்சனை. அதற்கான முடிவு தான் எட்ட முடியவில்லை. ஒரு சில தவறுகளினால் வாழ்நாள் பூராவும் நாட்டில் குடியுரிமை கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். வேலை கிடைக்கவில்லை. தங்களது குடும்பங்களைக் கவனிக்க முடியவில்லை. மேலும் அவர்களின் குழந்தைகளும் அதே பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர். இது தொடர்கதையாகவே போய்க் கொண்டிருக்கிறது. அதற்கான முடிவை இப்போது எட்டாவிட்டால்  பின்னர் எட்ட வாய்ப்பில்லாமலே போய்விடும்.

அதனால் தான் இந்தப் பிரச்சனையை இப்போது டத்தோ ரமணன் நாடாளுமன்றத்தில பேசியதை முக்கியமாகக் கருதுகிறோம். இப்போது நடக்கும் ஆட்சியில் தான் அதற்கான தீர்வு காணமுடியும் என்பது தான் நமது எண்ணமாக இருக்கிறது. இந்த நேரத்தை விட்டால் பின்னர் என்ன ஆகும் என்று சொல்ல முடியாது.  நம்மிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் இப்போது இந்த ஒற்றுமை அரசாங்கத்தைத்தான் நாம் நம்பியிருக்கிறோம்.

நடப்பு அரசாங்கம் இதற்கு ஒரு முடிவு காணும் என நம்புகிறோம்!

No comments:

Post a Comment